நூல் : கட்டாய பிரம்மச்சாரிகள் - மா.ஆசைத்தம்பி சரவணன்

By News Room

கை: கவிதை தொகுப்பு

ஆசிரியர் : மா.ஆசைத்தம்பி சரவணன்
பதிப்பகம் : X Press Publishing (Notion Press) / Kindle
பக்கம் : 97

நூலாசிரியர் அன்பிற்கினிய திரு.மா. ஆசைத்தம்பி சரவணன், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். இவர் திருவாரூர் மாவட்ட பொது நூலகத் துறையில் நூலகராக   பணியாற்றி வருகின்றார். இவர் நூலகம் வாயிலாக வாசிப்பு இயக்கம், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு நடத்துவது, மாணவர்கள் மத்தியில் கதைகள் சொல்வது, போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு செய்வது என பல்வேறு சமூக செயல்பாடுகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வந்த வண்ணம் உள்ளார்.

'கட்டாய பிரம்மச்சாரிகள்' இவரது முதல் படைப்பு. இவர் இந்த புத்தகத்தில் பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் பாடியுள்ளார். மேலும் நூலாசிரியர் அவர்கள்,  சமூகத்தில் வாழும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்திற்காக உழைத்து வயது மூப்பு ஏறி கட்டாய பிரம்மச்சாரிகளாக, திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகின்றனர் எனவும், முதிர் கன்னிகளை பற்றி கவலைப்படும் நாம், இப்படி வயது வந்து திருமண வயதை தாண்டிய ஆண்களைப் பற்றிய ஏதும் கவலை கொள்வதில்லை எனவும், இந்த புத்தகத்தில் 'கட்டாய பிரம்மச்சாரிகள்' என்ற தலைப்பில் பாடியுள்ள கவிதைகள், திருமணமாகாத ஆண்களுக்கு சமூகத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த தொடக்கப் புள்ளியாக அமைந்தால், அது தனக்கான வெற்றி எனக் குறிப்பிடுகின்றார்.

@@@@@@@@@@@@@@

இந்த கவிதை தொகுப்பு நூலில் 84 தலைப்புகளில் கவிதைகள் பாடப்பட்டுள்ளன. முதல் கவிதை தலைப்பு 'கவிஞராக' என்று  ஆரம்பித்து... இறுதி கவிதை தலைப்பு 'எதிர்காலம்' என முடிகிறது. 

பல தலைப்புகளில் நிகழ்காலத்தில் நடக்கும் வேதனை அளிக்கும் சமூக இடர்பாடுகளை கவிதைகளில்   பாடியுள்ளார். வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ஆசை கொண்டும் பல கவிதை புனைந்துள்ளார்.

'கற்பு' குறித்த கவிதையில் ஆண் பெண் இருவரையும் பொதுவில் வைத்துள்ளார்.

'சாதி' நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் அவை 'இரத்த வகை' கொண்டு இருக்க வேண்டும் என்று அழகாக தெரிவிக்கின்றார்.

அவரே சாதி அழிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றார். பிளாஸ்டிக் பையை போல என்று..

முன்னணி கவிஞர்கள் இருப்பினும் தான் கவிதை புனைந்தாலும் இளையராஜா இசைக்க நிச்சயம் இசைவார் எனவும், அது தன் மகளது கொலுசு சத்தத்தை பற்றிய கவிதைக்காக  என குறிப்பிடுகின்றார். 

'வாக்காளன்' என்ற தலைப்பில் வாக்காளனின் மனதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறார்.

மழை வந்து அழிந்த பிறகும் அழியாத கோலமாக 'நவீன கோலத்தை' காட்டுகின்றார்.

'அரசியல்' என்ற தலைப்பில் கனவு திட்டம் பற்றி பாரத பிரதமருக்கே ஆலோசனை
தருகின்றார்.

'தமிழா' என்ற தலைப்பில்,  மாற்று சாதியில் உடன்பாடு இல்லாதவனுக்கு எதற்கு மாற்று மொழி என வினவி 'தாய் தமிழை' தூக்கிப்பிடிக்கின்றார்.

இப்படியாய் அன்பிற்கு இனிய நூலின் ஆசிரியர் திரு.மா.ஆசைத்தம்பி சரவணன் அவர்கள், பல்வேறு சிறந்த கவிதைகளை நமக்கு தந்துள்ளார்.

மேலும் இவரது 'முடிவில்லா பயணம்' என்ற தலைப்பில் 'வாசிப்பு இயக்கம்' பற்றி கூறப்பட்டும், அதன்படி பல்வேறு கல்லூரி பள்ளி மாணவர்களிடம் சென்று நடத்தியது பற்றியும் குறிப்பிடுகின்றார்.  இவ்வாறு வாசிப்பை இளைய சமுதாயம் மத்தியில் ஊக்கப்படுத்தும் இவருக்கு நாம் மிகப்பெரிய கைத்தட்டல்களையும் வாழ்த்துகளையும் கொடுத்தாக வேண்டியுள்ளது.

'கட்டாய பிரம்மச்சாரிகள்' கவிதைத் தொகுப்பினை பிரம்மச்சாரிகள் மட்டுமல்ல, சம்சாரிகளும்  வாசிக்கலாம். 

வாழ்த்துகளுடன்
#கலைகார்ல்மார்க்ஸ்
#திருவாரூர்

.
மேலும்