விக்கிரமாதித்தன் கதைகள் - நால்வரை மணந்த சந்திரவாணன்?

By செய்திப்பிரிவு

முதலாம் படிக்கு காவலாக இருந்த வினோத ரஞ்சிதப் பதுமை ,  போஜராஜனே ! நந்தியாபுரம் என்ற நகரத்தில் சந்திரவாணன் என்ற அந்தணன் இருந்தான் .

அவன் நான்கு வேதம் , ஆறு சாத்திரம் , பதிணென் புராணம் , அறுபத்து நான்கு கலைகள் ஆகியவற்றை நன்கு கற்றிருந்தான் . மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல குருவைத் தேடி ஊர் ஊராக அலைந்தான் .

ஒரு நாள் காட்டு வழியாக சென்ற அவன் அங்கிருந்த பொய்கையில் நீராடினான் . அதன் கரையில் இருந்த அரச மரத்தடியில் தன் களைப்பு நீங்க படுத்தான் .

அந்த மரத்தில் நெடுங்காலமாக பிரம்ம ராட்சதன் என்ற முனி தவம் செய்து கொண்டிருந்தான் . மரத்தல விட்டு கீழே இறங்கிய அவன் மனித வடிவம் கொண்டான் .

சந்திரவாணனை எழுப்பி நீ யார் ? எதற்காக இந்த காட்டில் தனியாக வந்திருக்கிறாய் ? என்று கேட்டான் .

ஐயா ! நான் அந்தணன் . வேதங்கள் எல்லாம் கற்று விட்டேன் .‌ மேலும் பல கலைகளைக் கற்க தக்க குருவை தேடி அலைகிறேன் . என் நல்வினை பயனால் தங்களை கண்டேன் . தாங்களே எனக்கு குருவாக இருந்து கற்றுத் தர வேண்டும் .

விடாமுயற்சியுடன் கற்றால் தான் கல்வி நிலைத்து நிற்கும் . நான் சொல்கிறபடி விரதம் இருந்தால் எனக்கு தெரிந்த கலைகளை உனக்கு சொல்லி தருகிறேன் .

நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ அப்படியே நடந்து கொள்கிறேன் .

ஆறு மாதத்திற்கு நீ உண்ணக் கூடாது . உறங்கக் கூடாது . இந்த மரத்தடியில் தவம் செய்ய வேண்டும் . நான் கற்ற கலைகளை எல்லாம் அரச இலைகளில் எழுதி நாள்தோறும் கீழே போடுகிறேன் . நீ அதை படித்து கற்றுக் கொள்ள வேண்டும் .

பணிவுடன் குருவை வணங்கிய அவன், தாங்கள் அருள் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ ? என் உயிரே போனாலும் விரதத்தை கைவிட மாட்டேன் என்றான் .

உடனே அந்த முனி அவனுக்கு ஆறு மாதம் பசி தாகம் தூக்கம் இல்லாமல் இருக்கும் மந்திரத்தை சொல்லி தந்தான் .

நாள்தோறும் முனி எழுதிப் போடும் இலைகளை நன்கு படித்தான் அவன் . பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றான் .

ஆறு மாதம் கழிந்தது .‌ முனியை அழைத்துச் செல்ல தேவ விமானம் அங்கே வந்தது . அதில் ஏறிய அவன் , சந்திரவாணனே ! நீ எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்று விட்டாய் .

இனிமேல் கற்க வேண்டியது ஒன்றும் இல்லை . உன் நாட்டிற்கு சென்று திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வாயாக . என் சாபம் தீர்ந்து விட்டது . நான் தேவர் உலகம் செல்கிறேன் என்றான் .

அந்த விமானம் வானில் பறந்து மறைந்தது .

தன் நகரத்தை நோக்கி புறப்பட்டான் சந்திரவாணன் . வழியில் கன்னியாபுரி என்ற நகரத்தை அடைந்தான் . இளைப்பாறும் பொருட்டு அங்கிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான் . அப்படியே தூங்கி விட்டான்

அப்போது ஆறு மாதம் முடிந்ததால் உணவு உறக்கத்தை நீக்கும் மந்திரத்தின் ஆற்றல் அவனை விட்டு நீங்கியது .
 
அந்த வீடு அலங்காரவல்லி என்னும் தாசி உடையது . நல்லவளாகிய அவள் இறை வழிபாட்டை முடித்து விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பினாள் .

தன் வீட்டுத் திண்ணையில் யாரோ படுத்திருப்பதை பார்த்தாள் . அழகான அந்தண இளைஞன் என்பதை அறிந்து அவனை எழுப்ப முயன்றாள் . பிணம் போல அவன் கிடப்பதை கண்டு திடுக்கிட்டாள் . வேலைக்காரியிடம் மருத்துவரை அழைத்து வரச் சொன்னாள் .

அவனை சோதித்த மருத்துவர் , ஆறு மாதம் உணவு தண்ணீர் உறக்கம் இல்லாமல் இவர் இருந்திருக்கிறார் . உயிர் மூச்சு முட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது .

இவர் பிழைக்க வேண்டுமானால் உணவுச் சத்தை உடலில் செலுத்த வேண்டும் .  ஒரு படி அரிசியில் ஒரு படி நெய்யை ஊற்றி குழையும்படி வேக வைக்க வேண்டும் .

இவர் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அந்த சோற்றால் மூன்று வேளையும் ஒத்தடம் தர வேண்டும் . இவருக்கு தேவையான சக்தி மயிர்க் கால்கள் வழியாக உடலுக்குள் நுழையும் . சில நாட்களில் இவருடைய மயக்கம் நீங்கும் என்றார் .
 
மருத்துவர் சொன்னபடியே அந்த தாசி கண் விழித்து அவனுக்கு மூன்று வேளையும் நெய் சோற்று ஒத்தடம் தந்தாள் .  எட்டு நாட்கள் கழிந்தன . அவன் முனகத் தொடங்கினான் .

பிறகு மருத்துவர் அவனுக்கு முறையான மருந்துகள் கொடுத்தார் . சில நாட்களில் அவன் முழுமையாக குணம் அடைந்தான் .

அங்கிருந்து புறப்படத் தொடங்கிய அவனை வழி மறித்தாள் அலங்காரவல்லி . சாகக் கிடந்த உம்மை அல்லும் பகலும் கண் விழித்து காப்பாற்றினேன் . என்னை திருமணம் செய்து கொள் . அதுதான் நீர் எமக்கு செய்யும் கைம்மாறு என்றாள் .

அந்தணனாகிய நான் தாசியாகிய உன்னை மணப்பதா ? இதை சாத்திரங்கள் ஏற்றுக் கொள்ளாது . என்று மறுத்தான் .

வாரும் அரசரிடம் சென்று நியாயம் கேட்போம் என்று அவனை அரசவைக்கு அழைத்து சென்றாள் அவள் .

வழக்கை விசாரித்தான் அரசன் . சந்திரவாணனின் அறிவின் பெருமையை அறிந்தான் . நம் ஒரே மகளை இவனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று நினைத்தான் . இது குறித்து அமைச்சரோடும் வேதியரோடும் உரையாடினான் .

மனு தர்ம விதிகளை நன்கு அறிந்த அந்த வேதியர் , அரசே ! அந்தண குலத்தில் பிறந்த ஒருவன் வேறு குலத்தில் பிறந்தவளை திருமணம் செய்து கொள்ளக்கூடாது .

அப்படி திருமணம் செய்வதானால் அந்தண சத்திரிய வைசிய சூத்திர குலத்தில் பிறந்த நான்கு பெண்களையும் ஒரே முகூர்த்தத்தில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்றார் .

மகிழ்ச்சி அடைந்த அரசன் , வேதியரே ! உமது மகளை இவனுக்கு திருமணம் செய்து கொடும் . இங்கிருக்கும் சோம சேகரன் செட்டியார் தன் மகளை தருவார் . ஒரே முகூர்த்தத்தில் நான்கு குலப் பெண்களையும் இவன் திருமணம் செய்து கொள்ளட்டும் என்றான் .

வேதியரும் செட்டியாரும் இதற்கு ஒப்புக் கொண்டனர் .

திருமண நாள் குறிக்கப்பட்டது .  ஒரே முகூர்த்தத்தில் அவன் வேதியர் மகள் கல்யாணியையும் இளவரசி சித்திரரேகையையும் செட்டியார் மகள் கோமளாங்கியையும் தாசி அலங்காரவல்லியையும் திருமணம் செய்து கொண்டான் .

ஓராண்டு கழிந்தது . நான்கு மனைவியரும் ஆளுக்கொரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்கள் .

கல்யாணியின் மகனுக்கு வல்லவமுனி என்றும் சித்திரரேகையின் மகனுக்கு விக்கிரமாதித்தன் என்றும் கோமளாங்கியின் மகனுக்கு பட்டி என்றும் அலங்காரவல்லியின் மகனுக்கு பத்திரகிரி என்றும் பெயர் வைத்தான் அவன் .

அவர்கள் நால்வரும் இளம் வயதிலேயே நன்கு கல்வி கற்று வரலானார்கள் .

திடீரென்று அரசன் இறந்து விட அவன் மருமகனாகிய சந்திரவாணன் அரசன் ஆனான் . நீதிநெறி தவறாமல் உலகமே புகழும்படி ஆட்சி செய்து வந்தான் அவன் .

ஆண்டுகள் ஓடின . அவனின் நான்கு மகன்களும் அறிவும் பேராற்றலும் கொண்ட இளைஞர்களாக விளங்கினார்கள் .

முதுமை அடைந்த சந்திரவாணன் படுத்த படுக்கையாக கிடந்தான் . மரணப் படுக்கையில் இருந்த அவனை சூழ்ந்து மகன்கள் நால்வரும் கவலையுடன் இருந்தனர் .

அலங்காரவல்லியின் மகனான பத்திரகிரியை பார்த்து அழுதான் அரசன் . தந்தை அழுவதற்கான காரணம் பத்திரகிரிக்கு புரிந்தது .

தந்தையே ! நான் தாசி மகன் . எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தால் தங்களுக்கு வீடு பேறு கிடைக்காது என்று நினைத்து கவலைப் படுகிறீர்கள் . எனக்கு திருமணம் நடந்தாலும் குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றான் பத்திரகிரி .

இதைக் கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைந்தான் . தன் மற்ற மகன்களை பார்த்து , எனக்கு பிறகு பத்திரகிரியே முடி சூடிக் கொள்ள வேண்டும் . ஏனென்றால் அவன் தாய் தான் எனக்கு பணிவிடை செய்து என்னை காப்பாற்றினாள் .

அவள் வழியாக தான் மற்றவர்களையும் நான் மணந்தேன் என் ஆசையை நிறைவேற்றி வையுங்கள் என்று கண்களை மூடினான் .

தந்தையின் விருப்பப்படியே அரசன் ஆனான் பத்திரகிரி . நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்தான் . அவனுக்கு முன்னூற்று அறுபது மனைவியர் இருந்தனர் .

யாருக்கும் குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொண்டான் . அரசியரில் மோகனாங்கி என்பவளிடம் மிகுந்த ஆசை வைத்திருந்தான் அவன் .

கல்யாணியின் மகனாகிய வல்லவமுனி துறவியாகி காட்டிற்கு சென்று விட்டான் .

வழக்கம் போல அரியணையில் அமர்ந்து இருந்தான் பத்திரகிரி . சாந்தயோகி முனிவர் அரசவைக்கு வந்தார் . அவர் கையில் பொன்னிற மாதுளம் பழம் ஒன்று இருந்தது .

அவரைப் பணிந்து வணங்கி வரவேற்றான் பத்திரகிரி . அவனை வாழ்த்திய முனிவர் , உன் புகழ் எங்கும் பரவி உள்ளது . உன்னை காணவே வந்தேன் .

இது தேவர் உலக மாதுளம் பழம் . இதை உண்பவர்கள் என்றும் இளமையாக இருப்பார்கள் . என் அன்பு பரிசாக இந்த பழத்தை பெற்றுக் கொள் .

பத்திரகிரி பழத்தை பெற்றுக் கொண்டான் . அவனுக்கு ஆசி கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார் அவர் .

பழத்துடன் அந்தப்புரம் சென்றான் அவன் . தன் ஆசை மனைவி மோகனாங்கியிடம் அந்த பழத்தின் அருமை பெருமைகளை சொன்னான் . என் உள்ளம் கவர்ந்த நீயே இதை உண்ண வேண்டும் என்றான் .

நல்ல நாள் பார்த்து உண்கிறேன் என்றாள் அவள் .

அரண்மனை லாயத்தில் வேலை செய்யும் குதிரை பாகன் ஒருவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாள் அரசி மோகனாங்கி . தேவர் உலக மாதுளம் பழத்தை அவனிடம் தந்து உண்ணச் சொன்னாள் .

வீட்டிற்கு சென்று சாப்பிடுகிறேன் என்று அதைப் பெற்றான் அவன் . தான் காதல் கொண்டிருந்த வேலைக்காரியிடம் அந்த பழத்தை தந்தான் . பழத்தின் அருமையை உணராத அவள் அதை சாணக் கூடையில் வைத்தாள் . அந்த கூடையை தலையில் வைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு புறப்பட்டாள் .

அரண்மனை மேல் மாடத்தில் உலாவி கொண்டு இருந்தான் அரசன் . சாணக் கூடையில் பளபளத்த மாதுளம் பழம் அவன் கண்களில் பட்டது . அரசியிடம் கொடுத்த பழம் தான் அது என்பது அவனுக்கு புரிந்தது .

அந்த வேலைகாகாரியை இழுத்து வாருங்கள் என்று வீரர்களுக்கு கட்டளை இட்டான் அவன் .

அரசனின் முன்பு நடுங்கியபடி நின்றாள் அவள் .

உனக்கு இந்த பழம் எப்படி கிடைத்தது ? உண்மையை சொன்னால் உயிர் பிழைப்பாய் என்றான் .

அரசே ! அரண்மனை குதிரை பாகன் என்மீது காதல் கொண்டுள்ளான் . அவன் அன்புப் பரிசாக இதை எனக்கு தந்தான் . வேறொன்றும் எனக்கு தெரியாது என்று நடுங்கியபடி சொன்னாள் .

குதிரைப் பாகனை அழைத்து விசாரிக்க அரசி மோகனாங்கி தந்ததாக அவன் சொன்னான் .

அந்தப்புரம் வந்தான் அரசன் . மாதுளம் பழத்தை மோகனாங்கியிடம் காட்டினான் . வேறு வழியின்றி அவளும் தன் கள்ளக் காதலை ஒப்புக் கொண்டாள் . இவர்களை கொள்வதால் எந்தப் பயனும் இல்லை உணர்ந்தான் அரசன் .

தன் சகோதரர்கள் இருவரையும் அழைத்தான் . விக்கிரமாதித்தனுக்கு முடி சூட்டினான் . பட்டியை முதல் அமைச்சன் ஆக்கினான் .

பிறகு தன் மனைவியர் முன்னூற்று அறுபது பேரையும் அழைத்தான் . உங்களுக்கு தேவையான பொருட்களை பெற்று கொள்ளுங்கள் . உங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் சென்று வாழுங்கள் என்றான் .

துறவியான அவன் யார் தடுத்தும் கேளாமல் காட்டிற்கு தவம் செய்ய சென்றான் .

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE