களத்து மேடும்...காதலும்...
காத்தோடு துணைகள் தங்களுக்குள் பேசும் சேதி...கிராமத்து களத்து மேட்டிலிருந்து நேரலையில்....
(வீட்டில் பயணமுன்னெடுப்பு)
இன்னும் கொஞ்சநேரம்
இமைமூடி இருக்காதா..
இரந்தவன் கேட்கிறான்
இணையாளிடம்..
இருப்பது கொள்ளும்போல்
இடையிடையே கேள்வியென்ன
இருமாப்பும் கொள்ளுமய்யா
இமை வழியே சொல்லுதய்யா..
ஓ..ஓகோ...பரிகாச புன்னகையோ
பகலிரவு தாளலியோ...
பசிக்கு என்னைத் தின்றாள்
என் கன்னு மேய்வதெப்போ...
நான் சமைச்சதை தாரேனுன்னு
தாய்மடியாய் நானிருக்கேன்
சமைஞ்சது வேணுமின்னோ
உன் புத்தி ஒட்டடையாய் மேயிறதோ..
குருவிக்கு குசும்பபாறேன்
கோழி கொத்திடும் நேரமிப்போ
களத்து மேடு காத்திருக்கு
காலைவேளை கருக்கலியே...
கருத்தா தான் பேசுறியோ
கருத்த மச்சான் கண்ணுலயே
கவனமாய் போயி வாயேன்
கருக்கையில காத்திருக்கேன்...
கானக்கொடியே போயி வாரேன்
காத்தோடு சேதி சொல்லு
காதுல பதில தாரேன்..
( வேலையில்)
காட்டுக்குருவி கத்தறதே
கருப்பி நெனப்போடு சுத்தறதே
கழனிக்குள்ள கவுதாரி போல
கவனமெல்லாம் கொட்ட மடிக்கறதே..
கன்னங்கருத்த கம்பு
கல்லொரல் போட்டிடிச்சி
கறிச்சோறோடு காத்திருக்கு
கருவாட்டு பானை தேடி
கருப்பு பூனை வாரதெப்போ...
களவாணி பயநானே
கருத்தாவே பேசி வந்தேன்
கழனியில கன்னு இல்ல அது
கதவோரமே சுத்துரதே...
காட்டுப்புலி ரெண்டு கட்டி
பல்லுபடா பருத்தி கொண்டு
பக்குவமா நெஞ்ச மேலாக்கு
மேகமும் பாத்திருக்கே
உன் வரவை காகம் சொல்ல கேட்டு
கதவோரம் கரையிறேனே..
சும்மாவே சுத்துதடி
உன் சுருக்குச்சேலை நெஞ்சுக்குள்ள
நீ கவுனியெல்லாம் கட்டிப்போடு
கவுளி சத்தம் மட்டுப்போடு
கருப்பட்டி பாவுபோல
கட்டழகன் இப்பவே கரைஞ்சிருவேன்..
அந்த கவலை உனக்கு வேணாமய்யா
கக்கத்துல சுத்திப்போடு
பக்கத்தில சுகமா நானிருந்தா
உன் நாக்கில் சுண்ணாம்பும் செவந்திருமே...
( அவன் வருகை)
செந்நிற கன்னு ஒண்ணு
காளையோட கட்டுக்குள்ள
கால்தடம் சத்தமிட
என் சலங்கையும் நானிருச்சே..
சக்கர தேனிவளோ
சங்கு சக்கர நகையழகோ
மனசுக்குள்ள சுத்துறாளே
என்ன பித்துக்குளி ஆக்குறாளே..
பித்தானேனய்யா உன்மேல
பிள்ளையா என்ன நீ கை பிடிக்கயில
தாயானேன் நானும் தவிப்போடு
தடங்கலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு..
அட..யாத்தி..பாருடா..
அம்மையாருக்கு அடி மனசு ஆசைய
ஆட்டுக்கறி வாசனையோ
ஆளை தின்னுருச்சு
ஆம்பளையவும் தின்னத்தானோ
ஆத்திமரம் கூந்தலில் பூத்திருக்கு..
ஆசையில நட்டுவைச்ச
மல்லிகையும் பூத்திருச்சு
அடிச்சு போடும் வாசனையில்
மனசுவரைக்கும் மலர்ந்திருச்சு..
மல்லிகை வாசத்துல
மாமனை வளைச்சுப்புட்ட
மந்தார புன்னகையில் உன்
மனசையும் புரியவைச்ச..
புரிஞ்சது புதிருமல்ல
புழுவொன்னு வேணுமில்ல..
புத்திகெட்ட பயபுள்ள
புல்லுக்கட்ட தூக்கிப்போடு
புதுப்பொண்ணாட்டம் பேச்சப்பாரு
பேத்திக்கு நாளைக்கு கண்ணாலமாம்
கன்னுக்குட்டி புடிச்சாந்தேன்
சீருசெய்ய....
என்ன பண்ணி என்ன சொல்ல
என் புருசன் எனக்கு புதுசுதானே..
உன்னோட மனசு போல
என் உசுரும் நீதானே..
(ரெண்டு பேரும்)
கடைசிவரை கட்டிக்குவோம்
கல்லறை போகும்வரை சேர்ந்திருப்போம்...
(நாமும் வாழ்த்திடுவோமே...)
... இயலிசம்...