சாகாவரம் பெற்ற சிரஞ்சீவிகள் யார்?

By செய்திப்பிரிவு

இந்து புராணங்களின் படி சிலர் சாகா வரத்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் பக்தி கொண்டவர்களுக்கு, இந்த வரம் தானாகவே கிடைத்தது. ஆனால், சிலருக்கு இந்த வரமே சாபமாகவும் மாறியது. இதிகாசங்களிலும் புராணங்களிலும் குறிப்பிட்டுள்ளபடி எட்டு பேர் சாகா வரத்தை பெற்றுள்ளார்கள்.

#மகாபலி சக்கரவர்த்தி...

மூன்று உலகத்தையும் ஆண்டவர், அசுர குலத்தைச் சேர்ந்த பிரகலாதனின் பேரன் ஆவார். ஒவ்வொரு வருடமும் ஓணத்தின் பொழுது, இவர் தனது மக்களை காண்பதற்காக வருவார் என்று கேரளத்தில் நம்பப்படுகின்றது. இவருக்கு சாகா வரத்தை அளித்தவர் திருமால் ஆவார்.

#வியாசர்

வியாசர் ,மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை கொடுத்த வேத வியாசர், மிகப் பெரிய ஞானி ஆவார். ஞானம் மற்றும் அறிவாற்றலின் சின்னமான இவர் ,துவாபர யுகம் முடிந்து கலியுகத்திலும் வாழ்வதாக கூறப்படுகிறது.

 

#அனுமன்

 

ராமரின் தீவிர பக்தனான அனுமன் , ராவணனுக்கு எதிராக ராமர் நிகழ்த்திய போரில் பெரும் பங்கு கொண்டு வெற்றிக்கு காரணமானவர். இவர் குருச்சேத்திரப் போரில், அர்ஜுனனின் ரதத்தில் இருந்தார். யுகங்கள் கடந்தும் இன்றும் இவர் வாழ்வதாக புராதன குறிப்புகள் கூறுகின்றது. இதற்கு காரணம் ராமர் ஆஞ்சநேயருக்கு அளித்த வரமாகும்.

#விபீஷணன்

 

இவர் ராவணனின் சகோதரன் ஆவார். ராமாயணப் போர் தொடங்கும் முன்னரே விபீஷணன் ராமரிடம் சரணடைந்து விட்டார். ராவணன் ராமனால் கொல்லப்பட்ட பிறகு இவர் இலங்கையின் அரசராக இராமனால் முடிசூட்டப்பட்டார். இவர் சாகாவரம் வாங்கவில்லை. ஆனால் மகாயுகம் முடியும் வரையான நீண்ட காலம் வாழும் வரத்தை பெற்றுள்ளார்.

#கிருபாச்சாரியார்

 

இவர் சந்தனு மன்னனால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். போர்க் கலைகளையும், வேதங்களையும் கற்ற இவர். பின்னாளில் இளவரசர்களுக்கு குருவாக மாறினார். பாரதப் போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் மீதம் இருந்த ஒரே ஒரு வீரர் இவர்தான்.

 

குரு வம்சத்தின் கடைசி வாரிசான அபிமன்யுவின் மகனான பரீக்ஷித்துக்கு போர்க் கலைகளை கற்றுக்கொடுத்தார். கிருபாச்சாரியாரின் சகோதரியை தான் குரு துரோணாச்சாரியார் மணந்தார்.

​​​​​

#பரசுராமர்

 

விஷ்ணுவின் ஆறாவது அவதாரம், பரசுராமர் அவதாரமாகும். இவர் அனைத்து போர் கலைகளுக்கும், வேதங்களுக்கும், திவ்ய அஸ்திரங்களுக்கும் முன்னோடி. கல்கி புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, உலகம் அழியும் தருணத்தில் இவர் மீண்டும் வருவார் .திருமாலின் அவதாரத்திற்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து, திவ்ய அஸ்திரங்களை பெற உதவி மனிதகுலத்தை காப்பாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.

 

#மார்க்கண்டேயன்

 

சிவபெருமானின் தீவிர பக்தனான இவர் மரணமில்லா வாழ்வை பெற்றவர். சிவபெருமானும் எமதர்மனும் இவருக்கு இவ்வரத்தை வழங்கினார்கள். மரணமில்லா வாழ்வு மட்டுமின்றி, என்றும் இளமையாக இருக்கும் வரத்தையும் பெற்றுள்ளார். பக்தர்களுக்காக சிவபெருமான் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு மார்க்கண்டேயனின் கதை சிறந்த உதாரணமாகும்.

 

#அஸ்வத்தாமன்

 

அஸ்வத்தாமனுக்கு, இந்த சிரஞ்சீவி வரம் அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டது அல்ல. இந்த வரமே அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு இந்த சாபத்தை அளித்தார். பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் கொன்று வெறி அடங்காத அஸ்வத்தாமன். உத்திரையின் கருவிலிருந்த அபிமன்யுவின் குழந்தையின் மீதும் பிரம்மாஸ்திரத்தை எய்தான். மன்னிக்க முடியாத இந்தக் குற்றத்திற்காக கிருஷ்ணர், அவன் இடமிருந்து மரணத்தை பறித்துக் கொண்டார். வாழும் காலம் முழுவதும் வலியுடனும் ,வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது..

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE