அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பார்களா என்ற கேள்வி தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஒளித்துக்கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக த.வெ.க எம்.எல்.ஏ தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனி தொகுதியில், இம்முறை த.வெ.க.,வை சேர்ந்த இளங்கோவன் வெற்றி பெற்றார். திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர். தேவமித்ரா, அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு 5-ம் வகுப்பு வரை படித்தார்.
இதனைத் தொடர்ந்து 6-ம் வகுப்பில் மகளை சேர்ப்பதற்காக திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று எம்.எல்.ஏ., இளங்கோவன், மனைவியுடன் சென்று, மகளை 6-ம் வகுப்பில் சேர்த்துவிட்டார். தலைமை ஆசிரியை இந்திராவிடம், பள்ளிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார். எம் எல் ஏ இளங்கோவன் அப்பள்ளியின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்தது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவரது செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன், இதுபோல ஒவ்வொரு அரச ஊழியர்களும் அரச பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தால். தமிழகம் தங்கமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வு தொடர்பான செய்தியை பகிர்ந்துள்ள புளுசட்டை மாறன் சிறப்பு என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொருவர் இது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு விதைக்கப்பட்ட விதை எம்.எல்.ஏ இளங்கோவன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டு என்றும், அரசு பள்ளிகள் அனைத்தையும் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வித் தரத்திலும் பாதுகாப்பிலும் பயன்படுத்திட வேண்டும் என்றும், இது போன்ற மாற்றம் செயல்பாடு ஏற்பட்டால் தானாக எல்லா துறையும் மாறும் முன்னேறும் அதற்கு இதுவே சான்று என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.