பாமக கெளரவத் தலைவர் ஜிகே மணியை கட்சியில் சேர்க்க அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவர் வேறு கட்சியில் இணைய ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக ஜிகே மணியின் மகன் தமிழ்க்குமரன் பாதையில் காங்கிரஸ் கட்சி பக்கம் செல்லலாமா என்பதை தீவிரமாக ஆலோசிப்பதாக அவரின் ஆதரவாளர்கள் பேச வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் பாமகவில் நிலவி வந்த உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால், பாமகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் பாமக இணைந்ததில் ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்கள் மட்டும் சோகம் அடைந்துள்ளனர்.
ஏனென்றால் சட்டசபைத் தேர்தலுக்கு முன் ராமதாஸுக்காக ஏராளமான செலவுகளை செய்தனர். இதனால் அன்புமணியையும் பகைத்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. குறிப்பாக பாமக முன்னாள் எம்எல்ஏ அருள், ஜிகே மணி உள்ளிட்டோர் அதிருப்தியில் இருக்கின்றனர். இதில் அருள் நேரடியாகவே அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது என்று ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார்.
இன்னொரு பக்கம் ஜிகே மணி தனது ஆதரவாளர்களிடம் புலம்ப தொடங்கி இருக்கிறார். அன்புமணியுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போதும், அவர் ஜிகே மணியை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார். குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தியவர் என்று ஜிகே மணிக்காக ஆதரவாக பேச வந்தவர்களிடம் பேசி இருக்கிறார்.
இந்த விவகாரம் ஜிகே மணிக்கு தெரிய வந்திருக்கிறது. இதன்பின் ஜிகே மணி இனி பாமகவில் இருக்க முடியாது என்று முடிவுக்கு வந்துள்ளார். திமுக பக்கம் இருந்து ஜிகே மணிக்கு அழைப்பு வந்தாலும், அவருக்கு அந்தப் பக்கம் செல்ல விருப்பம் இல்லை. இதனால் மகன் ஜிகேஎம் தமிழ்க்குமரன் வழியில் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த முடிவு தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக இறுதி முடிவை எடுத்து, காங்கிரஸ் தலைமையுடன் பேச வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இவரைத் தொடர்ந்து ராமதாஸ் ஆதரவாளர்கள் பலரும் காங்கிரஸ் பக்கம் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.