சப்பாத்திக் கள்ளிப்பழம் - சிறுகதை

By செய்திப்பிரிவு

ரொம்பநாளைக்கி அப்புறம் அந்த ஊருக்கு அவன் வந்துருந்தான் . அந்த ஊருக்கு ஒரே பஸ்தான் அது பெரிய பஸ்டாண்டுல இருந்து கெளம்பி இந்த ஊருக்கு வந்து ஆளுகளை எறக்கிவிட்டுட்டு அதுல வந்த கண்டக்டர் டிரைவருகபாய்கடையில ஒரு டீ குடிச்சி தம்கட்டிட்டு திரும்ப பஸ் எடுத்துக் கிட்டுப் போவாக

அவனுக்கு நெனவு தெரிஞ்சநாள்ல இருந்து இன்னிக்கிவரைக்கும் அதேதான் அதுல மாத்தமில்ல. அந்த ஊருக்கு ரோடு வளைஞ்சி நெழிஞ்சி போகும் அதுல பெரிய பஸ் எல்லாம் வரமுடியாது. டிப்போவில பழசான பஸ்தான் அங்க வரும். எல்லா பஸ்ஸும் வரும்போது இது தனியாத்தெரியும்.

 இந்த ஊருக்காரவுக "ஏ அம்ம பஸ்சூ பின்னாடி வருதுடி பைகளைத் தூக்குங்கடி "ன்னு சொல்லிட்டு ஓடுவாக
இவனும் அந்தபஸ்லதான் வந்து எறங்கத் தயாரானான். அது வந்து அக்கிராகாரத்து தெருவுக்குள்ள போய் பின்ன ரிவர்ஸெடுத்து வந்த வழிபாத்து திருப்பி நிறுத்தி டிரைவர் புஸ்ன்னு வண்டிய ஆப் பண்ணிட்டு எறங்குவாரு.

பஸ் திரும்பும்போதே அவள இவன் பாத்துட்டான் . நாளைஞ்சி பிள்ளக நண்டும் சிண்டுமா. அதோட அம்மா முப்பது வயசுல இவளோட மகளா இருக்கனும் இவ தல நரைச்சி மூஞ்சி சுருங்கி நல்ல பாட்டியா தெரிஞ்சா.

இவன் கீழஎறங்கும்போது" ஆரு இன்னார்தான நல்லா இருக்கியாப்பா. புள்ள குட்டியெல்லாம் நல்லாருக்கா"ன்னு கேட்டுக்கிட்டே ஏறுனா. பஸ்ல ஏறிக்கிட்டே சொன்னா "மகள இங்கதான் கட்டிக்குடுத்துருக்கு அதான் எல்லாத்தையும் லீவுக்கு வந்து ஊருக்குக்கூட்டிட்டுபோறேன்" பஸ்ல இன்னம் டிரைவர் ஏறல அதுனால பஸ் கீழ நின்னு சொன்னான்" எல்லாம் நல்லா இருக்காக நீ எப்படி இருக்க" ந்னான்...

அதுக்கு" நான் கெடக்கேன் நேரம் வராம. என்னத்தையோ சீவன வைச்சிக்கிட்டு இப்பயோ அப்பயோன்னு நாளத் தள்ளிக்கிட்டு இருக்கேன்"னா. அவ.

அவ வயசுல நல்ல வலுவாஇருப்பா.ஆம்பளைக மாதிரி வேலை செய்வா. வெளையாட்டும் ஆம்பளைபிள்ளக கூடத்தான் குண்டு கிட்டிபுள்ள பேந்தா டியான் டியான் எல்லாம் வெளையாடுவா சேத்துக்காட்டி சண்ட போடுவா. அதுக்கு எம்புட்டுத்தடவ அவ ஆத்தா அப்பன் அடிச்சாலும் உதித்திட்டு கெடக்குறாக அவுக ந்னு சொல்லிட்டி வெளையாட வந்துருவா. பள்ளிக்கொடம் எல்லாம் அவ போகல.
பகல்ல அவுகவீட்டுல நாலு ஆட்டுக்குட்டி அப்புறம் ரெண்டு மாடுகண்ணுக இதெல்லாம் பத்திக் கிட்டுப்போய் மொட்ட மலையில கரடுல மேய்ச்சிட்டு சாயங்காலம்தான் வருவா அவளோட தங்கச்சியும் அவகூடப்போவா அப்ப அவளுக்கு 15வயசுஇருக்கும் தங்கச்சிக்கி  ஒம்போதோ பத்தோ இருக்கும்   இவன் ஊருக்குப் போறப்ப பாத்துருக்கான் அம்புட்டுதான். இவனுக்கு அப்ப 14 வயசுதான் இருக்கும் 9ஆப்பு படிச்சிட்டு இருந்தான் லீவுக்குத்தான் அந்த ஊருக்குப்போறது.

அப்புடித்தான் ஒரு தடவ லீவுக்குப் போயிருந்தப்ப அவ கூப்புட்டா" வாறீயா ஒனக்கு மொட்டமலை புல்லூத்து எல்லாம் சுத்திக் காமிக்கிறேன் நாங்க அங்கதான் மேயச்சலுக்குப்போறது"ன்னா.

இவனுக்கும் ஆசைதான் அங்க எல்லாம் போனதே இல்ல. விடமாட்டாக. வையிவாக அதுனால இல்ல என்னால வரமுடியாது வீட்டுல வைஞ்சு புடுவாக ன்னான்

அதுக்கு அவ சொன்னா" அதெல்லாம் சகசம் நா வாங்காத வையா. அதெல்லாம் தொடச்சிப் போட்டுறனும். இல்லாட்டி நம்ம இஸ்ட்டத்துக்கு இருக்க முடியாது"ன்னா.

"சரி உங்க கூடஇப்போ  வரமுடியாது அப்புறமா வாறேன் நீங்க எங்குணக்குள்ள இருப்பீக”ன்னான். அதுக்கு
“மத்தியானம் வரை அந்த ஓணாங் கல்லுக் கிட்டத்தான் இருப்போம் அப்புறம்தான் மொட்டமலைக்கி போவோம் நீ ஓணாங் கல்லுக்கு வந்துரு”ன்னா.

“ஓணாங் கல்லா அது எங்குன இருக்கு” ன்னான்
”ஊருல இருந்து போற ஒத்தையடிப்பாதையில வந்தா செவன் கோயில் வரும். அதத் தாண்டினா கடலக்காடு கடலக்காடு தாண்டி வந்தா ஒத்தப்பாறையாட்டம் ஒரு கல்லு இருக்கும் அதான் ஓணாங்கல்லு அங்கதான் மேய்ச்சிக்கிட்டு இருப்போம் வந்துரு”ன்னா.
இவனும் ஒரு பத்துமணி வாக்குல வீட்டுல இருந்த முருக்க எடுத்து டவுசர் பைல போட்டுக்கிட்டு கொட்டாரத்துல லைப்ரரில படிக்கப்போறதா வீட்டுல சொல்லிட்டு கெளம்புனான்..

போறவழில செவன் கோயில் ஆளரவம் இல்லாம அமைதியா கெடந்துச்சு
அப்புறம் கடலைக்காடத் தாண்டி ஓனாக்கல்லுக்கு பக்கம் போனான் அங்கதான் அவளும் அவ தங்கச்சியும் இன்னம் ரெண்டு மூணுபேரும் ஆடு மாடுகளை மேய்ச்சிக்கிட்டு இருந்தாக அங்க இருந்த நாய் இவனப்பாத்ததும் கொலைச்சிச்சி... ”அவ ஏய் சும்மாரு மணி”ன்னு அதட்டுனா...

பக்கத்துலதான் அவங்களோட ஆடு மாடுக மேஞ்சிக்கிட்டு இருந்துச்சு.” வா பயப்படாம அது ஒன்னும் பண்ணாது”ன்னா. அங்க ஆலமரம் ஒண்ணு இருந்துச்சு அதுலதான் தூக்குப் போணிகளை தொங்க விட்டுருந்தாக.

இவன்” நான் முறுக்கு கொண்டாந்துருக்கேன் திண்ணுறீங்களா”ன்னு எடுத்துக்குடுத்தான் எல்லாத்தையும் வரச்சொல்லி ஆளுக்கு ஒன்னா எடுத்துக்குடுத்தா அவ. கொஞ்ச மிருன்னு சொல்லி ஒக்காரச் சொல்லிட்டு பக்கத்துல போய் கடுக்காப்பழமும் கோவப்பழமும் சப்பாத்திக் கள்ளிப்பழம் புடுங்கிக்கொண்டாந்து அத எப்புடித்திங்கிறதுன்னு சொல்லிக்குத்து  திங்கச்சொன்னா.
அப்புறம் புளியமரத்துல புளியங்காய உலுக்குனான் ஒருத்தன். அதுல கீழவுழுந்த புளியங்காயப் பொறக்கி அங்குனக்குள்ள இருந்த பாறையில கல்ல வைச்சி தட்டி அதுல உப்பு மொளகா வைச்சி அரைச்சி ஆலமரத்து எலையில வைச்சி குடுத்தா.

”திண்ணுடா இதெல்லாம் ஒங்க ஊருல பாத்துருக்க மாட்ட”ன்னா. அதைப்பாக்கும் போதே நாக்குல எச்சி ஊறுச்சு எடுத்து நாக்குல வைச்சவன்ன சுர்ருண்ணு மண்டையில ஒரப்பும் உப்பும் புளிப்பும் ஏறுச்சு. உண்மையில இப்ப நெனச்சாலும் நாக்கு ஊறுது.
“சரி வாங்க எல்லரும் புல்லூத்துக்குப் போகலாமுன்னு சொல்லி அதுல சின்னப்பய ஒருத்தன் கிட்ட டேய் எல்லாஆடு மாடு கன்னயும் பாத்துக்க. நாங்க போயிட்டு வந்துருவோம்”ன்னு சொல்லிட்டு ஒரு படையா கெளம்புனாக. அங்க அவதான் தலைவி அவ சொல்றத எல்லாரும் கேக்கனும்.

மொட்ட மலைமேல ஏறி அந்தப்பக்கம் எறங்குனா அங்க ஒரு ஊத்து அத ஒட்டி ஒரு கொளம் அதுல தாமரை எல்லாம் பூத்துக் கெடந்துச்சு... பாக்கவேஅம்புட்டு அழகு,   அங்க போய் அந்த ஊத்தப்பாத்தவன்ன குளிக்கனும்னு தோணிச்சி எல்லாரும் அதத்தான் செஞ்சாக. அஞ்சாறு பேரு அதுல இவளும் இவ தங்கச்சி மீதி மூணு சின்ன பயலுக . அந்தகொளத்துல கொட்டம் அடிச்சாக
இவனும் ஆசதீரக்குளிச்சான்.

அப்ப அவ கேட்டா” மீன் திம்பமா”ன்னு இவன் ”இங்க எப்புடி”ன்னு கேக்கவும்
“அதெல்லாம் ஒனக்கெதுக்கு திம்பியா”ன்னா. சரின்னு சொல்லவும் அவ மேல சும்மா போட்டிருந்த தாவணிய அவுத்து எல்லாத்தையும் கூப்புட்டு புடிக்கச்சொன்னா.

கொஞ்சம் கொஞ்சமா மீன் சேந்துச்சு. அதுல பொடி மீனுகள விட்டுட்டு கையளவு உள்ள பெரிய மீனுகள மாத்திரம் எடுத்து கருக்கருவாவ வைச்சி சுத்தப்படுத்துனா. அதுல உப்பு மொளகா அங்க ஒரு எடத்துல ஒளிச்சி வைச்சிருந்தா. அத எடுத்துத்தடவி சுல்லி வெறகுக்குச்சி எல்லாம் பொறக்கி தீ மூட்டி எல்லா மீனுகளையும் சுட்டா. அது வேகும் போதே வாசம் ஆளத்தூக்குச்சு.. வெந்தவன்ன ஒன்ன பிச்சி வாயில போட்டுட்டு ”ம்ம்ம் எல்லாம் சரியா இருக்கு”ன்னு சொல்லிட்டு அவனுக்கு எலையில சூடா குடுத்தா.
என்னா ருசி அந்த மீனுக்கு. வீட்டுல கூட மீன் கொழம்பு வைப்பாக. வறுப்பாக. ஆனா இந்த ருசிக்கு முன்னாடி அது ஒன்னுமே இல்ல. அதுக்குத்தோதா கொண்டாந்துருந்த கேப்ப கூழ தூக்குப்போணில இருந்து எடுத்துக் குடுத்தா கேப்பகூழு சுட்ட மீனு அப்புடி ஒரு ருசி தின்னதே இல்ல. எல்லாருக்கும் குடுத்துட்டு அவனுக்கு இன்னம் ரெண்டு குடுத்தா...

அவன் கண்ணுல தண்ணி வந்துச்சு.” இம்புட்டு பாசமா நம்மமேல”ன்னு அவ நெனச்சி கண்ணதொடச்சி விட்டா. இவனுக்கு ஒருமாதிரியா இருந்துச்சு.

”எல்லாரும் திண்ணுபுட்டு வெளையாடலாம் அப்பத்தான் தின்னது செமிக்கும் நு சொல்லி என்ன வெளையாட்டு?”ன்னு கேட்டாக.
 அப்ப அவ சொன்னா” இன்னிக்கி வீடு வெளையாட்டு ”நு சொல்லி ஒரு சதுரமா காலால கோடு வரைஞ்சா. ”அதுக்குள்ள இது அடுப்படி இது பட்டாசலை இது படுக்குற எடம்”னு சொன்னா.

”இப்ப நாந்தான் அம்மாவாம் நீதான் அப்பாவாம்” நு அவன் கிட்ட சொன்னா. அவன்
“நீ பெரியவ நான் எப்புடி அப்பாஆக முடியும்” னான் . அதுக்கு அவ சொன்னா
“ஒன்ன கலியாணமா பண்ணச் சொன்னோம் சும்மா வெளையாட்டுத்தான”ன்னா.
“சரி”ன்னு சொல்லவும்..

“சரி நான் வீட்டுல இருப்பனாம் நீங்கல்லாம் வேலைக்கிப்போய்ட்டு வருவீகளாம் சும்மா போய்ட்டு வாரமாதிரி வாங்க”ன்னா...
”எல்லாரும் கொஞ்சதூரம் போயிட்டு வந்தாக. சரி எல்லாரும் கையகால கழுவிட்டு கஞ்சி குடிக்க வாங்க”ன்னு சொன்னா. அதுமாதிரி பாவலா காட்டிட்டு வந்து ஒக்காந்தவன்ன எல்லாருக்கும் எலையப்போட்டு

“சும்மா இது மீனு இது கறி இது கோழி இது சோறு”ன்னு வைக்கிறமாதிரி பாவலா காமிச்சிட்டு சரி ”சாப்புடுங்க”ன்னா...
எல்லாரும் சாப்புடுறமாதிரி பாவலா பண்ணாங்க . ”சரி போய்கைகழுவிட்டு வாங்க”ன்னு சொன்னா. ”சரி எல்லாரும் போய் தூங்குங்க”ன்னா. எல்லாரையும்  அந்த பட்டா சலையில படுக்கச் சொல்லிட்டு ”நீ அப்பா நான் அம்மா நாம தனியாப் படுக்கனும்” ன்னா.

அப்ப இவன் கேட்டான் ”அது தப்பில்லயா”ன்னு
அதுக்கு அவ சொன்னா ஆமா ”இவரு மீச மொளைச்ச மைனரு நா வயசுக்கு வந்த பொண்ணு தப்பாயிடபோகுது.. நீ சின்னப்பய நானும் சின்னபுள்ளதான் இன்னும் வயசுக்குக்கூட வரல. சும்மா அங்க ஒக்காந்து பேசிக்கிட்டு இருக்குறதுதா”ன்னா.
இவனும் அந்த சதுரத்துக்குள்ள போய் அவளோட ஒக்காந்தான்.

“ஒனக்கு கைகால் புடிச்சி விடட்டுமா பாவம் வேலைக்குப் போய்ட்டு வந்து கைகால்லாம் வலிக்கும்”னா.
“வேணாம். அதெல்லாம் வலிக்கல நல்லாத்தான் இருக்கு”ன்னான். அவ விடல அவன ஒக்காரச்சொல்லி கால ப்புடிச்சி விட்டா சொகமாத்தான் இருந்துச்சு..

அப்புறமா ஒரு கேள்வி கேட்டாபாரு.. ”உண்மையிலயே என்ன விட ஒனக்கு வயசு அதிகமா இருந்தா என்ன கட்டிக்குவியாடா?”ன்னு அழாதகொறையா கேட்டா... இவன் சொன்னான் ”அதான் இல்லயே நான் சின்னப் பயதான”ன்னான்.
“அட ஒரு பேச்சுக்குகூட சொல்லமாட்டியா கட்டிக்குவேன்”னு பரிதாபமா கேட்டா.
இவன்

“சரி கட்டிக்குவேன்"னு சொன்னான் அப்ப பக்கத்துல வந்து என் தங்கம்னு நெத்தில ஒரு முத்தம் கொடுத்தா. இவன் அதிர்ந்துபோய் அவளைத்தள்ளிவிட்டான். அவ தூரப்போய் விழுந்தா..

விழுந்தவன்ன அவ அழுக ஆரம்பிச்சிட்டா. இவனுக்கு ஒருமதிரி ஆகிப்போச்சு. அவ வலில துடிக்கிறா. வயத்தைப்பிடிச்சிக்கிட்டு வலி தாங்காம அழுதா.

 ”இவன் அழாதக்கா நான் வேணும்னு தள்ளிவிடல”ன்னு அழமாட்டாத கொறையாச் சொன்னான்.
அவ ”அடப்போடா இது வேறடா. வாங்கடா எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்”முன்னு சொல்லிட்டு கெளம்புனா.. அப்ப அவ சொன்னா ”என்னால நடக்கமுடியல கொஞ்சம் ஒத்தாசையா உன் தோள் புடிச்சிட்டு வரவா”ன்னு கேட்டா, இவனுக்குப் பாவமா இருந்துச்சு
நடு நடுவில ஒக்காந்து மெல்ல வீடுவந்து சேந்தாங்க வார வழில அப்ப அப்ப இவன் தோள்ல சாஞ்சிக்கிட்டா. ஊரு வந்ததும்” நீ போ நான் போய்க்கிறேன்”னு சொல்லிட்டு போய்ட்டா.

அன்னிக்கி சாயங்காலம் அவ வீட்டுல ஒரே பொம்பளைக கூட்டம். அவ வயசுக்கு வந்துட்டாளாம். அவளோட அம்மா வீடு வீடா வந்து வெத்தலபாக்கு வைச்சி தண்ணி ஊத்த அழைச்சாங்க. அப்ப இவனோட அத்த சொல்லிச்சி அவங்க வீட்டுக்குப்போ ஒன்னக்கூப்புட்டாகன்னு

ஒரே பயமாப்போச்சு”. நாம தள்ளிவிட்டதால எதுவும் ஆயிப்போச்சோ”ன்னு பயந்துக்கிட்டே போனான். ஆனா அங்க அவளோட அப்பா சொன்னாரு” வாங்க மருமகனே இவளோட தாய்மாமன் வர லேட்டாகுமாம். இங்க மாமன்மச்சின மொறையில வேற ஆளுக இல்ல. அதுனால நீங்கதான் பெரிய மனசு பண்ணி குச்சு கட்டி விடனும்ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாரு.
”நானா”ன்னு இழுத்தான் . அதுக்கு அவர் சொன்னாரு

“பயப்படாதீக சும்மா ஒரு சாங்கியம்தான் நீங்க ஓலைய கையில எடுத்துக் குடுத்தாப் போதும்”ன்னாரு... அதுமாதிரி செஞ்சவன்ன வெத்தல ப்பாக்கு குடுத்தாக.
மறுநாள் ஊருக்குக்கெளம்பி வந்துட்டான்.

அதுக்கப்புறம் பாக்கையில எல்லாம் அவ கிண்டல் பண்ணுவா. ”வாங்க புருசன் எப்புடி இருக்கிக?”ன்னு.... இவனுக்கு ஒரு மாதிரியா இருக்கும்... சிரிச்சிட்டு வந்துருவான்... அதுக்கப்புறம் அவ கலியாணம் ஆகி வேற ஊர் போனதாக்கேள்விப்பட்டான்.
திரும்பநெனப்பு வந்து பாத்தப்ப அந்த பஸ் புழுதியக்கெளப்பிக்கிட்டு வளைஞ்சு போய்கிட்டு இருந்துச்சு... இவன் கண்ணுல அவன அறியாம கண்ணீர் வழிஞ்சிச்சி. இப்பப் புரியிது அவ உண்மையிலயே அவன விரும்பி இருப்பாளோன்னு.... காலம் புழுதிமாதிரி பறந்து இவன் கண்ணுல விழுக கூடுதலா தண்ணி வர ஆரம்பிச்சது.... தொடச்சிக்கிட்டு நடந்தான்.......

நன்றி அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE