அவன் அம்மாகிட்டச்சொல்லிக்கிட்டு இருந்தான் இந்தாம்மா நடந்ததைநடந்ததபடியே சொல்லு அது போதும். திரும்ப சொதப்பீடாதா அப்புறம் அந்த ஆண்டவனே நெனைச்சாலும் நம்மக்காப்பாத்தமுடியாது. இது வாரதுக்கே நான் படாதபாடு பட்டுருக்கேன். போனதடவை பன்னுனமாதிரி திரும்பப்பன்னிடாத.
நான் எனக்காகச்சொல்லல உன் நல்லதுக்குத்தான் சொல்றேன் நீ சாப்ப்பாட்டுக்கே செரமப்படுற நான் என்னால முடிஞ்ச அளவு உன்னைப்பாத்துக்கிறேன், ஆனா எனக்கே வருமானம் போதல ஆனா அவன் அப்படியில்ல, நல்லா செல்வாக்காத்தான் இருக்கான் , ஆனா பொறுப்ப தட்டிக்கழிச்சிட்டு ஜாலியா இருக்கான்,அப்ப அப்ப வந்து உன்னை ஏமாத்திறான் ,அவனுக்கு மனசாட்சியே கெடையாது,ன்னான்
அம்மா சொன்னா நானும்மனச தெடப்படுத்திக்கிட்டுத்தான் வந்துருக்கேன் ஏதாவது ஒரு வழி பொறக்குமுன்னு கவலைப்படா தேன்னா. அவங்க கலெக்டர் ஆபீஸுக்கு விசாரனைக்கு வந்து இருந்தாக.
அவங்க ஏற்கனவே கோர்ட்டுல அம்மாவோட மூத்தமகன் தன்னை கவனிக்கிறதில்ல. ந்னு மனுப்போட்டு கோர்ட்டு கலெக்டர் ஆபீசுக்கு விசாரிச்சி நடவடிக்கை எடுக்கசொல்லி ஆடர் போட்டுருந்தாக. அதுக்காக நேரடிவிசாரணைக்கி இவங்களையும் அம்மாவோட மூத்த மகனையும் வரச்சொல்லிருந்தாக
அம்மாவுக்கு இந்த ரெண்டே மகனுகதான். அப்பா ஏற்கனவே போய்சேந்துட்டாரு. பணம் காசு ஏதும் சேக்கல.
அம்மாவோட மூத்தமகன் படிச்சிட்டு நகரத்துல நல்ல வேலையில இருந்தான் அவனுக்கு ரெண்டுபொண்ணுக. வீடுவாசல்ன்னு கட்டிக்கிட்டு நல்ல வசதியாத்தான் இருந்தான். ஆனா அம்மாவை கூட வைச்சிக்க மாட்டீன்னுட்டான் . கேட்டதுக்கு அம்மாவுக்கும் அவனோட சம்சாரத்துக்கும் ஒத்துப்போகாது. அதுநால நீ வைச்சிக்க நான் மாசாமாசம் பணம் குடுக்குறேன்னு சொன்னான். அதுனால சின்னவன் வீட்டுலதான் அம்மா இருந்தா. அவனுக்கு வருமானம் போதல. சிரமப்பட்டுட்டுத்தான் இருந்தான் ஆனா அம்மாவை முடிஞ்ச அளவு பாத்துக்கிட்டான்.
ஆனா மூத்தவன் சொன்னபடி செய்யல மொத ரெண்டுமாசம் காசு அனுப்புனான். அப்புறம் பிள்ளைகளை பள்ளிக்கொடம் சேக்கனும் அது இதுன்னு சொல்லி காசு அனுப்புறத நிறுத்திட்டான். போன்செஞ்சா எடுக்குறதில்ல. சின்னவனுக்கு செரமம் ஆயிடுச்சி.
அப்பாவுக்கு பூர்வீக வீடு ஊருல இருந்துச்சு. அது அம்மா பேருக்கு மாத்திருந்தாரு. அதுல யாரும் இப்ப இல்ல. ஒருநாள் அதிசயமா குடும்பத்தோட அம்மாவைப் பாக்கவந்திருந்தான் மூத்தவன். அம்மாவுக்குப் பொடவை இனிப்பு அது இதுன்னு வாங்கிட்டு வந்துருந்தான்.
இவ்வளவு அவன் செஞ்சும் அம்மாவுக்கு அவனைகண்டவன்ன ஒரே சந்தோசம். நல்லா சமைச்சி சாப்புடச் சொன்னாங்க . அவனும் அவன் சம்சாரமும் பிள்ளைகளும் நல்லா சாப்புட்டாங்க , அவனோட மகளுக பாட்டி கூட நல்லா ஒட்டிக்கிட்டாக. அம்மாவுக்கும் ரொம்ப சந்தோசம் சின்னவனுக்கு ரெண்டு மகனுக. அவங்களும் பாட்டிகூட பிரியமாத்தான் இருப்பாங்க ஆனா இவங்க வராதவங்க வந்திருக்குறதால அம்மாவுக்கு பாசம் அதிகமாயிடுச்சு.
ஆனா சி ன்னவனுக்கு அவனைக்கண்டாலே பிடிக்கல. அதுனால அவன் குடுமபத்தோட வெளியபோயிட்டான். போயிட்டு திரும்ப வந்தப்ப அவங்க போயிட்டு இருந்தாங்க. அவன் அம்மாவை கிண்டல் அடிச்சான் .
வந்தானே இப்பவாவது பணம் கொடுத்தானான்னு கேட்டான் அதுக்கு அம்மா சொன்னாக போய் அனுப்புறேன்னு சொன்னாண்டான்னாகஇவன் சொன்னான் மறுபடியும் அதேகதையா அவன் சத்தியமா அனுப்ப மாட்டான்னு சொன்னான்.
ஆனா அம்மா சொன்னாங்க அவன் திருத்திட்டான் . அனுப்புவான்னு சொன்னாங்க,ஆனா சின்னவன் சொன்னதுதான் நடந்துச்சு. அவன் பணம் அனுப்பவேயில்ல. அப்புறமாத்தான் அம்மா சொன்னா இவன் வெளியபோயிருக்கையில ஏதோ பேப்பர்ல கையெழுத்தெல்லாம் வாங்குனான். எதுக்குன்னு தெரியல . எதுக்குன்னு கேட்டதுக்கு என்னமோ சொன்னான் புரியலன்னு சொல்லிச்சி
ஆனா ஒருவாரத்துல விசயம் வெளியவந்துடுச்சு. ஊருல இருக்குற வீட்டை அவன் பேருக்கு எழுதி வாங்கிட்டுப்போயிருக்கான்.
சின்னவன் அம்மாவைத்திட்டுனான். ஒனக்கு ஏதாவது அறிவிருக்கா. அவன் கேட்டா கையெழுத்துப்போட்டுறதா. அவன் ஒரு ஃபிராடு. பணம் அனுப்பிறேன்னு சொல்லி ஏமாத்துறவன். என்னா ஏதுன்னு பாக்கமாட்டியா ஏம்மா இப்படி ஏமாந்து நிக்கிற.ன்னான். அதுக்கு அம்மா அழுதா. அவன் இப்படிச் செய்வான்னு எதிரபாக்கலையே......புள்ளகுட்டிகளோட வந்திருக்கான் திருந்தியிருப்பான்னு நெனைச்சேன்னு அழுதா.
அதுக்கப்புறம் வக்கீலபாத்து பேசுனப்பதான் அவர் கோர்ட்டுல மனு கொடுக்கச் சொன்னாரு பெற்றோரை கவனிக்கலன்னு கேஸ் போடுவோம் அவங்க பணம் கொடுக்கச்சொல்லி ஆடர் போடுவாங்க அதை அவன் மீறமுடியாதுன்னுஅது விசாரணைக்கி எடுத்துத்தான் இங்க வரச்சொல்லிருக்காக.
இப்ப சின்னவன் சொன்னான்” அம்மா மறுபடியும் ஏமாந்திராத ஸ்ட்ராங்கா சொல்லு. அவன் செஞ்சதைன்னு ச்சொல்லுன்னு திரும்பத் திரும்பச் சொன்னான்,
அம்மா உள்ளற போனாங்க அவனும் வந்திருந்தான் அவனோட மகள்களோட . அவன் மகள்கள் பாட்டியக்கண்டவுடன் ஓடி வந்து ஒட்டிக்கிச்சுக. அம்மாவுக்கு ஒரே சந்தோசம் உள்ளாற கூப்புட்டுப் போய் விசாரணை நடந்துச்சு
விசாரணை முடிஞ்சி அம்மா வெளிய வந்தாக வெளிய வரும்போது மூத்தவன் சிரிச்சிட்டேபோனானான். அவன் மகளுக பாட்டிக்கு டாட்டா காமிச்சாக. அம்மாவும் சிரிச்சிட்டே டாட்டா காமிச்சான்...
சின்னவனுக்கு இது உறுத்துச்சு. ஏம்மா உள்ளாற ஒழுங்காச் சொன்னியான்னு கேட்டான். அதுக்கு அம்மா சொல்லிச்சி உள்ளாற போறதுக்கு முன்னாடியே விசயம் முடிஞ்சிடுச்சுடா. அவன் ஒத்துக்கிட்டான்ன்னு சொன்னா.
இவனுக்கு பகீர்ன்னு இருந்துச்சு என்னா சொல்ற ம்மான்னான். அம்மா சொல்லிச்சி ”அவன் உள்ளாற்போறதுக்கு முன்னாடி என்னப்பாத்தான் இந்தமாசக்காசைக்குடுத்துட்டுச்சொன்னான். அம்மா என்னை மன்னிச்சிரு. கோர்ட் ஆடர்போட்டு நான் பணம் கொடுத்தா அது நம்ம குடும்பத்துக்கே அசிங்கம். இனிமே ஒழுங்கா நான் பணம் குடுத்துடுறேன் இது என் மகள்கள் மேல் சத்தியம் ந்னு சத்தியம் பன்னுனான். அப்பவே தெரிஞ்சிடுச்சி அவன் திருந்திட்டான்னு ,அந்த பிள்ளைகளைப்பாத்தா பாவமாவேற இருந்துச்சு.
அதுனால உள்ளாற கேட்டப்ப எங்களுக்குள்ள நாங்க சமரசம் ஆகிட்டோம் இனிமே அவன் என்னை கவனிச்சிக்குவான்னு
சொன்னேன். அதை எழுதிகையெழுத்து வாங்கிட்டாங்கன்னு சந்தோசமா சொன்னா
சின்னவனுக்கு அழுகுறதா சிரிக்கிறதான்னு தெரியல. அம்மா அவன் ஒன்னை திரும்ப டிராமாபோட்டு ஏமாத்திட்டான். கேசுல இருந்து தப்பிச்சிட்டான். மறுபடியும் பழைய கதைதான் ஏம்மா இப்படி இருக்க எத்தனை மொறை ஏமாந்தாலும் அதையே திரும்பத் திரும்பச் செய்யிறன்னு கோவமாச்சொன்னான் அம்மா கண்ணுல இருந்து தண்ணிவந்துருச்சு.
நான் ஏமாறல. தெரிஞ்சுதான் செஞ்சேன். எனக்கு வயசாய்டுச்சு. நான் இருக்கப்போறது கொஞ்சநாள்தான். அங்க அவனை குத்தம் சொன்னா பணம் வேன்னா கெடைக்கும் ஆனா குடும்பம் செதஞ்சிடும். அப்பா பேரு கெட்டுப்போகும். அதுக்குமேல அவன் ரெண்டு பொண்ணுக வைச்சிருக்கான். என் வார்த்தைகள் என் பேரப்பிள்ளைகளை பாதிச்சிரக்கூடாது.
. உனக்கும் சிரமம்னா சொல்லு. நான் அனாதை ஆசிரம் போயிடுறேன் ,தன்னோட மகன்பழிச்சொல்லுக்கு ஆளாகிறத எந்த அம்மாவும் விரும்பமாட்டான்னு கண்ணீர்வழியச்சொன்னா.
சின்னவன் சொன்னான் அம்மா அப்படிச்சொல்லாத எனக்கு சிரமம் ஏற்கனவே பழக்கப்பட்டதுதான் நான் ஒருத்தன் தான் ஒனக்கு மகன்ன்னு நெனச்சிக்கிறேன். நீ என்னோட இருக்குறதே எனக்குப்போதும் அது பலகோடி ரூவாய்க்கி சமம். நீதான் என்னோட பலம் சொத்து எல்லாம்ன்னு கண்ணுல நீர்வழியச்சொன்னான்
அம்மா கண்ணும் கலங்கிடுச்சு. மகனைப்பெருமையோட அணைச்சிக்கிட்டா
(பின் குறிப்பு முழுக்கற்பனை அல்ல)
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்