ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினமாக அறியப்பட்டாலும், இந்தியாவின் நிதி முதுகெலும்பான இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடங்கப்பட்ட மிக முக்கியமான நாளும் இதுவேயாகும்.
1926-ல் ராயல் கமிஷன் அளித்த பரிந்துரையின் பேரில், டாக்டர் அம்பேத்கரின் வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டதிட்டங்களின் அடிப்படையில் 1935 ஏப்ரல் 1- அன்று இந்த வங்கி நிறுவப்பட்டது. தொடக்கத்தில் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கிய இது, பின்னர் மும்பைக்கு மாற்றப்பட்டதுடன், 1948 ஜூன் வரை பாகிஸ்தானுக்கும் மத்திய வங்கியாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
1949 ஜனவரி 1- அன்று தேசியமயமாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இன்று நாட்டின் தலைமை வங்கியாகவும் அனைத்து வங்கிகளின் கண்காணிப்பாளராகவும் விளங்குகிறது.
பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வட்டி விகிதங்களை நிர்ணயித்தல், ரூபாய் நோட்டுகளை வடிவமைத்து அச்சிடுதல், பணவீக்கம் மற்றும் ஜிடிபி-யைக் கண்காணித்தல் என தேசத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும் உன்னதப் பணியை இது மேற்கொண்டு வருகிறது.