"குரு பார்வை இன்னும் வரவில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவில்லை"- ஓர் அன்பர்
"பிரத்யட்ச குருவான பெரியவா சந்நிதிக்கு வந்து விட்டீர்கள். இனிமேல் தடங்கல் இல்லை"- சிஷ்யர்.
"இன்னும் குரு பார்வை வரவில்லை. அதனால் என் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவில்லை" என்று பெரியவாளிடம் முறையிட்டுக் கொண்டார் ஓர் அன்பர்.
பக்கத்தில், தேதியூர் வாஞ்சி அய்யர் என்ற ஸ்ரீமடத்தின் பிரிய சிஷ்யர் நின்று கொண்டிருந்தார்.
உடனே அவர், "நீங்க சொல்றது தப்பு. குரு கடாக்ஷம் வந்து விட்டது. பிரத்யட்ச குருவான பெரியவா சந்நிதிக்கு வந்து விட்டீர்கள். இனிமேல் தடங்கல் இல்லை. சீக்கிரம் கல்யாணம் ஆகும்" என்று அன்புடன் சொன்னார்.
அப்போது ஆவணி மாதம் பதினைந்து தேதிக்கு மேல் ஆகியிருந்தது. ஆவணி முடிவுக்குள் எப்படிக் கல்யாணம் நடக்கும்?
நடந்தது!
பெரியவாள் அனுக்ரஹ விசேஷம்,வாஞ்சி அய்யர் வாக்கு எல்லாம் சேர்ந்து, இரண்டொரு நாளிலேயே விவாகம் நிச்சயமாகி பத்து நாளில் நடந்தே விட்டது.
புதுமணத் தம்பதியரை அழைத்துக் கொண்டு தரிசனத்துக்கு வந்த அன்பர், பெரியவாள், சந்நிதியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பரவசப்பட்டார்.
கட்டுரையாளர் ஸ்ரீ மடம் பாலு
புத்தகம் - காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு - வரகூரான் நாராயணன்.