ரொம்பநாளா எல்லாப்பொண்ணுகளும் ஆவலுடன் எதிர்பாக்குற கல்யாணம் அவ எதிர்பார்த்தமாதிரியே
தடபுடலா நடந்துச்சு. பெரிய கல்யாண மண்டம் ஊருபூராம் அழைத்து மொதநாள் மாலை ரிசப்சன் அதில பொண்ணுக்கு 4 மணிநேர மேக்கப் மாப்பிள்ளை அழைப்பு ஆடி கார்ல முப்பதுவகை ஐட்டத்தோட மெனு மறுநாள் காலையில 30 வகை டிபன்னு கலக்கிட்டாங்க. கல்யாண ஜோடிப்பொருத்தைப் பாராட்டாத ஆளே இல்லை அப்புடி அமைச்சிருந்தது ஜோடி
எல்லாரும் சொல்லிகிட்டாக கண்ணன் ராதாபோல அவ்வளவுபொருத்தம்னு
பையனோட அம்மாகாரிக்கும் அப்பாவுக்கும்
மொகமெல்லாம் சந்தோசம்தான் பொருத்த மான பொண்ணைத்தேடிப்புடிச்சி கட்டி வைச்சிட்டோம் னு திருஸ்டி கழிக்கும்ப்போது மொளகா பட படன் னு வெடிச்சிது அத்தாடி எம்புட்டுக்கண்ணுன்னு
தாடையில இடிச்சிக்கிட்டாக பாத்தவுக
நல்ல படியாகலியாணம் முடிஞ்சிது
மறுவீடும் வந்தாச்சு எல்லாருக்கும்
கெடாக்கறியோட பிரியாணி இடியாப்பம் மட்டன் சுக்கா ஸ்வீட்டுன்னு மாப்பிள்ளவீட்டுல விருந்து நல்லச்சாப்புடுங்கன்னு அள்ளி அள்ளி கறித்துண்டப்போட்டாகவிருந்தும் திருப்தியா முடிஞ்சது
வழக்கப்படி அத்தகாரிய ராத்திரி ஏற்பாடக் கவனிக்கவிட்டுபுட்டு பொண்ணோட அம்மா அப்பா தொணைக்கி நாத்துனார கூடவைச்சிட்டு கெளம்புனாக பொண்ணும் அம்மா அப்பாவும் கண்கலங்கமூஞ்சிகோணிஅழுதுபோய்ட்டுவாங்கன்னா பொண்ணு
எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு ரகசியமா பொண்ணுக்கு சொல்லவேண்டியதெல்லாம் சொல்லியாச்சு பால்சொம்பக்குடுத்து
கேலியும்கிண்டலுமா உள்ள அனுப்புனாக
வழக்கம்போலத்தான் எல்லாத்தையும்
நீயே குடிச்சிறாத அவருக்கும் கொஞ்சம் குடும்மா அவரு எங்க இதைக்குடிக்கபோறாருன்றமாதிரி
அவளும் வெக்கத்தோட உள்ளாரபோனா
உள்ள அனுப்பிக் கதவைச்சாத்தினாக பொழுது விடியறதுக்கு முன்னாடி அஞ்சு மணி வாக்கில பொண்ணு வெளியவந்து அத்தகாரிய எழுப்புனா
”உடனே கெளம்பு நம்மவீட்டுக்கு”ன்னு
”என்னாடியம்மா இன்னம் விடியக்கூட இல்ல
அதுக்குள்ள கெளப்புற எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல்லன்னா”
அதுக்கு பத்மாசொன்னா” அதெல்லாம் வீட்டுல போய் பேசிக்கலாம் உடனே கெளம்புறீயா இல்ல நானே போகட்டுமான்னா” அத்தகாரிக்கித்
தூக்கிவாரிப்போட்டுது ”என்னாடியம்மா
சொல்ற ஏதாவது பிரச்சனையான்னு”
“ஆமா வீட்டுக்கு வாசொல்றேன் இப்பக் கெளம்புன்”னு ஒத்தக்கால்ல நின்னா
அத்தகாரி சம்பந்தியம்மாவைக்கூப்புட்டு
”பொண்ணுக்கு வயத்துவலியாம் நாங்க
விடியறதுக்கு முன்னாடி போய்ட்டு
தெரிஞ்ச டாக்குட்டறப்பாத்துட்டு
வந்துறோம்”னு நாசுக்காச்சொல்லிட்டுக்
கெளம்புனாக
சம்பந்தியம்மாவுக்கு ஒன்னும் புரியல ஏதோ மறைக்கிறாகன்னு தெரிஞ்சது சரிபோய்ட்டு வரட்டும்ன்னு நம்ம புள்ளைய விசாரிச்சா தெரியப்போகுதுன்னு விட்டுட்டாக
பத்மா வீட்டுக்குவந்ததும் அம்மாவைக் கட்டிப்புடிச்சி அழுதா ”என்னா”ன்னு கேட்டதுக்கு ”அம்மா நம்மல ஏமாத்திட்டாகம்மான்னா”
”வெவறமாசொல்லுடி”ன்னு கேட்டதுக்கு அவ தயங்கித்தயங்கிச்சொன்னா “அவரு கலியாணம் பண்ணத்தகுதியில்லாதவரும்மா”ன்னா
அம்மா காரி ”கொஞ்சம் முன்னப்பின்ன
இருக்கத்தான் செய்யும் சரியாயிடும்மா”ன்னா
பத்மா சொன்னா
”அதுக்கு வாய்ப்பே இல்லம்மா
அவருக்கு ஒருஆக்சிடண்ட்ல அப்பாவாகுற
தகுதிபோய்டுச்சாம் அவரே சொல்றாரு
ஆனா வீட்டுக்குத்தெரியாதாம்”ன்னா
”அடப்பாவிகளா இப்புடியுமா இருப்பாகன்னு மகளைக்கட்டிப்புடிச்சி அழுதா அம்மா
அதுக்குள்ள சம்பந்தியம்மா போன்
பண்ணாங்க” உங்க கால்ல வுழுந்து மன்னிப்புக் கேட்டுக்கிறோம் எங்களுக்கு விசயம் தெரியாது
எங்களை செருப்பாலகூடவந்து அடிங்க
நாங்க பெரியதப்புப்பண்ணீட்டோம்
செலவப்பூராம் குடுத்துடுறோம்
பத்திரத்துலகையெழுத்துப்போட்டுக்குடுத்துடுறோம்எங்களை மன்னிச்சிடுங்கன்னு” அழுதாக
என்னசொல்றதுன்னு தெரியல பத்மாவோட
அம்மாவுக்கு” உன் நெலமை இப்புடி ஆயிடுச் சேன்னு மகளைக்கட்டிப்புடிச்சி அழுதா”
அம்மா
விசயம் கேள்விப்பட்டஅப்பா வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சாரு ”அவங்கமேல கேஸ் போடனும்”ன்னாரு
பத்மா சொன்னா
”வேணாம் மொத்த தப்பும் அவரோடது அவங்க அம்மா அப்பாபாவம் அவுக என்ன பண்ணு வாகப்பா ஒலகம் ரொம்பப்பெருசு எனக் கேத்த மாப்புள்ள நிச்சயம் கெடைப்பாரு நாம் கும்புடுற சாமிஇனிமே கைவிடாது காப்பாத்தும்”ன்னு
தீர்மானமா சொன்னா அப்பாகிட்ட
அதுக்கு அப்பா சொன்னாரு” ஏம்மா தெரிஞ்சிதான் பேசுறீயா மொதல் கல்யாணம் செய்யிறதே பெரிய விசயம். ரீ மேரேஜ்னு சொன்னாலே அதுல எவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா நீ சின்னப்பொண்ணூ ஒனக்குப்புரியாது” ந்னார்
அதுக்கு அவசொன்னா” அப்பா நல்ல வேளை ஒடனே தெரிஞ்சது அதைச்சொல்லாம சில இடங்கள்ல பொண்ணுக மேல பழிய சொமத்தி மலடுன்னு பேரையும் கொடுத்துக் கொல்லாமக் கொல்லுவாங்க இவங்க பரவாயில்ல தப்புன்னு தெரிஞ்சவன்ன சொல்லி மன்னிப்பும் கேக்குறாங்க பாவம்பா அவங்க என்ன செய்ய முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கு என்னையப் புரிஞ்சிக்கிட்டவர் நல்லவர் ஒருத்தர் கிடைப்பார்னு நம்பிக்கை இருக்குப்பா கவலை படாதீங்க” நு தைரியமா சொன்னா
அதைக்கேட்டு அவளோட அப்பாவின் கண்கள் கசிந்தாலும் இந்தக்கால பொண்ணுக தைரியத்தபாத்து பெருமையா இருந்துச்சு
ஆனா அவளோட அம்மாவுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல கண்ணீர் விடத்தான் தெரிஞ்சது
”அவங்களுக்கு இது புரிய கொஞ்சநாளாகும் ஆனா புரிஞ்சிப்பாங்க காலப்போக்கில நு சொன்னா ”பத்மா.
அதேநேரத்துல பத்மாவை கல்யாணம் செஞ்சி தனக்கு ஆண்மையில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டவனின் கைகளைப் பிடித்து கண்ணீரால் நனைத்துக்கொண்டிருந்தான் பத்மாவின் காதலன்
“ எனக்காக எவ்வளவு பெரிய பழிய ஏத்துக்கிட்டு இருக்க எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதுன்னே தெரியல நானும் அவளும் ஒருவரை ஒருவர் உயிராக்காதலிக்கிறோம் நான் அவளை முறைப்படி மணந்து கொள்ள விரும்பி அவளோட அம்மா அப்பாவிடம் கேட்டேன். ஆனா அவர்கள் என்னுடைய பொருளாதாரத்தையும் சாதியையும் சொல்லி ஏற்கவில்லை அவளுக்கு உங்களோடு கல்யாணமும் பேசினார்கள். அப்போது நான் உங்களைச்சந்தித்து பேசியபோது நீங்கள் சொன்னீர்கள் உங்க பத்மா உங்களுக்குத்தான் அதற்கு நான் பொறுப்பு என்று சொன்னதோடு செய்தும் காட்டிவிட்டீர்கள் நீங்க தெய்வம் சார்”
அதற்கு அவர் சொன்னார் உங்களை மனமாறக்காதலித்துவிட்டு என்னுடன் அவள் எப்படி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்த முடியும் அது நரக வாழ்க்கை பல பெண்களின் வாழ்க்கை அப்படி அமைந்து விடுகிறது இதில் எனக்கும் கொஞ்சம் சுயநலம் தான் என்னைப்பிடித்த பெண்ணை நான் கல்யாணம் செய்துகொள்ளலாம் அல்லவா” என்றார்
எது எப்படி இருந்தாலும் நீங்க எங்களுக்குக் கண்கண்ட தெய்வம் சார்னு சொல்லி கண்ணீர் விட்டார் பத்மாவின் காதலன்
அவனை ஆதர்வோடு அணைத்துக்கொண்டு சொன்னார் “ ஓகே ப்ரோ விரைவில் உங்கள் திருமணம் நடைபெற வாழ்த்துகள் என்று வாழ்த்தினார் அந்த நல்ல உள்ளம்
அ.முத்துவிஜயன்