கரூர் செல்லும் விஜய்.. 32 பேருக்கு அரசுப் பணி!

By செய்திப்பிரிவு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படிஅயில் அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். நாளை முதல்வர் விஜய் கரூர் செல்ல உள்ள நிலையில், பல்வேறு அரசு துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 41 பேர் உ*யிரிழந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தவெக தலைவர் விஜய்யிடமும் 2 நாட்கள் சிபிஐ விசாரணையை நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பின் விஜய் கரூர் பக்கமே செல்லவில்லை.

சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட விஜய் கரூர் செல்லவில்லை. இதன்பின் முதல்வரான விஜய், தற்போது முதல்முறையாக கரூர் செல்கிறார். ஏற்கனவே நாளை (ஜூலை 10) கரூர் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை கட்சியினரும், அரசு அதிகாரிகளும் மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணிக்கான ஆணையை விஜய் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் நாளை கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை சந்திக்கும் விஜய், முதற்கட்டமாக 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான ஆணையை வழங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பல்வேறு அரசு துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டவுள்ளார். அதேபோல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

கரூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அடுத்த 2 நாட்களில் தவெகவில் ஐக்கியமானார். கரூரில் இடைத்தேர்தல் வரவுள்ளதால், முதல்வர் விஜய் கரூர் பயணம் செல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மதியழகன் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE