முதல்வர் விஜய் திணறுவது தெரிஞ்சிடும்னு சட்டசபை ‘லைவ்’ கட்? - எச்.ராஜா கேள்வி

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை நேரலையை நிறுத்தியதற்கு முதல்வரின் திணறல் வெளிப்பட்டு விடும் எனும் பயம்தான் காரணமா? என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கத்திரிக்காய் முத்தினால கடைக்கு வந்தே தீரும்.. அப்புறம் எதற்கு இந்த ரகசிய செட்டிங் எல்லாம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி, முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய், தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாகவே அளித்திருந்தார். ஆனால் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நேரலை திடீரென நிறுத்தப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டப்பேரவை நேரலையை நிறுத்தியதற்கு முதல்வரின் திணறல் வெளிப்பட்டு விடும் எனும் பயம்தான் காரணமா? 'எங்களது ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் மக்கள் அனைவரும் காணும்படியாக நேரலை செய்வோம்...

நாங்கள் அவ்வளவு வெளிப்படையாக்கும்' என தற்பெருமை பேசி வந்த தவெக அரசு இன்று மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஜோசஃப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பேசுவது வரை மட்டுமே நேரலை செய்தார்கள். அதன் பிறகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்கத் துவங்கியதும் நேரலை நிறுத்தப்பட்டது.

பேப்பரில் எழுதி வைத்த தீர்மானங்கள் வரை மட்டும் தான் முதல்வரால் ஓரளவு சமாளித்து படிக்க முடியும்... மற்றபடி எதிர்கட்சிகள் எழுப்பும் தடாலடி திடீர் கேள்விகளுக்கு தானாக பதிலளிக்க முடியாமல் முதல்வர் திணறுவார் எனும் பயம் காரணமாக இந்த நேரலை நிறுத்தப்பட்டதா? மக்கள் காணமுடியா விட்டாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் முதல்வரின் திணறலும், தட்டுத் தடுமாற்றங்களும் வெளி வரத்தானே செய்யும்? கத்திரிக்காய் முத்தினால கடைக்கு வந்தே தீரும் என்பது போல சட்டமன்றத்தில் நடப்பவற்றை முதல்வர் இரும்புத்திரையே போட்டு மறைத்தாலும் ஜனநாயகத்தில் அவை அன்றே வெளிவந்து விடும். அப்புறம் எதற்கு இந்த ரகசிய செட்டிங் எல்லாம்?

ஆஹா முதல்வர்... ஒஹோ முதல்வர் எனும் பிம்பங்களை கட்டமைத்து மட்டுமே ஒரு அரசாங்கத்தை ஆக்கபூர்வமாக நடத்தி விட முடியாது. அவ்வப்போது மட்டுமே வசனங்களை படித்து ஒப்பிக்க சட்டமன்றம் ஒன்றும் சினிமா காட்சி கிடையாது. அன்றாடம் மக்களை, அவர் தம் உணர்வுகளை, சுற்றிலும் நடக்கும் செய்திகளை, இடித்துரைக்கும் எதிர்கட்சிகளை உற்று கவனிக்க வேண்டும். உன்னிப்பாய் ஆழ்ந்து சகலமும் படிக்க வேண்டும். அப்போது மட்டும் தான் வலுவாக ஆட்சி செய்ய முடியும்.

எனவே சமாளிப்புகளை தவிர்த்து நிஜமான உள்ளுணர்வோடு உங்களை நிருபித்து ஆட்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்களும் சென்ற ஆட்சியைப் போலவே தமிழகம் காணும் மற்றும் ஒரு பொம்மை முதல்வரே!" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE