அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தனக்கு பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகள் மிகுந்த மனவேதனையை உண்டாக்குகிறது. உள்கட்சி சண்டை தொடர்பாக நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு அதிமுகவின் நிலை சென்றுவிட்டது. கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை உண்டாக்கிவிட்டது. இதே மனநிலையில் தான் இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.
நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், ஜெயலலிதா காப்பாற்றிய இந்த இயக்கத்திற்கு இந்த கதியா?
கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா! நோகுதய்யா மனசு நோகுதய்யா என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும். "உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது" என பிரபல ஆங்கில் நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது.
புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு என் அனுபவம் பயன்பட வேண்டும் என்ற சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு , எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தடுக்கப்பட்டன. அதை பற்ரி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.
மறைந்த ஆளுமைமிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியல் பயணித்ததை நான் ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன், இப்போது உருவாக்கியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிற போது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப்படுகிறது.
எவ்வளவோ வாய்ப்புகளை வழங்கியதோடு அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என்பதை தலைமைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என 2 பக்க அறிக்கையில் முன்னாள் அமைச்சர் எஸ்.செம்மலை தெரிவித்துள்ளார்.
யார் இந்த செம்மலை?
முன்னாள் அமைச்சர் எஸ். செம்மலை அவர்கள் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முக்கிய ஆளுமையாவார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மக்கள் மத்தியிலும் கட்சிக்குள்ளும் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்.
வகித்த முக்கியப் பொறுப்புகள்
1. தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் (2001 - 2004)
2001-ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை (Health Minister) மற்றும் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவரது காலகட்டத்தில் மருத்துவத் துறையில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
2. நாடாளுமன்ற உறுப்பினர்
2009 முதல் 2014 வரை சேலம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப்பட்டு, டெல்லியில் அதிமுகவின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்தார்.
3. தற்காலிக சபாநாயகர்
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவை நடத்துவதற்காகத் தற்காலிக சபாநாயகராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு அப்பணியைச் சிறப்பாகச் செய்தார்.
தேர்தல் வெற்றிகள்
செம்மலை தனது அரசியல் வாழ்க்கையில் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பலமுறை களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார்.
1980 (தாரமங்கலம்): தனது முதல் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றார். (அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி சுயேச்சையாக வென்றது அவரது தனிப்பட்ட செல்வாக்கைக் காட்டியது).
1984 (தாரமங்கலம்): அதிமுகவில் இணைந்த பிறகு, அதே தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மீண்டும் வென்றார்.
2001 (ஓமலூர்): ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் வென்று தமிழக அமைச்சரானார்.
2009 (சேலம்): சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக (MP) தேர்வானார்.
2016 (மேட்டூர்): மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றினார்.
கல்வி மற்றும் பின்னணி
அவர் ஜூன் 9, 1945 அன்று சேலம் மாவட்டம் ஓலைப்பட்டியில் பிறந்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலைப் பட்டமும் (B.Sc), அதைத் தொடர்ந்து சட்டப் படிப்பும் (B.L) முடித்த ஒரு வழக்கறிஞர் ஆவார்.
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், கட்சியின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருந்துள்ள செம்மலை, சேலம் மாவட்ட அரசியலில் மிக முக்கியமான வழிகாட்டியாகக் கருதப்படுகிறார்.