நோயை உண்டாக்கிக் கொள்வதும், தீர்த்துக் கொள்வதும் பெரியவாளுக்கு ஒரு லீலை. யாரோ ஒரு அத்யந்த பக்தரின் கால் வீக்கத்தைத் தீர்ப்பதற்காக, தானே அதை அனுபவித்த சம்பவம்.
லீலை என்று வந்துவிட்டால் அங்கே தர்க்கத்துக்கு இடமில்லை.
சொன்னவர்-ஸ்ரீமடம் தொண்டர்
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவாளுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம். யானைக்கால் போல் ரொம்பவும் வீங்கியிருந்தது.
முதிய சுமங்கலி அம்மாள், பெரியவாளுக்கு ஆரத்தி எடுத்தாள். பெரியவாளின் கால்கள் வீங்கியிருந்ததைப் பார்த்து மிகவும் பயந்து போய்விட்டாள். கண்கள் கலங்கின. ஊராருக்கெல்லாம் வைத்தியம் செய்யும் பெரியவாளுக்கு வைத்தியம் செய்ய யாரும் இல்லையா?
"பெரியவா, உடம்பைப் பார்த்துண்டால் தேவலை. நல்ல டாக்டர்கிட்ட மருந்து வாங்கிச் சாப்பிடணும்"...என்று நெஞ்சடைக்கப் பிரார்த்தனை செய்தாள்.
பெரியவாளுக்குச் சிரிப்பு வந்தது. தன் கால்களைப் பார்த்துத் தான் இந்த அம்மாள் அப்படிச் சொல்கிறாள் என்பது புரிந்தது.
"அரை மணி கழித்து வந்து பார்" என்று அந்த அம்மாளிடம் சொன்னார்கள்.
அம்மையார் நகர்ந்ததும், பெரியவா பத்மாசனம் போட்டுக்கொண்டு பதினைந்து நிமிஷம் ஜபம் செய்தார்கள்.
வயோதிக அம்மையார் சற்றைக்கெல்லாம் திரும்பி வந்து பார்த்தாள்.
பெரியவாளின் கால்கள் வடிந்து, சாதாரணமாக ஆகிவிட்டிருந்தன.
'மருந்து ஏதும் சாப்பிடாமல், கால் எப்படிச் சரியாயிற்று?' என்று அந்த அம்மாளுக்குப் புரியாத புதிராக இருந்தது.
நோயை உண்டாக்கிக் கொள்வதும், தீர்த்துக் கொள்வதும் பெரியவாளுக்கு ஒரு லீலை.
யாரோ ஒரு அத்யந்த பக்தரின் நோயைத் தீர்ப்பதற்காக, தானே அதை அனுபவித்து சாஸ்திர விரோதமில்லாமல் கர்ம வினையை வற்றச் செய்து.... லீலை என்று வந்துவிட்டால் அங்கே தர்க்கத்துக்கு இடமில்லை.