தமிழக பட்ஜெட்டில் அதிர்ச்சி - மீன்பிடி தடைக்கால நிவாரணம் குறைப்பு!

By செய்திப்பிரிவு

மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரம் உயர்த்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் குறைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். தவெக ஆட்சி அமைத்து தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மொத்தமாக 151 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அமைச்சர் மரிய வில்சன் வாசித்து முடித்துள்ளார்.

அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில்,மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

இதன் மூலமாக 1.93 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி மீனவர்கள் மாநாட்டில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட 10 நாட்களில் திமுக அரசு சார்பாக ஆகஸ்ட் 28ஆம் தேதி அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாகரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக நிவாரணத் தொகை குறைக்கப்பட்டதை தவெக அரசு மறைத்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் நிதி அமைச்சர் மரிய வில்சன் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளம. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் பார்க்கப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE