பிள்ளைகளுக்காக 16 ஆண்டுகள் மூட்டை தூக்கிய தாய் - உண்மைக்கதை!

By செய்திப்பிரிவு

சீனாவின் ஹூனான் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க வே குயூன் (Wei Guiyun) என்ற தாயின் அர்ப்பணிப்பு மிக்க கதை தற்போது உலகெங்கும் வைரலாகி வருகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டில், தனது 24-ஆவது வயதில் கணவரைப் பிரிந்த வே, தனது இரண்டு வயது மகள் மற்றும் சில மாதங்களே ஆன மகனை வளர்ப்பதற்காகக் கடும் உடலுழைப்பு கோரும் மூட்டை தூக்கும் வேலையைத் தேர்ந்தெடுத்தார்.

கடந்த 16 ஆண்டுகளாகத் தினசரி 25 கிலோகிராம் எடையுள்ள சிமெண்ட் மூட்டைகளை மாடிப்படிகளில் சுமந்து செல்லும் வேலையை அவர் செய்து வருகிறார்.

ஒரு மூட்டைக்கு வெறும் 56 காசுகள் மட்டுமே ஊதியமாகக் கிடைத்த நிலையில், தனது பிள்ளைகளின் பசியைப் போக்கவும் கல்விக்காகவும் ஒரு நாளில் 150 கிலோகிராம் வரை எடையைச் சுமந்து சாதனை படைத்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த வேலை மிகவும் கடினமாக இருந்ததாகவும், காலப்போக்கில் கனமான சுமைகளைத் தூக்கியதால் தனது தசைகள் வலுப்பெற்றுவிட்டதாகவும் வே கூறுகிறார்.
இந்த வேலையின் காரணமாக அவரது உடல் எடை 60 கிலோகிராமிலிருந்து 75 கிலோகிராமாக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் தாய் மூட்டை தூக்கும் வேலையைச் செய்வதைக் கண்டு அவரது பிள்ளைகள் சங்கடப்பட்டாலும், தற்போது அவரது தியாகத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.

தன்னைப் போன்ற உழைக்கும் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் "Sister Yun the Porter" என்ற பெயரில் சமூக ஊடகக் கணக்கை வே தொடங்கினார்.

அதில் அவர் பதிவிடும் உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த வீடியோக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது சுமார் 4,50,000 பேர் அவரைப் பின்தொடர்கின்றனர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக தற்போது அவருக்கு மாதந்தோறும் சுமார் 373 வெள்ளி வருமானம் கிடைக்கிறது. வறுமையையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் தனது உழைப்பால் வென்று காட்டியுள்ள வே குயூன், இன்று பலருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் இந்தத் தாயின் தன்னலமற்ற உழைப்பைப் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE