சாது ஒருவர் காட்டில் சென்று கொண்டிருந்தார். நா வறண்டு தாகம் ஏற்பட்டது. அருகில் இருந்த குளத்தில் இறங்கினார். தண்ணீரை கைகளில் அள்ளும் போது தண்ணீருக்குள் ஒளிந்திருந்த முதலை சாதுவின் கால்களை தனது கால்களால் கவ்விப் பிடித்தது. சாது பயந்துபோனார். முதலை பேசியது.
'சாதுவே! இந்தக் குளம் என் ஆளுகைக்குட்பட்டது. இதில் இறங்குபவர்களை நான் தின்றுவிடுவேன். இன்று நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்', என்றது முதலை.
'முதலையே! மரணத்தைக் கண்டு பயப்படவில்லை. என் குருகுலத்தில் படிக்கும் சீடர்களுக்கு கல்வி இன்னமும் நிறைவுபெறவில்லை. நான் இறந்துவிட்டால் அவர்களின் படிப்பு பாதியில் நின்றுவிடும். அந்தக் கவலைதான் என்னை வாட்டுகிறதே தவிர உயிரை இழப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை', என்றார் சாது.
யோசித்தது முதலை.
'சாதுவே! உங்களை உயிரோடு விடுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் தினமும் குளத்திற்கு எதிரில் அமர்ந்துகொள்ள வேண்டும். தாகத்தோடு வருபவர்கள் குளத்தில் இறங்க பயப்படுகிறார்கள். அவர்களிடம் குளத்தைப் பற்றி பெருமையாகச் சொல்ல வேண்டும். அவர்கள் குளத்தில் இறங்குவார்கள். பிறகு நான் அவர்களை கொன்று தின்றுவிடுவேன். இதைச் செய்வதாக சத்தியம் செய்து கொடுத்தால் உங்களை விடுவிக்கிறேன். அதே போல சத்தியத்தை மீறினால் கொடுத்த வாக்கை காப்பாற்றாத பாவம் உங்களை வந்தடையும்', என்றது முதலை.
ஏற்றுக்கொண்டார் சாது. சத்தியம் செய்து கொடுத்தார். முதலை அவரை விடுவித்தது. அங்கிருந்து புறப்பட்டார். செய்து கொடுத்த சத்தியத்தின் படி அடுத்த நாள் குளக்கரைக்கு வந்தார். எதிரில் அமர்ந்தார். சற்று நேரத்தில் ஒரு செம்படவன் வந்தான். சாதுவிடம் பேசினான்.
'ஐயா! நான் மீன் பிடிப்பதற்காக வந்திருக்கிறேன். இந்தக் குளத்தில் வலை வீசினால் அதிகமாக மீன்கள் கிடைக்குமா?' என்று கேட்டான்.
'மீன் பிடிப்பானே! இந்தக் குளம் மிகவும் பெருமை வாய்ந்தது. ஆனால், உன் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இந்தக் குளத்தில் வசிக்கும் முதலையிடம் கேள். உன் கேள்விக்கு முதலையிடம் பதில் கிடைக்கும், என்றார்.
இந்தக் குளத்தில் முதலை இருக்கிறதா? ஐயோ!, என்று கத்தியவாறு ஓட்டம் பிடித்தான். இதைப் பார்த்த முதலை குளத்திலிருந்து வெளியே வந்தது.
'சாதுவே! இதுதான் சத்தியத்தை காப்பாற்றுகிற லட்சணமா? நீங்கள் அவனிடம் என்ன சொன்னீர்கள்? அவன் ஏன் ஓடுகிறான்?' என்று கோபத்தோடு கேட்டது.
'முதலையே! குளத்தைப் பற்றி பெருமையாகத்தானே சொன்னேன். நான் சத்தியத்தை மீறவில்லை', என்றார் சாது.
உடனே தன்னுடைய குட்டியை கூட்டி வந்தது முதலை.
'சாதுவே! இது என் குட்டி. நீங்கள் அணிந்திருக்கும் துண்டில் இதை மூட்டையாக கட்டி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வருபவர்களிடம் என்ன பேசுகிறீர்கள் என்பதை குட்டி கேட்டுக் கொண்டிருக்கும். ஜாக்கிரதை!' என்று சொல்லிவிட்டுச் சென்றது.
சாதுவின் பக்கத்தில் மூட்டையில் குட்டி இருந்தது. அன்று அதன் பிறகு யாருமே அந்தப் பக்கம் வரவில்லை. அடுத்த நாள் ஒரு வழிப்போக்கன் வந்தான். அவன் கையில் ஒரு பை இருந்தது.
'சாதுவே! இந்தப் பையில் தங்க நகைகள் இருக்கின்றன. நான் குளத்தில் குளித்துவிட்டு வந்து வாங்கிக்கொள்கிறேன். இந்தக் குளம் குளிப்பதற்கு உகந்ததுதானே?' என்று கேட்டான்.
'வழிப்போக்கரே! நேற்று ஒருவன் இப்படித்தான் மூட்டையை என் பக்கத்தில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கினான். அவன் இன்னும் வரவில்லை. அவன் வந்தவுடன் அவனிடம் கேட்டுக்கொள்', என்றார் சாது.
'என்னது! நேற்று போனவன் இன்னும் வரலையா! குளத்தில் ஏதோ பிரச்னை இருக்கு!' என்று சொல்லிவிட்டு ஓடினான்.
கோபத்தோடு வெளியே வந்தது முதலை.
'முதலையே! நீ என்னிடம் கொடுத்த மூட்டையைத்தான் அவனிடம் சொன்னேன். நான் சத்தியத்தை மீறவில்லை', என்றார் சாது.
அடுத்த நாள் அந்த நாட்டு மந்திரி குளக்கரைக்கு வந்தார். உடன் சாதுவும் வந்தார்.
'சாதுவே! இந்தக் குளத்தில் குளிக்க வேண்டும். குளம் பாதுகாப்பானதா என்பதை கண்டுபிடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?' என்று கேட்டார்.
'மந்திரியே! குளத்திற்கு செல்லும் பாதையைப் பாருங்கள். மனிதர்கள் குளத்தை நோக்கி நடந்து சென்ற பாதத் தடங்களின் எண்ணிக்கையும், குளத்திலிருந்து திரும்பிய மனிதர்களின் பாதத் தடங்களும் சரிசமமாக இருந்தால் அந்தக் குளம் பாதுகாப்பானது', என்றார்.
குளத்தை நோக்கிச் சென்ற பாதச் சுவடுகள் மட்டுமே இருந்தன. குளத்திலிருந்து கரைக்குத் திரும்பிய பாதச் சுவடுகள் ஏதுமில்லை. ஏதோ பிரச்னை என்பதை புரிந்துகொண்டார். அங்கிருந்து நகர்ந்தார் மந்திரி.
குளத்திலிருந்த முதலை வெளியே வந்தது.
'சாதுவே! நீங்கள் சத்தியத்தை மீறிவிட்டீர்கள். குளக் கரையில் அமர்ந்து எனக்கு உணவாக வேண்டியவர்களை காப்பாற்றிவிட்டீர்கள். இது நியாயமல்ல', என்று கத்தியது.
'முதலையே! உன் பார்வையில் உன் கோபம் நியாயமானது. ஆனால் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவதா? அல்லது தர்மத்தை பின்பற்றுவதா? இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை சற்று கடினமானது. உனக்கு மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் விதுரர், தர்மபுத்திரனைக் காப்பாற்றிய நிகழ்வைக் கூறுகிறேன். கேள்!'
திரெளபதி சுயம்வரத்துக்கு முன்பாக பாண்டவர்களை வாரணாவதம் என்ற நகருக்கு அழைத்து தான் கட்டிய மாளிகையில் தங்க வைக்க துரியோதனன் முடிவு செய்தான். அந்த மாளிகை எளிதில் தீப்பற்றக்கூடிய அரக்கு, மெழுகு, சணல் ஆகியவற்றால் கட்டப்பட்டிருந்தது. துரியோதனனின் அறிவுரைப்படி அதைக் கட்டியவன் புரோசனன். பாண்டவர்கள் அங்கு தங்கும் போது, சரியான தருணத்தில், அதாவது பாண்டவர்கள் அசட்டையாக இருக்கும் காலத்தில் அந்த மாளிகையை தீயிட்டு கொளுத்தி உள்ளே இருக்கும் பாண்டவர்களை கொன்றுவிட வேண்டும் என்பது துரியோதனனின் திட்டம். இதை நிறைவேற்றும் பொறுப்பு புரோசனனுடையது.
இதை அறியாத பாண்டவர்கள் வாரணாவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லோரிடமும் விடைபெற்று தங்களது பிரயாணத்தை துவங்கும் நேரத்தில் விதுரர் அங்கு வந்தார். தர்மபுத்திரரிடம் பேசினார்.
'தர்மபுத்திரா! தேகத்தை அழிப்பது உலோகத்தினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மட்டுமல்ல. இதை அறிந்தவனை அவனது பகைவர்களால் கொல்ல முடியாது. மரங்களை அழிப்பதும், குளிரை நீக்குவதுமான நெருப்பு பூமிக்கடியில் வலைக்குள்ளே வசிக்கும் எலியை நெருங்காது. உலோகத்தினால் செய்யப்படாத ஆயுதம் தன் மீது பிரயோகிக்கப்பட்டால், அதையே எதிரி மீது திரும்ப பிரயோகிப்பவன் தாக்கும் தந்திரம் அறிந்தவன். காட்டுத் தீயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முள்ளம் பன்றி தரையிலேயே குகை தோண்டி அதனுள்ளே புகுந்துவிடும். நடுநிசியில் நடப்பவன் நட்சத்திரங்களைக் கொண்டு தான் செல்லும் திசையை அறிந்து கொள்ளலாம். இவையெல்லாம் சாதாரண ராஜநீதி சூத்திரங்கள்', என்று கூறினார்.
நான் புரிந்துகொண்டேன் என்று தர்மபுத்திரர் சொன்னார்.
பாண்டவர்கள் புறப்பட்டார்கள். அப்போது குந்தி தேவி, தர்மபுத்திரரிடம் பேசினார்.
'தர்மா! விதுரர் ஏதேதோ சொன்னார். நீயும் புரிந்து கொண்டதாகப் பதிலளித்தாய். அது என்ன விவரம்', என்று கேட்டார்.
'தாயே! தீயினால் நமக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்றும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள, பூமிக்கடியில் சுரங்கப்பாதையை அமைத்துகொள்ள வேண்டும். நட்சத்திரங்களைப் பார்த்து, அதாவது இரவு நேரத்தில் திசையை அறிந்து பயணம் செய்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று விதுரர் நமக்கு மறைமுகமாக சொல்லியிருக்கிறார்', என்று சொன்னார். பிறகு அனைவரும் வாரணாவதத்திற்கு புறப்பட்டார்கள்.
வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் தங்கினார்கள். பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிட்டார்கள் அந்த மாளிகையா சதியால் கட்டப்பட்டது என்று. தர்மபுத்திரர் பேசினார்.
'மாளிகையை எரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் இப்போதே நாம் தப்பித்தால் நம்மைக் கொல்ல துரியோதனன் வேறு வழிகளில் முயற்சி செய்வான். ஆட்சி, அதிகாரம் அவனிடம் இருக்கிறது. நமக்கு உதவ யாரும் வரமாட்டார்கள். நாம் புரோசனனின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும். அந்த நேரத்தில் சுரங்கப் பாதை வெட்டி அதன் வழியே தப்பிச் செல்ல வேண்டும். அதன் பிறகு உரிய நேரம் வரும் வரை தலைமறைவாக வாழ்வோம்', என்று தர்மபுத்திரர் யோசனை கூறினார். அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
அதன் பிறகு கனகன் என்பவனை விதுரர் அனுப்பினார். அவன் சுரங்கப்பாதையை வெட்டி முடித்தான். தர்மபுத்திரர் பேசினார்.
'இந்த மாளிகைக்கு நாமே தீமூட்டிவிடுவோம். புரோசனனால் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்மணிதான் நமக்கு சமைத்துப்போடுகிறாள். சமைக்கும் பணியை மட்டும் அவள் செய்யவில்லை. நம்மை வேவு பார்ப்பதும் அவளது வேலை. அவளது ஐந்து பிள்ளைகளும் இங்கேயே தங்கியிருகிறார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது மாளிகைக்கு தீமூட்டுவோம். கருகிய அவர்களின் உடலைப் பார்த்து நாம் ஐந்து பேரும், நமது தாயாரும் இறந்துவிட்டதாக செய்திகள் பரவும். புரோசனனும் அந்தத் தீயில் இறந்து போவான். நம் மீது யாருக்கும் சந்தேகம் வராது. நாம் தப்பிச் சென்றுவிடுவோம். காலம் கனிந்துவரும் வரை சில காலம் தலைமறைவாக இருப்போம்', என்று சொன்னார். பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
அரக்கு மாளிகைக்கு பாண்டவர்களே தீ மூட்டினார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே சமையல் செய்த பெண், அவளுடைய ஐந்து மகன்களும் எரிந்து போனார்கள். அவர்களின் உடலைப் பார்த்து பாண்டவர்களே இறந்தவர்கள் என்று எல்லோரும் நினைத்தார்கள். துரியோதனனும் அப்படியே நினைத்தான். பாண்டவர்களுக்கு ஈமக்கிரியைகளும் செய்து முடிக்கப்பட்டன.
அங்கிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் சுரங்கப்பாதையின் வழியாக வெளியேறி காட்டைக் கடந்தனர். விதுரரால் ஏற்பாட செய்யப்பட்ட படகோட்டி பாண்டவர்களை அக்கரையில் பத்திரமாக இறக்கிவிட்டான்.
சாது கதை சொல்வதை நிறுத்திவிட்டு முதலையிடம் பேசினார்.
'முதலையே! விதுரர், கெளரவர்கள் தரப்பில் இருப்பவர். தான் இருக்குமிடத்திற்குத்தானே அவர் விசுவாசமாக இருந்திருக்க வேண்டும்! அப்படியில்லாமல் பாண்டவர்களை ஏன் காப்பாற்ற வேண்டும்? அது கெளரவர்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதற்கு சமமல்லவா? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாம்'.
'விதுரர் தர்மதேவதையின் அம்சம். தர்மத்துக்கு எதிராக எதையும் செய்யமாட்டார். அவருக்கு முன் இருந்தவை இரண்டு வாய்ப்புகள். ஒன்று, உண்ட வீட்டுக்கு விசுவாசமாக இருப்பது. இரண்டு, தர்மத்துக்கு எதிரான செயலை ஏற்றுக்கொள்ளாமல் தர்மத்தை நிலைநாட்டுவது'.
'இந்த இரண்டு வாய்ப்புகளில் விதுரர் இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தார். சதியின் விவரங்களை நேரடியாகச் சொல்லவில்லை. மறைமுகமாக புத்தியுள்ளவன் பிழைத்துக்கொள்வான் என்ற அளவில் அவரது உபாயங்கள் இருந்தன. நேரடியாகச் சொல்லியிருந்தால்தானே அது துரோகம்!
புத்திசாலித்தனத்தோடு தனது வார்த்தைகளை முடிச்சுப் போட்டு தர்மத்தின் பக்கம் நின்றுவிட்டார்.
மற்றொரு முக்கியமான விஷயமும் கவனிக்க வேண்டியிருக்கிறது. போர் இல்லாத சூழலில் ஒரு பெண்ணையும், அவளது மகன்களையும் கொல்வதை தர்மம் ஏற்கவில்லை. ஆனால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் அந்த தர்ம மீறலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
விதுரர் சொன்ன வாசகங்களை துரியோதனன் தரப்பில் வேறு யாராவது சொல்லியிருந்தால், சொல்பவரின் நம்பகத்தன்மையை பொறுத்து, அலசி ஆராய்ந்து அந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், விதுரரின் நம்பகத்தன்மை கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்வதை செயல்படுத்தும் வாய்ப்பு தர்மபுத்திரருக்கு கிடைத்தது. நாம் புரிந்துகொள்ள வேண்டியது, தன்னை நம்பியவர்களுக்காக, அதாவது தன் வார்த்தைகளை நாம்பியவர்களுக்காக விதுரரின் தர்மம் செயல்பட்டிருக்கிறது.
இப்போது பிரச்னை 'உண்ட வீட்டுக்கு ஆதரவாக இருப்பதா? அல்லது தன்னை நம்பியவர்களை காப்பாற்றுவதா? ' என்று திசைதிரும்பிவிட்டது. தன்னை நம்பியவர்களை காப்பாற்றுவதே உயர்ந்த தர்மம் என்பதை இதிகாசங்களில் வரும் சிபிச் சக்கரவர்த்தியின் கதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. சிபிச் சக்கரவர்த்தியின் பாதையில் விதுரர் பயணித்தார்.
விதுரரின் இந்த முயற்சியில் கெளரவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் தர்மத்துக்கு வெற்றி கிடைத்துவிட்டது.
முதலையே! இதைப் போலத்தான் விதுரரின் வழியில் நானும் சென்றிருக்கிறேன். இங்கு வந்தவர்களுக்கு குளத்தைப் பற்றி பதில் சொல்லும் போது அதில் என்னுடைய நம்பகத் தன்மையும் சேர்ந்துவிடுகிறது. செய்து கொடுத்த சத்தியம் பெரிதா? என்னை நம்பியவர்களைக் காப்பாற்றுவது பெரிதா? என்ற கேள்விக்கு விதுரரின் வழியில் பயணித்தேன், என்று சொல்வதுதான் பதிலாக அமையும், என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.
அதன் பிறகு முதலை என்ன செய்தது? என்பது நமக்கு முக்கியமல்ல. நாம் புரிந்துகொள்ள வேண்டியது.....
ஒன்று, தர்மம் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும். அல்லது தர்மத்தின் பாதையில் பயணித்தவர்கள் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும்.
அன்புடன் சாது ஶ்ரீராம்