தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி சிதம்பர நகரில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசியதுடன், அவரது அரசியல் பயணம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
தவெக அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும், 50 நாட்களுக்குள் ஆட்சி முடிந்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருவதாக அமைச்சர் ஸ்ரீநாத் கூறினார். இது திரைப்படம் அல்ல என்றும், ஆட்சி எத்தனை நாட்கள் ஓடும் என்பதை கணிக்க முடியாது என்றும் அவர் பதிலளித்தார்.
ஒரு கட்சியை தொடங்கி மிகக் குறுகிய காலத்தில் ஆட்சியை பிடித்த வரலாறு விஜய்க்கு இருப்பதாகக் கூறிய அவர், மக்கள் மீது கொண்ட அக்கறையால் தனது திரை வாழ்க்கையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர் விஜய் என புகழாரம் சூட்டினார்.
பலரும் அரசியலுக்கு வருவதை தாமதப்படுத்துமாறு விஜய்யிடம் அறிவுறுத்தியதாகவும், முதலில் சினிமாவில் தொடர்ந்து சம்பாதித்து, பின்னர் அரசியலுக்கு வரலாம் என கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால், தற்போதைய தலைமுறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வந்ததாக விஜய் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முதல்வர் விஜய் நிரந்தரமாக தமிழகத்தின் முதல்வராக இருப்பார் என அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியாக தெரிவித்தார். சட்டப்பேரவை நிகழ்வுகளையும் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாகவும், தொலைக்காட்சி தொடர்களைவிட சட்டப்பேரவை நேரலையை பார்க்க விரும்புவதாக மக்கள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் எங்கு சென்றாலும் அவர்மீதுதான் அனைவரின் கவனமும் இருக்கும் எனக் கூறிய அமைச்சர், அவர் டெல்லிக்கு சென்றாலும் அங்கும் விஜய்தான் முக்கிய கவனமாக இருப்பார் என்றார். எதிர்காலத்தில் டெல்லியே விஜய்யின் அரசியல் செல்வாக்குக்குள் வரக்கூடும் என்றும் அவர் பேசினார்.
தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக பாடல் ஒன்றையும் பாடிய அமைச்சர் ஸ்ரீநாத், முதல்வருடன் தொடர்ந்து பயணிப்பேன் என உறுதியளித்தார். அவரது பேச்சு கூட்டத்தில் இருந்த தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.