பௌர்ணமி இரவில் உன்னை...

By செய்திப்பிரிவு

இமைகளால் என்னை அசைக்கிறாள்
சதா உன்னையே நினைத்துக் கொண்டிருப்பது
 உனக்குத் தெரியும்
நீயோ தெரியாதது போல்
இருந்து கொண்டிருக்கிறாய்
காட்டு வழிப் பாதையில்
தனியே பயணித்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரைப் போல உறைந்து போகிறேன்
பனி படர்ந்த மலையில்
ஒரு மரத்தைப் போல உன் நினைவு
என்னை நடுங்க வைக்கிறது
இணையற்ற ஒரு பறவையின்
அழுகைக்குரல் உனக்கு கேட்கிறதா
பறந்து விரிந்த வானின் கீழ்
எங்கு போவதெனத் தெரியாமல்
எக் கூட்டிலும் இடமில்லாமல்
திக்கற்று அலைவதை அறிவாயா
எதுவும் நிரந்தரமற்ற உலகில்
உன் ஞாபகத்தை இறுகப் பற்றிக் கொண்டு
உயிர்த்திருக்கிறேன்
உன் பேசாத புகைப்படத்தில்
முத்தங்கள் தந்து
ஆறுதல் கொள்கிறேன்
உன் மௌனத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை
நீந்தத் தெரியாதவன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதைப் போல
நீ இருக்கும் கரையைத் தேடுகிறேன்
வானின் அழகை வரையும் ஒரு நட்சத்திரத்தைப் போல இருக்கிறாய்
உன் ஒளியை கண்களில் வாங்கி
சுகமடைந்து போகிறேன்
வா வந்து உன் இமைகளால் என்னை அசைத்து விட்டுப் போயேன்
பௌர்ணமி இரவில் உன்னை பார்த்துவிட்டு உறங்கப் போவேன்
என் அறை உன் முகமாய் மாறிக் கொண்டிருக்கிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE