அவ கண்ணெல்லாம் அழுது சிவந்து காத்துல கலைஞ்ச தலமுடியோட உடையப்பத்திக்கூடக் கவலப்படாம ஆஸ்பத்திரி உள்ளாற ஓடியாந்தா, வந்து அவளோட புருசனப்பாத்து
“ மாமா என்னாச்சு ஒனக்கு ஒன்னும் ஆகலயே இது என்ன தலையில கட்டு ஏன் மூஞ்சில காயமா இருக்கு ரொம்ப வலிக்குதா ஏன் மாமா கொஞ்சம் கவனமா இருந்துருக்கக் கூடாதா உன்ன நம்பித்தான நானிருக்குறேன் ஒனக்கு எதாச்சு ஆச்சுன்னா என் கெதி என்னாவுறது பிள்ளகுட்டிக என்னாவுறது பேசு மாமா பேசுன்னு “ சொல்லிப் பெட்டுக்கிட்ட நின்னு அழுதா
“ ஒன்னும்கவலைப் படுறமாதிரி இல்ல. எல்லாம் வெளிக்காயம்தான் சீக்கிரமா சரியாயிடும் பயப்படாதீங்க அவர் அவுட்டாப் டேஞ்சர் லேசான காயங்கள் தான் அதுவும் மேலதான் உள்ளாற எந்தபாதிப்பும் இல்ல அழாதீங்க அம்மா” என்று சிஸ்ட்டெர் அவளை தேத்துச்சு
ஆனா அவளோட புருசன் கண்ண இன்னும்தொறக்கல காரணம் கண்ணு அடிபட்டு வீங்கி தொறக்க முடியல ஆனாலும் அவபக்கம் தலையத்திருப்பி
“ கவலப்படாத லேசான காயம்தான் சீக்கிரம் சரியாயிடும்” என்றார்
“ கண்ணக்கூடத்தொறக்க முடியல வீங்கிக்கெடக்கு மூஞ்சியெல்லாம் அடிபட்டு வீங்கிக்கெடக்கு என்மாமாவுக்கு என்ன ஆச்சு சொல்லுங்க” நு கதறுனா
பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த இவரோட பிரண்டு ஒருத்தர் சொன்னார்
“இவர் ஓவர்டைம் டூட்டி பாத்துக்கிட்டு இருந்தப்ப நடக்கும்ப்போது சரியாக் கவனமில்லாம ட்ரெஞ்ச் மேல போட்டிருந்த மூடில கால் வைக்க அது திரும்பி இவர் டிரெஞ்சுக்குள்ள உள்ளாற விழுந்துட்டார், நல்ல வேளையா இவர் கூடவந்தவர் அதைப் பாத்துட்டு சத்தம் போட்டு ஆளுகளைக் கூப்புட்டு இவரை காப்பாத்தி வெளிய எடுத்துட்டாங்க நல்ல வேளையா ஆளு கூட இருந்ததுனால ஒன்னும் பெருசா ஆகல கவனிக்காம விட்டுருந்தா உயிர் பொழைக் கிறது சிரமம் தான் அதுல விழும்போது மூஞ்சி மோதி மொகத்துல காயம் ஆனா எக்ஸ்ரே எடுத்துப்பாத்தாச்சு ஸ்கேனிங் பண்ணியாச்சு எல்லாக்காயமுமே வெளியதான் உள்ள எந்த பாதிப்பும் இல்ல ஒன்னும் கவலைப்பட வேணாமுன்னு டாக்டர் சொல்லிட்டாரு”
இப்ப லேசாக்கண்ணதொறந்த இவளோட புருசன் திக்கித் திணறி ச்சொன்னார்
” எனக்கு ஒண்ணுமில்ல சீக்கிரமே காயம் ஆறிடும் நீ ஏன் அழுகிற அழாத “ நு சொல்லிட்டு அவளைப் பாதி க்கண் திறந்து பார்த்தார்
அவளோட கண்ணுல இருந்து வழிஞ்ச கண்ணீர் உசிறே உருகி வருறாப்புல இருந்துச்சு. ஆனா அதே கண்கள் போன மாசம் பாத்தப்ப வேறமாதிரி இருந்துச்சேன்னு யோசனை பண்ண அவருக்கு அந்த சம்பவம் நெனப்புக்கு வந்துச்சு
போனமாசம் அவளோட தம்பி வீடுகட்டி கிரகப்பிரவேசத்துக்கு இவங்களைக் கூப்புட்டு இருந்தான். மச்சானேச்சே போயே ஆகனும் நு லீவு போட்டுட்டு சீர் எல்லாம் வாங்கிச் சேத் துட்டு குடுமபத்தோட அங்க போயிருந்தாக.
அவன் ஏற்கனவே பூர்வீகமா இருந்த வீட்ட சீரமைச்சு வீடெல்லாம் மார்பிள் போட்டு வீட்டயே மாளிகை மாதிரி மாதியிருந்தான். முன்னாடி இருந்த வீட்டப்பாத்தவுங்க இப்பப் பாத்துட்டு மூக்கில வெரல் வைக்கிறமாதிரி அதிசயப்பட்டுப் பாராட்டினாக
ஆனா இவ மாத்திரம் அதைப்பாத்துட்டு சந்தோசப்பட்டமாதிரி தெரியல ஆனாலும் சமாளிச்சா. அவங்களும் இவங்களை நல்லாக் கவனிச்சாங்க, இவங்க எல்லாத்துக்குக் டிரஸ் இவளுக்குப் பட்டுப்பொடவைனு அசத்தீட்டாங்க ஆனா இவ மொகம் மாத்திரம் அம்புட்டுச் சந்தோசமா இல்ல. அப்பத் தெரியல
அதோட பின் விளைவு
விசேசம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தவன்ன ஆரம்பிச்சா கச்சேரி,
” நானெல்லாம் பொறந்ததே வேஸ்ட், எதுக்கு என்னையப்பெத்தாகன்னு தெரியல.சரி பெத்ததுதான் பெத்தாக ஒரு நல்ல எடத்துல கட்டிக்குடுத்துருக்கக்ப்படாதா எனக்குன்னு வாச்சாங்களே எல்லாம் என் கெரகம் தலவிதி
சொந்தமா ஒரு ஓட்டு வீடாவது உண்டா இருக்குறது வாடகை வீட்டுல சிமெண்ட் தரை அப்பப்ப ஒழுகுற பழைய கட்டடம் மழை பேஞ்சா ஊரில இருக்குற பூச்சி பூரா வீட்டுக்குள்ள வந்துரும் , நேத்து வந்த என் தம்பி பொண்டாட்டி மார்பிள் தரையில உருண்டு பொறண்டு அனுபவிக்கிறா நான் வெத்து ஆளைக்கட்டிக்கிட்டு வெந்து சாகுறேன்
என்னப்பெத்தவனும் சரியில்ல கட்டுனவனும் சரியில்ல எல்லாம் என் நேரம்”னு
ஒப்பாரி வைச்சா
ஒரு ஆம்பளைக்கி ரெண்டச் சொல்லிக் காமிக்கக் கூடாது அதுல முக்கியமா அவனோட வசதியில்லாத நெலமையச் சொல்லிக்காமிக்கப்படாது அதைத் தொட்டா யாருக்கும் கோவம் வரும் அது இவனுக்கு வந்துச்சு அந்தகோவத்துல சொன்னான்
” ஒன்னய கட்டிக்கனும்னு நான் ஒன்னும் அலையல ஒங்க அப்பந்தான் வந்து கெஞ்சுனான் கட்டிக்கச்சொல்லி அப்ப ஒங்க வீடும் ஒழுகிட்டுத்தான் இருந்துச்சு இப்ப காசு வந்துட்டதுனால எடுத்துகட்டீட்டாங்க நீ ஏன் அதுக்குப்பொங்குற”
” ஒன்னச்சொல்லிக் குத்தமில்லயா என்னத்தான் சொல்லுறேன் என் நேரமிந்த ஓட்டவீட்டுல கெடந்து சாகனுமின்னு இருக்கு என் தலைவிதி”னா
”கொஞ்சம் பொறு ஒரு வீடு வாங்கிறுவோம் .கையில இருக்குற கொஞ்சக்காசைபோட்டு மிச்சத்துக்கு லோன் போடுவோம் இ.எம்.ஐ யில கடன அடைப்போம் கவலைப்படாத”
”நீ என்னைக்கி லோனப் போட்டு என்னைக்கி வீடவாங்கி அதுல குடித்தனம்நடத்தி நான் சொர்கத்துக்குப்போக என் தலைவிதி இதுதான்” ”வக்கத்தவனுக்கு வாக்கப்பட்டா வெக்கமானம் கூடாது”ன்னு சும்மாவா சொல்லிருக்காகன்னு ”நீட்டினா
“ இப்ப இவனுக்கு கோவம்வந்துருச்சு ஆமாடி நான் வக்கத்தவந்தான் போய் ஒங்க அப்பன் வீட்டுல போய் காச வாங்கிட்டுவா துப்பு இருந்தா ஒடனே வீடு வாங்குவோம் “ கலியாணத்துல 10 பவுன் போடுறோம்னு சொல்லிட்டு 8 பவுன் போட்டவன் தானடி ஒங்க அப்பன் போ அங்க போய் கேளு”
”என்ன என்ன வேணுமானாலும் சொல்லுஎதுக்கு எங்க அப்பன இழுக்குற ஒனக்கு வீடு வாங்கத்துப்பில்லன்னா அதுக்கு எங்கப்பன் என்ன பண்ணுவாரு நீ ஒரு வெங்கம்பயன்னு தெரியாம என்னக்கட்டிக்குடுத்துட்டாரு அவர இழுத்த நடக்குறதே வேற”ன்னு
ஒரு மொறை மொறைச்சா பாரு பத்திரகாளி தோத்துருவா அப்புடியே என்ன எரிக்கிறமாதிரி பாத்த அந்தக்கண்ணு தானா இப்ப இப்புடு அழுது பொலம்புது”
இவனால நம்ப முடியல. அது வேற இயலாமையின் புலம்பல். ஆனா இது நெஞ்சுக்குள்ளாற இருக்குற பதை பதைப்பு ரெண்டும் அவதான் . அப்பத்தான் அவன் சொன்னான்
” நீ வீடு வாங்கச்சொன்னதால கடன்ல வீடு வாங்கி உன்னைக்குடி வைச்சி சந்தோசப்படுத்திட்டேன் ஆனாஅந்தக்கடன அடைக்கத்தான் தினம் ஓவர்ட்டைம் பண்ணி சமாளிக்கிறேன் அப்ப டயர்டு ஆகி ஒடம்பு வீக்காயிடுச்சு அதான் தவறி விழுந்துட்டேன் இது சரியாயிடும் கவலப்படாதே” என்றான்
இப்ப அவ கண்ணுல இருந்து வெள்ளமா பெருகுன கண்ணீர் இவனின் காயத்தை எல்லாம் ஆத்தி வலியக்கொறச்சிச்சி. அன்னிக்கிக் காயப்படுத்துனதும் இதே கண்ணுகதான் இன்னிக்கி அந்தக்காயத்த சரிபண்ணுறதும் அதே கண்ணுகதான்
அதைப்பாத்து இவனோட வீங்கிய கண்ணுகள்ல இருந்து கண்ணீர் உருண்டோடியது.
”இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து." குறள் 1091
அ.முத்துவிஜயன்
.