மதிரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். சிறந்த விஷ்ணு பக்தன். எந்த நேரமும் விஷ்ணுவை நினைத்து பாடுவான் ஆடுவான். வயிறுநிரம்புகிறதோ இல்லையோ. தினமும் விஷ்ணுவின் அவதாரங்களை பாட்டில் வடித்து ஆனந்த கூத்தாடி யாசகம் செய்வான். சிறிது உணவு கிடைத்தாலும் போதும். இன்றைய நம் கொடுப்பினை அவ்வளவு தான் என்றெண்ணி மடத்திற்கு சென்று படுத்து கொள்வான். தூக்கம் வரும் வரை விஷ்ணுவை நினைத்து கொண்டே உறங்கி விடுவான்.
இப்படியே அவன் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இப்படி ஒரு நாள் விஷ்ணு கோவில் முன் ஆடிபாடி இறைவனின் பரவசத்தில் ஆழ்ந்திருந்த மதிரனை ஆகாயத்தில் பறந்து சென்று கொண்டிருந்த ஸ்ரீ மஹா லட்சுமி கவனிக்க ஆரம்பித்தாள். அவனின் ஆடலும் பாடலும் எவரையும் பரவசம் கொள்ள வைத்தது. லட்சுமியே அவனது பக்திக்கு மயங்கினாள். இறைவியின் எண்ணத்தில் விழுந்த மதிரனை பற்றிய பேச்சை விஷ்ணுவிடம் கூறி விட்டு, அந்த பக்தனுக்கு நல்லதை செய்யக்கூடாதா என்று அவள் விருப்பத்தை கூறினாள்.
ஸ்ரீ மகாவிஷ்ணு சிரித்து விட்டு கூறினார். மதிரன் செய்த ஜென்ம பாவ வினை இந்த ஜென்மத்தில் மொத்தமாக அனுபவிக்க வேண்டி உள்ளது. இது அவனது கர்மா. நானே எத்தனை செல்வங்களை அள்ளி கொடுத்தாலும் அவனுக்கு நிலைக்காது. அவனால் அனுபவிக்க முடியாது. இவன் இறக்கும் வரை யாசகம் செய்து விட்டு முடிவில் என் காலடி சேர்வான் என்றார்.
மகா லட்சுமிக்கு சற்று கோபம் வந்து விட்டது. நீங்கள் அவனை வாழவைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அனைத்து செல்வங்களையும் அவனுக்கு அளித்து செழிப்பாக வாழவைக்கிறேன் என கூறி விட்டு சென்றாள். மகா விஷ்ணுவோ உன்னால் முடித்தால் செய். என்று கூறி மறைந்தார்.
மதிரன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் கிருஷ்ணன் கோவில் திருவிழாவிற்கு தயார் ஆகி செல்ல ஆரம்பித்தான். பத்து மைல்தூரங்கள் நடக்கவேண்டும். இடையில் காடு குறிக்கிடும். காட்டை கடந்தால்தான் அந்த கிராமம் வரும். காட்டு வழி நுழையும்முன் மதிரன் மூன்று பேரை சந்திக்க நேர்ந்தது. ஒருவன் பார்வை இல்லாதவன். மற்றவன் கால்களை இழந்தவன். இன்னொருவன் காது கேளாத ஊமை. இவர்களை கண்ட இவன், பாவம் இவர்கள் எப்படி வாழ்க்கையை நடந்துகிறார்களோ நாம் எவ்வளோவோ மேல் என்ற எண்ணத்தோடு காட்டினுள் நுழைந்தான்.
இதனை கண்ணுற்ற ஸ்ரீ மகா லட்சுமி அவன் வரும் வழியை கணித்து தங்கப் புதையலை வழியில் போட்டாள். நடந்து கொண்டே வந்த மதிரன் திடீர் என அந்த கண் இல்லாதவனை நினைத்து பார்த்து நாமும் அப்படி நடித்து பார்ப்போம். அப்போது தான் அவர்கள் கஷ்டம் புரியும் என நினைத்து கண்ணை மூடி கொண்டு நடக்க ஆரம்பித்தான். அந்த புதயலை தாண்டி போனான். புதையல் அவன் கண்ணில் படவே இல்லை.
ஸ்ரீ மகாலட்சுமி திடுக்கிட்டாள். மறுபடியும் வைரகற்களை ஒரு துணியில் முடிப்போட்டு தொங்கும் மர கிளை ஒன்றில் தொங்க விட்டாள். அவன் தலையில் இடிக்கும் எடுத்து கொள்வான் என நினைத்தாள். இப்போது மதிரன் அந்த முடவனை நினைத்து கொண்டு கீழே அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அரக்கி கொண்டு காலை இழுத்து கொண்டு அங்கேயும் கடந்து சென்றான். அந்த வைரங்களும் அவனுக்கு கிட்டவில்லை.
லட்சுமி வெறுத்து போய் விட்டாள். கடைசியாக அந்த தங்க புதையல் மற்றும் வைரமூட்டையை ஒரு மர பொந்துக்குள் போட்டு விட்டு அவனை அசிரீரிமூலம் அழைத்தாள். அடேய் மதிரா குருடா. மர பொந்தில் பெரும் புதையல் இருக்கிறது எடுத்து கொள் என்று கத்தினாள். இப்போது மதிரன் செவிடனை நினைத்து காதை இறுக பொத்தி கொண்டான். அவன் காதுகளில் எதுவும் விழாமல் அவ்விடத்தை விட்டு கடந்து சென்றான். ஸ்ரீ மகா லட்சுமிக்கு இப்போது தான் புரிந்தது. மதிரனின் கர்மா எத்தனை வலிமையானது.
இந்த ஜென்மம் முழுதும் அவன் வறுமையை அனுபவித்து விட்டு செல்ல தான் வேண்டும் என ஸ்ரீ விஷ்ணு தனக்கு உரைத்தது எத்தனை பெரிய உண்மை என உணர்ந்து அவனுக்கு உதவி செய்வதை நிறுத்தி விட்டு மறைந்தாள்.
பிறகென்ன மதிரனும் கிருஷ்ணன் கோவிலை நோக்கி நடையை கட்டினான். கடவுளே உதவினாலும் கர்மா உதவாது. அதேபோல கடவுளே தடுத்தாலும் கர்மா நமக்கு உதவும். நாம் செய்த தீமைக்கு தண்டனை நிச்சயம் கிடைத்தே தீரும். செய்த நன்மைக்கு அதற்கேற்ற பலனும் நிச்சயமாக நமது வாழ்வில் நாம் அனுபவித்தே தீருவோம். இன்று வறுமையாக இருக்கிறோம் என்று கவலை கொள்ள வேண்டாம். நிச்சயமாக ஒரு நாள் நமது கர்மா படி நமது வாழ்வு நல்ல நிலைக்கு செல்லும் என்று நம்புவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்