அவளின் தினசரி

By செய்திப்பிரிவு

அலைபேசியில் பேசினாலும்
நேரில் பேசுவது போன்ற
உடல் மொழியில்
தலையாட்டி பேசும்
விழியாட்டி பொம்மை அவள்...

"இன்னைக்கு லஞ்சுக்கு
என்ன வேணும்??"
நாள் தவறாமல்
கேட்டு சமைக்கிறாள் பிள்ளைகளிடம்
அதில் சிறிது
மன்னவன் வயிற்றுக்கும்....

பரபரப்பான நேரத்தில்
வரும் அழைப்பை
எடுத்துப் பேசினால்
அது அவள் தாய் வீட்டழைப்பு
ஓய்விலிருந்தாலும்
சிவப்பை அழுத்தினால்
அது தலைவன் வீட்டழைப்பு....

சமைத்த உணவை
ருசி பார்க்க தருபவள்
குறை சொன்னால்
தலைகீழாய் குதிப்பவள்
இருவரும் ஒருத்தி தானா??

கொஞ்ச நாட்களுக்கு
யோகா வகுப்புகள்
கொஞ்ச நாட்களுக்கு
ஜூம்பா நடனங்கள்
குறைந்தபாடில்லை
அவளின் எடை.....

Anazonக்காரனுக்கு அக்கா
Meeshoக்காரனுக்கு சிஸ்டர்
Flipkartக்காரனுக்கு மேம்
தினமும் வருபவர்களின்
செல்ல விளித்தல்கள்....

அவள் அழைத்தவுடன்
எடுக்க வேண்டும்
தலைவன் எத்தனை முறை
அழைத்தாலும் எடுக்கத் தேவையில்லை
அவளின் அலைபேசி நியாயங்கள்....

புருவங்கள் Threading
செய்ய ஒருமுறை
பேன்சி கடைக்கு ஒருமுறை
எத்தனை முறைகள்
அவள் வெளியே சென்றாலும்
கடைசி நேர காய்கறிகள்
வாங்க வேண்டியது
தலைவனின் பொறுப்பு....

நேனோ சைஸ் ஸ்டிக்கர் பொட்டு
அதற்கு மேல் கொஞ்சம் குங்குமம்
செவ்வக விபூதி
நெற்றி செந்தூரம்
தழைய தழைய சேலை
வாரத்திற்கொரு நாள்
குழம்பிப் போகிறார்
அவளின் பூஜையறை கடவுள்....

பின்மதிய உறக்கம்
விழித்தெழுந்த பின்
ஃபில்டர் காபி
சன்னமாய் ஒலிக்கும்
காதல் பாடல்கள்
உயிருள்ள கவிதையின்
தனக்கான தருணங்கள்....

நன்றி: பிரபுசங்கர் க

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE