இரு நண்பர்கள் - சிறுகதை

By சரவணன்

ஒரு ஊரில் வேலன் என்றும் முத்து என்றும் இரு நண்பர்கள் இருந்தார்கள். வேலனுக்கு எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். அதிலிருந்து மீள்வதற்குள் மற்றொரு பிரச்னை முன்வந்து நிற்கும். முத்துதான் அவ்வப்போது கைகொடுத்து அவனை மீட்டு வருவான்.

இருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதித்து, கல்யாணம் செய்து கொண்டு சுகமாக வாழலாம் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு குறிப்பிடத்தக்க வேலை எதுவும் செய்யத் தெரியாது. வியாபாரம் செய்ய முதல் வேண்டும். எனவே, இருவரும் தங்கள் பழைய வீடுகளை விற்று, வாசனைத் திரவியங்களை வாங்கி, பல பாட்டில்களில் நிரப்பி, எடுத்துக்கொண்டு அவற்றை விற்க ஊர் ஊராகக் கிளம்பினார்கள்.

வேலன் கிழக்குப் பக்கமாகச் சென்றான். காட்டில் வெகுதூரம் சென்று, இருட்டும் போது காட்டைக் கடந்து விட்டான். ஆனால், அதற்குள் அவன் உடல் வியர்த்துப் போய்விட்டது. தன் உடையும் உடலும் வியர்வை நாற்றம் அடிப்பதைக் கண்டான். வாசனைப் பொருள் விற்பவன் என்றால், அவன் சென்றாலே கூடவே வாசனை 'கம்' என்று வீச வேண்டாமோ?

எனவே, வேலன் ஒரு மரத்தடியில் தன் பெட்டியை வைத்து உட்கார்ந்து, அதனைத் திறந்தான். ஒரு அத்தர் பாட்டிலை எடுத்து, அதற்குள் பஞ்சை விட்டு, அத்தரில் நனைத்து தன் ஆடைகளில் தடவினான். அப்போது, அந்த மரத்தின் கிளைகள் ஆடின. ஒரு மிகப் பெரிய பெண் உருவம் வேலன் முன் தோன்றி, "என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டது. அது ஏதோ ஒரு பிசாசு என ஊகித்துக்கொண்ட வேலன், "தெரியவில்லையா? அத்தர் பூசிக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

உடனே அந்த உருவம், "எனக்கும் கொஞ்சம் பூசிவிடு" என்றது. வேலனும், "உனக்கு நான் பூசுவதா? நீயே மிகச் சிறிய உருவமாகி, இந்த அத்தர் பாட்டிலுக்குள் நுழைந்து விட்டு வெளியே வந்தால், உன் உடல் முழுவதும் அத்தர் இருக்கும்" என்றான். பிசாசு சிறிய உருவத்தை எடுத்துக்கொண்டு, அவன் திறந்து வைத்த அத்தர் பாட்டிலுக்குள் நுழைந்தது. வேலன் சட்டென மூடியை எடுத்து, அந்தப் பாட்டிலை மூடி, பெட்டிக்குள் வைத்தான். பிறகு, பெட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி, ஒரு கிராமத்தை அடைந்தான்.

அங்கு ஒரு வீட்டில் இடம் பெற்று, அவன் படுத்து தூங்கிவிட்டு, மறுநாள் காலையில் எழுந்து, தன் பெட்டியுடன் தலைநகரை நோக்கி நடந்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு தலைநகரையும் அடைந்தான்.
அவன் அரசனைப் பேட்டி கண்டு, தன்னிடம் உயர்தர வாசனைத் திரவியங்கள் உள்ளதாகக் கூறி, அரசகுமாரியின் கல்யாணத்திற்கு அவை தனது பரிசுகளாக இருக்கட்டும் என, தன் பெட்டியையே வைத்தான்.
அரசனும் உடனே தன் மகளை வரவழைத்தான். அவளும் அந்தப் பெட்டியைத் திறந்து, ஒரு பாட்டிலை எடுத்து, அதன் மூடியைத் திறந்து வாசனை பார்த்தாள். மறுநிமிடமே அவள் பேய் பிடித்தவள் போல, "அடேடே! எனக்குக் கல்யாணம். டும். டும். டும். பிப் பிப் பிப்பி" என்று குதிக்கலானாள்.

நன்றாக இருந்த தன் மகள் திடீரென புத்தி மாறிக் கத்துவதற்குக் காரணம், வேலன் கொண்டு வந்த வாசனைப் பொருள்தான் என்று முடிவு செய்து, அரசன் வேலனை உடனே சிறையில் அடைக்குமாறு கட்டளையிட்டான்.
அப்போதுதான் வேலனுக்கு விஷயம் புரிந்தது. அரசகுமாரி எடுத்த பாட்டிலுக்குள் பிசாசு இருந்திருக்கிறது. அவள் அதை எடுத்து மூடியைக் கழற்றியதும், அப்பிசாசு வெளியே வந்து அவளைப் பிடித்துக்கொண்டுவிட்டது. அதை விரட்ட வேண்டுமே.

உடனே, வேலன் அரசனுக்கு, தான் அரசகுமாரியைக் குணப்படுத்துவதாகச் செய்தி அனுப்பினான். அரசனும் அவனை வரவழைத்து, "நீ எப்படி குணப்படுத்துவாய்?" என்று கேட்டான்.

வேலனும், "அரசே, அரசகுமாரியை ஒரு பிசாசு பிடித்துக்கொண்டிருக்கிறது. அதை நான் ஒரு அத்தர் பாட்டிலில் அடைத்து வைத்திருந்தேன். அந்தப் பாட்டிலை எடுத்து, அரசகுமாரி மூடியைத் திறந்துவிட்டாள். எனவே, அதனுள் இருந்த பிசாசு அவளைப் பிடித்துக்கொண்டுவிட்டது. நான் அரசகுமாரியைப் பிடித்த பிசாசை விரட்டுகிறேன். இதற்காக, நீங்கள் உங்கள் மகளை எனக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும்" என்றான்.

இது கேட்டு, அரசன் கோபம் கொண்டு, "அடே! என் மகளை மணக்கவா இப்படி சூழ்ச்சி செய்தாய்? உன்னைத் தூக்கில் போடுகிறேன். இன்றைக்கு எட்டாவது நாள் இவனைத் தூக்கிலிட்டுக் கொல்லுங்கள்" எனத் தன் வீரர்களுக்கு கட்டளையிட்டான்.

இதற்குள், முத்துவுக்கு வேலன் அரசனிடம் அகப்பட்டு தூக்குத் தண்டனை பெற்ற தகவல் தெரிந்தது. அவன் ஓடோடி தலைநகருக்கு வந்தான். அவன் வேலனைச் சந்தித்து, எல்லாவற்றையும் விவரமாகத் தெரிந்துகொண்டான். அவன் அரசனை உடனே பேட்டி கண்டு, தான் அரசகுமாரியைக் குணப்படுத்துவதாகக் கூறினான்.

அரசனும், "நீயும் என் மகளைக் கல்யாணம் செய்து கொடு என்று கேட்கப் போகிறாயா?" என்று ஏளனமாகக் கேட்டான். முத்து, "இல்லை இல்லை. என்னை அவள் முன் பேச விடுங்கள். நான் என்ன சொன்னாலும் யாரும் குறுக்கிடக் கூடாது. மேலும், எனக்கு ஒரு ஆள் உயரமுள்ள கண்ணாடி ஜாடி மூடியோடு கொடுக்கவும் வேண்டும்" என்றான்.

அரசனும் அப்படிப்பட்ட ஜாடியைக் கொடுக்கவே, முத்து அந்த ஜாடியைக் கொண்டு போய் அரசகுமாரியின் முன் வைக்கச் செய்தான். பிறகு, அங்குள்ள வீரர்களிடம், "இந்த அரசகுமாரியை இந்த ஜாடிக்குள் போட்டு மூடி, ஆறு மாத காலம் மண்ணுக்குள் புதைத்து வையிங்கள்" என்று உரக்கக் கத்தினான். மறுநிமிடமே, அரசகுமாரி 'ஆ' என்று அலறிக் கீழே விழுந்தாள். அவளைப் பிடித்திருந்த பிசாசு, தான் மறுபடியும் சிறைப்பட்டிருக்க வேண்டுமே எனப் பயந்து, அரசகுமாரியை விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டது.

அரசகுமாரியின் மயக்கம் தெளிய சற்று நேரம் ஆயிற்று. அவளுக்கு தன் உணர்வு வந்ததும், முன்போல நன்கு பேசலானாள். சித்தப்பிரமை இருக்கவில்லை.

அரசன் மிகவும் மகிழ்ந்து போய், முத்துவுக்கு நிறைய பரிசுகள் கொடுத்தான். மேலும், முத்து வேண்டியபடி, வேலனின் தண்டனையையும் ரத்து செய்து, அவனையும் விடுதலை செய்தான். அவனுக்கும் பரிசுகள் கொடுத்தான்.

இரு நண்பர்களும் அரசன் கொடுத்த பரிசுகளோடு தங்கள் ஊருக்குத் திரும்பி வந்தனர். அவர்கள் நல்ல வீடுகளை வாங்கி, கல்யாணம் செய்து கொண்டு, சுகமாக வாழ்ந்து வந்தனர்.

- பட்டாம் பூச்சி - தமிழ் நீதி கதைகள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE