புத்தகம் :தே ஒரு இலையின் வரலாறு

By News Room

Lஆசிரியர் :ராய் மாக்சிம்
தமிழில் :சிறில் அலெக்ஸ் 
கிழக்கு பதிப்பகம்

பக்கங்கள் :271
விலை :325

எனக்கு தேநீர் என்றால் அவ்வளவு பிடிக்கும். ஆனா அதற்கு அடிமையாகவில்லை.காலையிலும் மாலையிலும் ஒரு முறை குடித்துவிட வேண்டும். தேநீரை நின்று கொண்டு அருந்துவதும் எனக்கு பிடிக்காது. ஆற அமர ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு பொறுமையாக குடிக்க வேண்டும்.

 வெகு நாட்களாகவே தேயிலைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. அப்போதுதான் இந்த புத்தகம் ஆஃபரில் வாங்கினேன். உண்மையிலேயே தேயிலை குறித்து நிறைய தவல்களை அறிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று.

தேயிலையின் ஆரம்பம் முதல் விரிவாக கூறுகிறது. இந்நூல் ஆசிரியர் ஒரு தேயிலை தோட்டத்திற்கு மேலாளராக பணிக்கு சென்ற அனுபவங்களிலிருந்து தேயிலையின் வரலாற்றை கூறுகிறார்.

ஆரம்பக் கட்டத்தில் தேயிலை தங்கத்திற்கு ஈடாக மதிக்கப்பட்டுள்ளது. அதன் விலையும் ஏற்றத்தில் இருந்துள்ளது.தேயிலை கடத்தல்களும், தேயிலைக்காக கொலைகளும் கூட நிகழ்ந்துள்ளது. அப்போதே  தேயிலையின் விலை அதிகமாக இருந்ததால் தேயிலையில் ஆட்டுச் சாணம் கலப்படம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பானமாக அருந்தலாம்( *இன்றும் கூட எங்கள் ஊரில் நாட்டு தேயிலை செடிகளும், சைனா தேயிலை செடிகளும் உள்ளன* )என கண்டுபிடிக்கப்பட்ட தேயிலையை பறிப்பதில் அரச வம்சத்தினருக்கென ஒரு வகையும், சாதாரண மக்களுக்கென என ஒரு வகையும் (பறிப்பதில் மட்டுமே )இருந்துள்ளது.

சீனாவில் கொதிக்கும் நீரை தேயிலைச் செடிகளின் மீது ஊற்றியும்,அசாமில் தேயிலையை புதைத்து வைத்து நொதிக்கச் செய்து பானம் தயாரித்துள்ளனர். இம்முறையை அறிந்த சீனர்கள் சுவையான கிரீன் டீயை தயாரித்துள்ளனர்.

சீனாவில் தேநீரில் சர்க்கரை சேர்த்தும் திபெத்தில் உப்பு சேர்த்து அருந்தி உள்ளனர்.

 தேயிலைகளை எத்தனை இலைகளாக படிக்கிறோம் என்பதைப் பொருத்தும் அவை எவ்வளவு விரைவில் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொருத்தும் அதன் தரமும் சுவையும் அமைந்துள்ளது. உயரமான பகுதிகளில் வளரும் தேயிலையில் வளர்ச்சி குறைவாக இருந்தாலும் அதன் சுவை அதிகமாக இருந்துள்ளது..  இதன் காரணமாகத்தான் மலைப் பகுதிகளில் தேயிலை விளைவிக்கும் வழக்கம் தோன்றியிருக்கக் கூடும்.

தேநீரை பருகுவதால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகளும், கருத்துக்களும் நிலவி உள்ளன. ஆராய்ச்சி முடிவுகள் கருப்பு தேநீர் உடலுக்கு நன்மை பயப்பதாக தெரிவிக்கின்றன.

தேயிலை தோட்டங்களில் பணி புரிய அடிமைகளை கருப்பு நிறத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தும்,அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அடிமைகள் இண்டிகோ தோட்ட வேலைக்கு கடத்திசெல்லப்பட்டதும் என அறியாத தகவல்களும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

தோட்ட தொழிலாளர்களின் நிலை குறித்த குறிப்புகளும் உள்ளன. ஏற்கனவே "எரியும் பனிக்காடு "படித்தவர்களுக்கு தொழிலாளர் குறித்த பகுதி படித்தது போலவே இருக்கும்.

இடையில் ஓப்பியம் குறித்த வரலாற்றில் ஒரு சிறு சலிப்பு ஏற்படலாம். ஆனால் மீண்டும் தேயிலையின் வரலாறு தொடரும் போது ஒரு கோப்பை சூடான தேநீர் பருகியது போல் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

ஒரு கோப்பை தேநீர் அருந்தும் முன்பு, இல்லையெனில் ஒவ்வொரு முறை தேநீர் அருந்தும் போதும் குறித்து வைத்து கொள்ளுங்கள் "தே ஒரு இலையின் வரலாற்றை விரைவில் வாசித்திட வேண்டுமென்று "!!!!

.
மேலும்