சீனா தனது நாட்டின் இரு பெரும் பாலைவனங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக, வடக்கின் வறண்ட நிலப்பகுதியில் 4,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பல பில்லியன் மரங்களை நட்டுள்ளது. ' Three-North Shelterbelt Programme என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் பசுமைச் சுவர் திட்டம், கோபி மற்றும் தக்லமக்கான் பாலைவனங்களில் இருந்து வீசும் கொடிய மணல் புயல்களைத் தடுப்பதற்காக 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் பொறியியல் திட்டமாக இது கருதப்படுகிறது. இதன் காரணமாக, சீனாவின் காடுகளின் பரப்பளவு 1949-ல் 10 சதவீதமாக இருந்தது, 2024-ல் கிட்டத்தட்ட 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், 2009 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் மணல் புயல்களின் வேகம் ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது.
இருப்பினும், Earth's Future என்ற இதழில் வெளியான புதிய ஆய்வு ஒன்று எதிர்பாராத ஒரு உண்மையைப் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான அளவில் மரங்களை நட்டது, நாட்டின் ஒட்டுமொத்த நீர் சுழற்சியையே மாற்றியமைத்துள்ளது. மரங்கள் தங்களின் இலைகள் வழியாக அதிகப்படியான ஈரப்பதத்தை வளிமண்டலத்தில் வெளியிடுவதால் அது சீனாவின் மழைப்பொழிவு முறையை மாற்றியுள்ளது.
இதனால் சில பகுதிகள் வறண்ட நிலமாகவும், மிகத் தொலைவில் உள்ள சில பகுதிகள் அதிக மழைப்பொழிவு பெறும் இடங்களாகவும் மாறியுள்ளன. கண்டங்களின் அளவில் இயற்கையை மாற்றியமைக்க மனிதர்கள் முயலும்போது, இயற்கை நாம் திட்டமிடாத வழிகளில் எதிர்வினையாற்றுகிறது என்பதை இந்த ஆராய்ச்சி காட்டுகிறது.