அதிதி – வீட்டைத் துறத்தல் எளிதல்ல..

By News Room

தமிழ் புனைவுலகில் திடீர்திடீரென ஏதாவது ஒரு நல்ல நாவல் சத்தமில்லாமல் வந்து விடுகிறது. கண்கொத்திப் பாம்பாய் கவனித்து அதை லபக்கென்று கவ்விப் பிடித்துக் கொள்வது வாசகனுக்கு பெரிய சவாலாகவே உள்ளது. அப்படி சமீபத்தில் வந்திருப்பது அன்புத் தோழர். வரத.இராஜமாணிக்கத்தின் அதிதி என்ற நாவல்.  நான்கைந்து நாட்களின் சம்பவங்களை, முக்கிய கதாபாத்திரங்கள், துணைப் பாத்திரங்களின் வாழ்க்கையை முன்பின்னாகச் சொல்லி ஒரு நாவலாக்கியிருக்கிறார் இராஜமாணிக்கம்.

பழனி நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர், வழக்கறிஞர், இடதுசாரி இயக்கத்தின் முன்னணித் தலைவர் என்று பலவகைகளிலும் கடுமையான பணிகளில் இயங்கிக் கொண்டிருக்கும்  அவர் அவ்வப்போது சிறுகதைகள் எழுதிவந்தார். இப்போது நாவலாசிரியர் ஆக மலர்ந்துள்ளார். மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவனின் கதை, பல்வேறு சூழல்களில் வீட்டை விட்டு வெளியேறியவர்களின் கதையாக வளர்கிறது. இதே கருவை மையமாகக் கொண்டு இதற்கு முன் வெளிவந்துள்ள படைப்பு யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் நாவல் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.
கஷ்டமோ, நஷ்டமோ, வீடு தரும் பாதுகாப்பும், இதமும் வேறு எதுவும் தராது. தாங்க முடியாத துயர் வந்து சூழும் போதுதான் மனிதன் அந்தப் பாதுகாப்பையும் உதறி, வெளியேறத் துணிகிறான். மனைவிக்கு எதிர் வீட்டு இளைஞனுடன் உள்ள தொடர்பு நாயகனை வீட்டை விட்டு வெளியேற வைக்கிறது. அவனது தாயும் அவனது சிறுவயதில் அவனையும், வீட்டையும் விட்டு இவ்விதமாக வெளியேறியவள்தான். வீட்டை விட்டு வெளியேறியவனுக்கு பாலியல் தொழில் செய்யும் நடுத்தரவயதுப் பெண்மணி ஒருத்தி ஆதரவு தருகிறாள். அவளும், அவளது நிழலில் தொழில் புரியும் பெண்களும் அவ்வாறே வீட்டை விட்டு வந்தவர்கள்தான். ஒருபுறம் இவர்களது கதை. மறுபுறம் நாயகனைத் தேடும் அவனது மனைவி, மாமனாரின் கதை. அவன் மனைவியும் அடிப்படையில் நல்லவள்தான். ஏதோ சற்று கவனம் பிசகி தவறாகிவிடுகிறது. கணவன் வீடு திரும்ப வேண்டுமே என்று துடிக்கிறாள். கடைசியில் அவனும் வீடு திரும்ப சுபமாய் முடிகிறது நாவல்.
மிக எளிய, அசலான கதை. சொன்ன விதத்தில் அசாதாரணக் கதையாக மாறுகிறது. பழைய ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் பொதுவாக பழநிக்குத் தான் செல்வார்கள். எனக்குத் தெரிந்து பழநியிலிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஓடிப் போனவர்கள் நான்கைந்து பேர் உண்டு. அது எதனால் என்று தெரியவில்லை.  ஆசிரியர் அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அல்லது அவரது சொந்த ஊர் என்பதனாலும் இருக்கலாம். எதுவாயினும்,  பழநியின் குதிரை வண்டிகள், வண்டிக்காரர்கள் இத்தனை விரிவாகப் பதிவான முதல் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன். தோழரின் நாவல் என்பதால் இயல்பாகவே  குதிரைவண்டிக் காரர்களின் போராட்டம் ஒன்றும் நாவலில் உண்டு.  அது வலிந்து திணிக்கப்படாமல் கதையோட்டத்தோடு வருவது சிறப்பு.
நாவலில் எனக்குப் பிடித்த அம்சம் பழநியின் வெயில் பற்றி நாவல் நெடுக வரும் வரிகள். சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்தில் இருள் ஒரு பாத்திரம் போலவே வரும். அதைப் போன்று இதில் வெயில் வருகிறது. பழநி மலை சூரியனின் வெப்பம் முழுவதையும் உறிஞ்சி இரவு பகல் பாராது ஊர் மீது உமிழ்ந்து கொண்டே இருக்கும். நான் ஓராண்டு காலம் அங்கு பணிபுரிந்த போது அதை நேரடியாக அனுபவித்திருக்கிறேன். உள்ளூர்காரர்கள் அதை உணர்ந்திருக்க மாட்டார்கள். நம்மைப் போல் வெளியாட்களுக்குத் தான் அது தெரியும் என்று நினைத்திருந்தேன். இராஜமாணிக்கம் அதை சரியாக உணர்ந்து  பாத்திரங்களின் மனஉணர்வுக்குத் தகுந்தாற் போல் வெயிலை வர்ணித்துக் கொண்டே போகிறார். வெயில் கதைமாந்தர்கள் கூடவே வருகிறது. பின்னால் வந்து தயங்கி நிற்கிறது. நிழலால் அரவணைக்கிறது. எரிச்சல் தருகிறது. இதமும் தருகிறது.
நாவலில் பெரிதாக குற்றம் குறைகள் இல்லை. சில பாத்திரங்களுக்கு , குறிப்பாக குதிரைவண்டிக்காரர் சுப்பு பாத்திரத்திற்கு சில இடங்களில் மரியாதை விகுதியும், சில இடங்களில் அன் விகுதியும் மாறி மாறி வருவதைத் தவிர்த்திருக்கலாம். பழநியின் சித்த வைத்தியர்கள்,  புகழ்பெற்ற திரையரங்குகள், பிரபல விபூதி, பஞ்சாமிர்தக் கடைகள் பற்றி எல்லாம் ஆங்காங்கே சொல்லியிருந்தால் இன்னும சிறப்பாக இருந்திருக்கும்.
ஆனால் அவை பெரிய குறைகளல்ல. இவை இல்லாததால் நாவலின் போக்கு எந்த இடத்திலும் தொய்வடையவில்லை. தடுமாறி நிற்கவில்லை.
முன்னர் குறிப்பிட்ட யுவனின் வெளியேற்றம் நாவல் காட்டும்,  வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் உளச்சிக்கல்கள், துயர்களை விட,  அவர்கள் இல்லாத வீட்டில், ”ஏன் போனான்? எங்கோ போனான்? வருவானா? மாட்டானா? உயிரோடு இருக்கிறானா? இல்லையா? ” என்ற எண்ணற்ற கேள்விகளோடு தவிக்கும் அவனது சுற்றத்தின் துயர்கள் சற்றும் குறைந்தவையல்ல.  என் உயிர் நண்பன் ஒருவனின் தந்தையார் 30 – 35 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாட்டுப் பொங்கலன்று வீட்டில் ஏற்பட்ட சிறு சச்சரவில் மனம் நொந்து, வீட்டை விட்டுப் போனவர்தான். இன்றுவரை வீடு திரும்பவில்லை. இப்போதும்,  நானும், அவனும் சினிமா, வெளியூர் என்று எங்கேனும் சென்றுவிட்டு நள்ளிரவில் மதுரை திரும்பும் போது,  அவன் பஸ், ரயில் நிலையத்தில், ஆளரவமற்ற சாலைகளில் மூடிக்கிடக்கும் கடைகளின் வாசலில் கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் கந்தலான உருவங்களின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே வருவான். அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரத்தக் கண்ணீர் வரும்.
அந்த சொல்ல முடியாத துயரத்தை தனது முதல் நாவலில் பதிவு செய்துள்ள தோழர்.வரத.இராஜமாணிக்கத்தை வாழ்த்துகிறேன். கதையிலேனும் இப்படியானவர்களின் துயா் தீரட்டும் என்று சுபமாக முடித்த அந்த மென்மனதுக்காரரை நெஞ்சார அணைத்துக் கொள்கிறேன்.

அதிதி
வரத.இராஜமாணிக்கம்
பாரதி புத்தகாலயம்
விலை ரூ180.00 பக்கம் 192

.
மேலும்