குட்டிகதை : தரிசனம் தரும் நேரம் மரணம்

By News Room

பிரம்மா, விஷ்ணு, சிவன் 
தரிசனம் தரும் நேரம் மரணம் நிகழும்.

சோளிங்கநல்லூர் என்னும் ஊரில் சிவலிங்கம் என்னும் பெயரைக் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் நேரிடையாக நாரதரிடம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தான். ஒருமுறை நாரதரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது "அநேகமாக இதுதான் நமது கடைசி சந்திப்பாக இருக்கும் சிவலிங்கா" என்று தொடங்கினார் நாரதர். "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள். நீங்கள் எங்காவது சென்று விடுவீர்களா?" என்று கேட்டான். "இல்லை நீதான் பூலோகம் விட்டு மேலோகம் வரப்போகிறாய்" என்றார் நாரதர்.

"நான் இன்னும் சிறிது காலம் வாழத்தொடங்குகிறேன் என்னை மேலோகம் அழைத்துச்செல்லுங்கள் நான் பிரம்மாவிடம் பேசுகிறேன்" என்று கூறினான். "சரி அப்படியே ஆகட்டும்" என்ற நாரதர், பிரம்மாவிடம் சென்று "எனக்குத் தெரிந்த மானிடப்பிறவி இவன்.. இவனது ஆயுள்காலம் முடியப்போகிறது. அதை நீட்டிக்க உதவுங்கள்" என்றார்.

உடனே பிரம்மா "என்னால் அது இயலாத காரியம்.. படைக்கும் தொழிலோடு எனது உரிமை முடிந்தது. காக்கும் கடவுளான விஷ்ணுவிடம் சென்று கேளுங்கள்.  உங்களுக்கு உதவியாக வேண்டுமானால் நான் வருகிறேன்" என்று விஷ்ணுவிடம் அழைத்துச்சென்றார்.

நித்திரையில் இருந்த விஷ்ணுவை எழுப்பி வந்த விஷயத்தைச் சொன்னார்கள். சிறிது நேரம் யோசித்த விஷ்ணு "காக்கும் தொழிலோடு என் கடமையும் முடிந்தது. அதனால் அழிக்கும் கடவுளான சர்வேஸ்வரனை அணுகுவோம். வாருங்கள் நானே அவரிடம் அழைத்துச் செல்கிறேன்" என்றார். எல்லோரும் சேர்ந்து கயிலாய மலைக்குச் சென்று சிவப்பெருமானை சந்தித்தார்கள். நாரதர் நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னார்.

சிவப்பெருமான் " எப்படி படைப்பதும் காப்பதும் உங்கள் தொழிலாக இருக்கிறதோ அதுபோன்று தான் அழிப்பது எனது தொழிலாக இருக்கிறது. ஆனால் உயிரை எடுக்கும் தொழில் எமனிடம் என்பதால் இதற்குத் தீர்வு எமன்தான் சொல்லவேண்டும். விசித்திரமான இவ்விஷயத்தை எமன் எப்படி தீர்க்கின்றான் என்று பார்க்க வேண்டும் வாருங்கள் நானும் வருகிறேன்" என்றார்.

படைப்பவன், காப்பவன், அழிப்பவன், கலகமூட்டுபவன் என்று நால்வருமே தம்மை தேடி வரு வதைக் கண்ட எமன் ஓடிவந்து வரவேற்றான்.. விருந்தோம்பல் முடிந்ததும் விஷயத்தை அறிந்தவன்.. "மனித உயிர்களின் ஆயுள்காலம் முடியும் காலக்கணக்கை சித்திரக்குப்தன் இங்குதான் எழுதியிருக்கிறான். வாருங்கள் என்ன செய்யமுடியும் என்று பார்க்கலாம்" என்றபடி மானிடனின் காலக் கணக்கைப் பிரித்தான்..

எமன் படித்ததைக் கேட்டதும் மானிடன் மயங்கிவிழாத குறைதான்.. அப்படி என்ன எழுதியிருந்தது..
பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் தரிசனம் தரும் நேரம் மரணம் நிகழும் என்று எழுதியிருந்தது.. ஆக மனிதனது ஆயுள்காலத்தை இறைவனும் தடுக்க முடியாது. அதனால் இறைவனது பாதத்தைப் பற்றிக்கொள்ள வாழும் காலத்தில் வழி செய்து கொள்ள வேண்டும்.

.
மேலும்