கழுத்தை இறுக்கி நெறித்து
முத்தமிடுகிறது
தாலிக்கயிறும் அவளும்
நான் மாட்டிக்கொள்கிறேன்
படுக்கையில்.
இதயம் பாரமாகிறது
இதழோரம் அமிர்தம்
வழிகிறது
தாலிக்கயிறு இப்போதும்
கழுத்தை இறுக்குகிறது
மார்பு மூச்சுவிட சிரமப்படுகிறது
மனசு இப்போதும்
மறைத்து வைக்கப்பட்டுள்ளது
மறைவாக முகம் மறைக்கப் பட்டிருக்கிறது.
உறக்கத்திற்குள் மெல்ல நுழைந்து உளறி வைக்கிறது
உதட்டோரம் வந்த கூதற்காற்று
முதலில் காதோரம் கிசுகிசுக்கிறது
அது
கடைசி வரை நீள்கிறது
காதல் கழுத்து வரை கூசுகிறது.
மெல்ல உடையை சரி செய்தபடி சேலை
இப்போது
அது
இடைவெளிகளைத் தேடி அலைகிறது.
ஏதோ ஒரு நொடியில் மீண்டும்
நுழைகிறது
இப்போது
மார்பின் ஓரம் கூட கூசுகிறது.
மெல்ல நினைவு
திரும்பிப்படுக்கிறது
இல்லை
திருப்தி இல்லை
காற்று இந்த முறையும்
இருதயத்தின் மத்தியை திருட முயல்கிறது.
நான் மெல்ல
முணங்குகிறேன்
மூச்சுக்காற்றால் எரிக்க முயல்கிறேன்.
கூதிர் விடுவதாயில்லை
மறுபடியும் ஒருமுறை
முட்டி மோதி முடிவுவரை தழுவி
முத்தமிட்டே தீருவதென்று
விரல்களோடு போரிட்டு
விடிய விடிய விரைகிறது.
இரவு காலோடு விரைத்துப்போய்
விடிகாலையில் எழுகிறது
கடித்து சுவைத்த
கம்பளிப் பூச்சிக்கு
இப்போது வியர்க்கிறது.
விரல்கள் மின்விசிறியை
அணைத்துக்கொண்டு
மீண்டும் ஒருமுறை
குட்டி முத்தம் கேட்டு அடம்பிடிக்கிறது
கம்பளி அசதியில் ஓரமாய் கிடக்கிறது.
சேலையின் விரல்கள் தலைக்கு அடியில் தவமிருக்கிறது
தவணை முறைக்காய் கம்பளி தாமதிக்கிறது
சேலையில் அழகு மெல்ல
அதை நோக்கித் திருப்புகிறது.
இரவும் பகலும் இப்படித்தான்
என் மீது குளிர் போல
காதலை கொட்டித் தீர்க்கிறது
எனக்கோ
சேலைக்கோ பலநேரம் வியர்க்கிறது.
நான் சேலையாகிய
இரவைத்தான் நேசிக்கிறேன்
என்பதை ஏனோ
இன்னும்
புரிந்து கொள்ளாமல் இருக்கிறது சுற்றிச் சுழலும் மின்விசிறி.
புலம்பியவாறு
இமைகளை கசக்கிக்கொண்டு
மெல்ல கற்பனை எழுகிறது
இப்போது
கட்டில்
பிரிவால் அழுகிறது.
அவள் கலைந்த கனவோடு
கடந்து போகிறாள்
என்னை விட்டுப் பிரியாத
நினைவு மட்டுமே
மீண்டும்
அணைக்கத் தயாராகிறது.
....இயலிசம் ...