தென்னிந்திய திருமண சடங்குகள் – எட்கர் தர்ஸ்டன்

By News Room

இன்றைய தேதிக்கு வீடு, வசதி மற்ற எல்லாவற்றையும் விட அதிக பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவது திருமணம்தான். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளில் பேசும் பெண்கள் எதிர்பார்ப்புகளை பார்க்கும்போது பலருக்கு கடைசி வரை சிங்கிளாகவே வாழலாம் என்ற முடிவுக்கே வந்து விடுகின்றனர். இதெல்லாம் பார்க்கும்போது மற்ற எதையும் விட ஒரு திருமணம் ஏன் இவ்வளவு பிரமாதப்படுகிறது என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.

இந்த தென்னிந்திய திருமண சடங்குகள் புத்தகம் 1900களின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் வெவ்வேறு இனக்குழுக்கள் இடையே இருந்த திருமண முறை, பழக்க வழக்கங்களை ஆவணப்படுத்தும் வகையில் எட்கர் தர்ஸ்டனால் எழுதப்பட்டது. இதில் பல்வேறு திருமண முறைகள் இப்போது படிக்கும்போது நமக்கு ஒவ்வாமையையும், உவப்பையும் ஏற்படுத்தலாம். ஆனால் அது ஒவ்வொன்றும் அந்தந்த மக்களின் வாழ்க்கை முறையை சார்ந்து அமைந்த திருமண முறை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இப்படியான திருமண முறைகளை அவர்கள் பின்பற்றினார்கள் என்பதை கொண்டு அவர்களை தாழ்வாகவோ, நாகரிகமற்றவர்களாகவோ பார்க்க தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தும், வலியுறுத்தலும்..!

இப்போதுதான் திருமணம் என்றாலே மண்டபம் பிடிப்பது, தாலி கட்டுவது, ரிசப்சன் வைப்பது என ஒரு டெம்ப்ளேட்டிற்குள் எல்லா சமூகத்தினரும் அடங்கியுள்ளனர். சிலர் வசதி பொருத்து மார்வாடிகள் போல வாரக்கணக்கில் திருமணத்தை நடத்துவதும் உண்டு. ஆனால் சுமார் 120 வருடங்களுக்கு முன்பு பல வெரைட்டியான திருமண முறைகளை காண முடிகிறது.

முக்கியமாக கிராமப்பகுதி சமுதாயத்தினர் சிலரிடம் இருந்த பைசாச திருமண முறை. வேறொன்றுமில்லை.. பொண்ணு தூக்கும் படலம்தான்..! ஆந்திரா பக்கம் கோண்டூக்கள் என்பவர்கள் பொண்ணு தூக்கும் படலத்தில் பிரசித்தி பெற்றவர்களாம். இதில் விசேஷம் என்னவென்றால் மணப்பெண்ணை மணமகனின் தாய்மாமா பெண்ணின் கிராமத்திலிருந்து கடத்தி தோளில் தூக்கிக் கொண்டு ஓடுவாராம். மணமகனின் கிராமத்தை அடையும் முன்னர் அவர் எங்காவது நின்று விட்டால் அந்த இடத்திலேயே எருமை வெட்டி அனைவருக்கும் விருந்து வைக்க வேண்டுமாம். இதுபோல இன்னும் சில சமூகங்களிலும் இருவீட்டாரும் பேசி முடித்ததும் பொண்ணு தூக்கி செல்வதை ஒரு சடங்காகவே செய்வதை தாட்சர் பதிவு செய்கிறார். அதிலும் குட்டிய கோண்டூக்கள் கொஞ்சம் விசேஷமாக திருமணம் ஆகும்வரை ஆண்கள் பெண்கள் உடையலங்காரமின்று நிர்வாணமாகவே இருப்பார்களாம். 

அதுபோல மலைமுதுவன் மற்றும் சில சமுதாயத்தினர் திருமண முறை இன்னும் கொஞ்சம் சாகசம் நிறைந்தது. அவர்கள் சமூகத்தில் இருவர் விருப்பப்பட்டு விட்டால் காட்டுக்குள் சென்று வாழ ஆரம்பித்து விடுவார்கள். அவரது உறவினர்கள் அவர்களை போய் தேடி அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பார்களாம்.

இதுபோல பெண் தூக்குதல், மறைந்து வாழ்தல் தவிர்த்து சில திருமண முறைகளும் இருந்துள்ளன. அதில் ஒன்று சேலம் மலையாளி மக்களிடையே இருந்த திருமண வாழ்க்கை முறை. அவர்களில் சின்னஞ்சிறு சிறுவனுக்கு பெரிய பெண்ணாக பார்த்து மணம் செய்து விடுவார்களாம். அந்த பெண்ணோடு சிறுவனின் தந்தையே சேர்ந்து வாழ்வாராம். அவர்களுக்கு பிறக்கும் குழந்தை சிறுவனின் குழந்தையாகவே கருதப்படும். சிறுவன் வளர்த்து பெரியவன் ஆனதும் தன் குழந்தைக்கும் அதேபோல ஒரு பெண்ணை மணம் செய்து இவன் கூடி வாழ வேண்டும். 

கோட்டா பழங்குடியினர் ஒரு வேல்ஸ் கலாச்சார பாணியில் நடத்தும் சடங்கை தாட்சர் விவரிக்கிறார். கோட்டாவில் ஒரு பெண்ணுக்கும், பையனுக்கும் மணம் முடிக்கும் முன்னர் அவர்களை ஒரு இரவு தனியாக உறவு வைத்துக் கொள்ள அனுப்புவார்களாம். அதில் பெண்ணுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே திருமணமாம். ஒரு பெண் இவ்வாறாக தனக்கு திருப்தி ஏற்படும் நபரை கண்டறியும் வரையில் எத்தனை ஆண்களோடு உறவுக் கொண்டாலும் அதனால் அந்த பெண்ணை இழிவாக கருதும் பழக்கம் அவர்களிடம் இல்லையாம்! அப்போதைய லிவிங் டூ கெதர் முறை போல..!

இதை இப்போது படிக்கும்போது கொஞ்சம் ஒரு மாதிரியாக தோன்றலாம். ஆனால் இது மட்டுமல்ல பலிஜா மக்களிடையே இருந்த பொட்டுக்கட்டி விடுதல் சம்பிரதாயம், ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளும் பழக்கம், ஆண்களின் பலதார முறை என இன்னும் கேள்விப்படாத பல சாதிக்குழுக்கள் அவர்தம் திருமண முறைகள் குறைத்த மிகப்பெரும் கருவூலமாக இந்த புத்தகம் இருக்கிறது. இதில் உள்ள பல திருமண முறைகள் தற்போது வழக்கொழிந்து விட்டாலும். ஒரு 120 வருடத்திற்குள் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அதேபோல 120 வருடத்திற்கே இப்படியென்றால் பல ஆயிரம் வருடங்கள் முந்தைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணவோட்டமும் எழுகிறது. மேலும் இந்த மக்கள் குழுக்கள் இடையே இருந்த இந்த பொண்ணு தூக்கி திருமணம், பல கணவர் மணம், பலதார மணம், தாலி கட்டாத நேரடி வாழ்க்கை முறை போன்றவை பல மகாபாரதத்தில் நடக்கும் பல சம்பவங்களை எனக்கு நினைவில் கொண்டு வருகிறது. 

ஆனால் அதேசமயம் பாரதியின் சந்திரிகையின் கதை படிக்கும்போது ஏற்பட்ட சோகம் இதிலும் நிகழ்ந்துவிட்டது. பாரதியார் அதை முழுதாக முடிக்காதது போல் தாட்சரும் இந்த புத்தகத்தை முழுதாக முடிக்காமல் இடையிலேயே நிறுத்தி விட்டாராம். பாதி எழுதியதிலேயே இவ்வளவு ஆவணங்கள் முழுதாக எழுதி இருந்தார் என்றால் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிட்டியிருக்கும்.

.
மேலும்