பெரியவா பிக்ஷைக்கு கொண்டு வந்த 'வண்டு துளைத்த மாம்பழங்கள்'

By செய்திப்பிரிவு

வண்டு உள்ள பழத்தை நான் சாப்பிடக்கூடாது. அஹிம்சா பரமோ தர்ம; வண்டுகளைத் தொந்தரவு செய்து பழத்தைச் சாப்பிடுவது சந்யாச தர்மம் இல்லை..."--பெரியவா.

பெரியவாள் வானத்தில் பறக்கும் கருடன். கருடனைப் பார்க்கலாம். ஆனால், அது பறந்து செல்லும் பாதையைப் பார்க்க முடியாது. அது ஒரு தனி வழி.

வீட்டுக் கொல்லையில் இருக்கும் மாமரத்தில் பழுத்த பழங்கள். மரத்திலேயே பழுக்கும்படியாகக் கவனமா பார்த்து, காப்பாற்றி, கனிவோடு ஆறு கனிகளைக் கொண்டு வந்திருந்தார்கள், நடேசன் தம்பதிகள்.

"பெரியவாளுக்காகவே கொண்டு வந்தது....பெரியவா பிக்ஷையிலே சேர்த்துக் கொள்ளணும்" என்று அந்தரங்க சுத்தியோடு பிரார்த்தனை பண்ணினார்கள் தம்பதிகள்.

பெரியவா பழங்களைப் பார்த்தார்கள்.

"இதிலே ஒண்ணுகூட சாப்பிட முடியாது போலிருக்கே..."--பெரியவா.

நடேசனுக்குத் திகைப்பு, ஏமாற்றம், வருத்தம்.

ஓர் அணுக்கத் தொண்டரை அழைத்து, மாம்பழங்களை நறுக்கச் சொன்னார்கள் பெரியவா.

எல்லாப் பழங்களிலும் வண்டு துளைத்திருந்தது.

"வண்டு உள்ள பழத்தை நான் சாப்பிடக்கூடாது .'அஹிம்சா பரமோ தர்ம'; வண்டுகளைத் தொந்தரவு செய்து பழத்தைச் சாப்பிடுவது சந்யாச தர்மம் இல்லை..."--பெரியவா.

நடேசன் தம்பதிகளுக்கு ஏற்பட்ட வருத்தத்துக்கு அளவே இல்லை.

பெரியவா கருணாமூர்த்தி, "கடைக்குப் போய் மாம்பழம் வாங்கிண்டு வந்து கொடு" என்றார்கள்.

நடேசன் தம்பதிகளுக்குக் கொஞ்சம் ஆறுதல். உடனே போய் ஒரு டஜன் மாம்பழங்கள் வாங்கிக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்கள்.

பெரியவாள், தொண்டரிடம் ஒரு பழத்தில், ஒரு துண்டு நறுக்கித் தரச் சொன்னார்கள். நடேசன் தம்பதிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தத் துண்டத்தை வாயில் போட்டுக் கொண்டார்கள்.

பெரியவாள் இப்படிச் செய்வது, வெகு வெகு அபூர்வம்.,

ஆனால், நடேசன் தம்பதிகளுக்கு இந்த அனுக்ரஹம், ஆயுசுக்கும் போதும்!

பெரியவாள் வானத்தில் பறக்கும் கருடன்.கருடனைப் பார்க்கலாம்; அது பறந்து செல்லும் பாதையைப் பார்க்க முடியாது. அது ஒரு தனி வழி.

தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்-ஒரு அணுக்கத் தொண்டர்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE