பிரதோஷம் வெங்கட்ராமய்யருக்கு அருள் புரிந்த சம்பவம் - காஞ்சி மகா பெரியவா

By செய்திப்பிரிவு

வில்வத்தை எங்கே கொண்டு கொடுத்தாலும்,அது என் தலையில் தான் விழுகிறது-பெரியவா.

 

பெரியவா பரமேஸ்வரனேதான் என்று உணர இது போதுமே!

 

பிரதோஷம் வெங்கட்ராமய்யருக்கு அருள் புரிந்த சம்பவம்.

 

பிரதோஷம் வெங்கட்ராமய்யர் என்பவர் ஒரு பக்தர். அவரைப் பெரியவா, 'இவர் 64-வது நாயன்மார்' என்று  பாராட்டுவார்.

 

ஒரு முறை போப் ஆண்டவருக்கு, பெரிய புராண மொழிபெயர்ப்பு நூலை அனுப்ப ஏற்பாடாகியிருந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் ஒரு புத்தகத்தை மடத்துக்கு எடுத்து வந்தார். அச்சமயம், அங்கு பிரதோஷ மாமா இருந்தார்.

 

கலெக்டருக்கு அவரைக் காட்டி, "இவர் 64-வது நாயன்மார் போல் இருக்கிறார். இந்தப் புத்தகத்தை இவரிடம் கொடுத்து விடுங்கள். போப்புக்கு வேறொரு காப்பி அனுப்புங்கள்!" என்று சொல்லிவிட்டார், பெரியவா.

 

பிரதோஷ மாமா, பெரியவா படத்துக்கு தினமும் வில்வார்ச்சனை பண்ணத் தவற மாட்டார். மடத்துக்கும் வில்வம் கொண்டு கொடுப்பார். பெரியவா ஒரு நாள், "உனக்கு வில்வம் எப்படிக் கிடைக்கிறது? எவ்வளவு கிடைக்கிறது?" என்றெல்லாம் அவரை விசாரித்தார். "எனக்கு வேணு என்பவன், ஒரு கூடை வில்வம் பறித்து வந்து தருவான்.அதில் ஒரு மாலை கட்டி, மடத்துக்குச் சேர்த்துவிட்டு, மீதியை பெரியவா பாதுகைக்கும் படத்துக்கும் அர்ச்சிப்பேன்" என்றார் மாமா.

 

பக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்த ஒரு அம்மாள், "நானும், நானே பறித்த ஒரு கூடை வில்வத்தில், பாதியை மடத்தில் கொடுக்கிறேன், மீதியை ஏகாம்பரேசுவர் கோயிலில் கொடுக்கிறேன்!" என்றாள்.

 

எல்லாம் கேட்ட பெரியவா, " நீங்கள்ளாம் வில்வத்தை எங்கே கொண்டு கொடுத்தாலும்,  அது என் தலையில் தான் விழுகிறது"  என்றார்.

 

பெரியவா பரமேஸ்வரனேதான்  என்று உணர இது போதுமே!

 

அவர் மானுடராகக் காட்சி தருவதால்தான், நம்மால் அவரை எளிதாக நெருங்க முடிகிறது. அவருடைய கருணையை அனுபவிக்க முடிகிறது. ஈஸ்வரனாகத் தன்னைக் காட்டிவிட்டால், இந்த பாவனை போய் பயம்தான் வரும்!.

 

'ஏக வில்வம் சிவார்ப்பணம்' என்று ஒரு வில்வத்தைத் தூக்கி, சிவன் மேல் போடுவோர்க்கு எதைத்தான் அடைய முடியாது!

 

கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா

புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE