விருப்ப ஓய்வு - சிறுகதை

By சரவணன்

”என்னங்க சொல்றீங்க வேலைய எழுதிக்குடுத்துட்டீங்களா? ஒங்களுக்கு என்ன கிறுக்குப்புடிச்சிருச்சா இல்ல லூசா யிட்டீங் களா ? வயசு இப்பத்தானே 48 ஆகுது எப்புடிப் பாத்தாலும் 10 வருசம் சர்வீஸ் இருக்கேங்க ஏன் இப்படிச் செஞ்சீங்க ?

நம்ம ரெண்டு பொம்பளைப் பிள்ளைகளைக் கட்டிக் குடுக்கனும், வீடுகட்ட வாங்குன பேங்க் லோனை அடைக்கனும் இன்னும் சொச்ச நாளைக்கு கஞ்சியாவது குடிக்கனும் வேலைய எழுதிக்குடுத்துட்டு என்ன பண்ணப்போறீங்க? அய்யோ இந்த மனுசனுக்குக் கிறுக்குப்புடிச்சிருச்சான்னு தெரியலயே ஏ புள்ளைகளா வாங்கடீ ஒங்க அப்பன வந்து என்னான்னு கேளுங்கடீ “ நு ஒப்பாரி வைச்சா அவன் சம்சாரம்

“ இந்தா பாரு என்னால முடியல இனிமே அங்க நான் வேலைக்கிப்போறதா இல்ல ஒடம்பு ஒத்துழைக்கல வேற வேலை எதுனாச்சும் பாப்போம் எழுதிக்குடுத்தது குடுத்ததுதான் அம்புட்டுத்தேன் அவங்க சகவாசம் வேணாம்”
” வேற வேலைக்கிப்போறதா? எவன் ஒங்களுக்கு மாசம் 45 ஆயிரம் ரூ சொளையா சம்பளம் குடுப்பான்

அவனவன் 10,000 க்கும் 15,000க்கும் 12 மணிநேர வேலை பாத்துச் சாவுறான் நீங்க வேலைக்கி 5000 த்துல சேந்து கொஞ்சம் கொஞ்சமா ஏத்தி 25 வருச சர்வீசுக்கு அப்புறம் போன வருசம்தான் 45000 ஆச்சுன்னு சந்தோசமா சொன்னீங்க இப்ப ஒரு வருசம் முடியல எழுதிக்குடுத்துட்டு வந்து எங்களைத் தெருவில நிப்பாட்டிடீங்களே “ எங்க போய் சொல்லுறது இந்தக்கொடுமைய” நு திரும்பப் பொலம்புனா

இப்ப அவனோட சின்ன மக வந்து
“ஏம்பா எழுதிக்குடுத்தீங்க ரொம்ப முடியலயா கவலைப்படாதீங்க நான் வேலைக்கிப்போய் சம்பாரிச்சி குடுக்குறேன் நீங்க வேலை பாத்தது போதும் ரெஸ்ட் எடுங்க”ன்னு இவனோட மோவாயப்பிடிச்சிக்கிட்டு சொன்னா

“ ஆமா இவ வயசு 14 ஆகுது இப்பத்தான் ஒம்பதாவது படிக்க்கிறா இவ என்னைக்கிப் படிச்சி வேலைக்கிப்போய் சம்பாரிச்சிக் கொண்டாந்து கொடுத்து காப்பாத்த பேசுறா பாரு பெருசா”
” நீ சும்மா இரும்மா இப்போதைக்கி அப்பா வேற வேலைக்கிப்போகட்டும் நான் வேலைக்கிப் போனவன்ன நின்னுக்கிறட்டும் பாவம்மா அப்பா அவருக்கு வயசாகுதில்ல அவரால முடிஞ்சா போகமாட்டாரா அவரைக் கொறை சொல்லாதீங்க அவரே இந்த வயசுல தாத்தா மாதிரி ஆயிட்டாரு”ன்னா சின்னவ
அப்ப பெரிய மக வந்தா

” அப்பா எப்புடியாவது இன்னும் ஒரு வருசம் தாக்குப்புடிங்க இந்த வருசம் என்னோட டிகிரி முடிஞ்சிடும் அப்புறம் நான் வேலைக்கிப்போய் சம்பாரிக்கிறேன் கவலை வேணாம்” நா

“ ஏண்டி எத்தனை வருசம் சம்பாரிச்சி எங்களுக்குக் குடுப்ப இப்பவே21 ஆகுது 24 அப்புறம் மூணு வருசத்துல ஒனக்குக் கலியாணம் பண்ணி வைச்சிட்டோம்னா நீ ஒன் புருசன் வீட்டோட போய்டுவ அப்புறம் பழைய குருடி கதவைத்தொறடீங்குற கதைதான் நீயாவதுஒங்கப்பனை ஒழுங்கா வேலைக்கிப்போகச்சொல்லு”

அங்க வேலை இப்ப ரொம்பக்கொடுமையா இருக்கு 5 ஆள் வேலைய ஒருத்தன் என்கிட்டக் கொடுத்துச் செய்யச்சொல்றாங்க முடியலைன்னா நின்னுக்கோ ஒனக்குக் குடுக்குற சம்பளத்துல மூணு எளவட்டங்களை வேலைக்கிவைச்சி ஒன்னவிட அதிகமா வேலை வாங்க முடியும் பழைய ஆளாச்சேன்னு வச்சிருக்குறோம் முடிஞ்சாப் பாரு இல்ல நின்னுக்க

நம்ம ஏஜன்ண்ட் ஒருத்தன் அஸ்ஸாமில இருந்து ஆள் கொண்டாருறான். எல்லாம் எளவட்டங்க ஒருநாளைக்கி 14 மணிநேரம் வேலை பாப்பாங்க அவனுக்கு இ.எஸ்.ஐ எல்லாம் இல்ல ஒனக்குக்குடுக்குற அலவன்ஸ் பி.எப் பென்சன் எதுவும் குடுக்க வேண்டியதில்ல. லீவே போடாம வேலைக்கி வருவாங்க “ நு சொல்றாங்க கம்பெனில

” என் கூட வேலை பாத்த ஒருத்தன் சீனியர் அவருக்கு இப்படித்தேன் சொன்னாங்க அவர் கேக்கல. பிடிவாதமா மல்லுக்கட்டி வந்து வேலை பாத்தாரு , ஒருநாள் அவர் டிபன் பாக்ஸ்ல அவனுகளே கம்பெனி பொருள் ஒன்ன உள்ளாற வைச்சிட்டு வெளியே போறப்ப செக்யூரிட்டிய வைச்சி புடிக்கிறமாதிரி புடிச்சி வேலைய எழுதிக்கொடு இல்லன்னா போலீசில் கேஸ் குடுப்போம்னு மிரட்ட அவர் ஒரு பெனிஃபிட்டுமில்லாம எழுதிக்குடுத்துட்டு அழுதுகிட்டே போனாரு,

அதுமாதிரி அசிங்கப்பட்டு பெனிஃபிட்டு எதுவுமில்லாம வெளிய வாறதுக்கு கெளரவமா எழுதிக்குடுத்துட்டு பிரச்சனை இல்லாம வரலாமுன்னுதான் குடுத்தேன்” நு இவன் பரிதாபமா சொன்னான்
அதைக்கேட்டதும் அவன் சம்சாரத்துக்கு ஒரு மாதிரி ஆயிப்போச்சு.

“ பரவாயில்லங்க நான் வெவரம் தெரியாமப் பேசிட்டேன் நீங்க இதுனால்வரை எந்த கெட்ட பெயரும் கெட்ட பழக்கமுமில்லாம இருந்து சாதிச்சிட்டீங்க. நாட்டுல அவனவன் சரக்கு அடிச்சிட்டு மல்லாந்து கெடக்கான் வேலைக்கிக் கூடப்போகம நம்மக்கிட்ட காசு வேணா கம்மியா இருக்கலாம் ஆனா கெளரவம் இருக்குங்க. ரெண்டு பிள்ளைகளைக் கட்டிக்குடுக்குறப்ப காசு சம்பாரிச்சிக்கலாம் ஆனா கவுரவத்த விட்டோம்னா அது போனது போனதுதான் திரும்ப வரவே வராது

என்னா வேற வேலைக்கி அதுவும் ஒங்களால முடிஞ்ச வேலைக்கிப் போங்க நானுமிங்குனக்குள்ள ஒரு பனியாரக்கடை போடுறேன் அதுல வார வருமானத்துக்குள்ள செலவு செய்வோம் மக சொன்ன மாதிரி ஒரு வருசத்துல அவ வேலைக்கிப்போவா அப்புறம் எல்லாம் சரியாயிடும் நான் ஒரு ஆக்கங்கெட்டவ நாட்டு நெலவரம் தெரியாமப் பேசிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க “ நா கண்ணு கலங்க.

“ ஆமாப்பா பிரச்சனைய எல்லாரும் சேந்து சமாளிப்போம் நானும் அம்மாவுக்கு ஒதவி பண்ணுறேன் காலேஜுக்கு போய்கிட்டே நீங்க ஒங்கலால முடிஞ்ச வேலைக்கிப்போங்க ஒங்களைப் பாத்தா பாவமா இருக்குப்பா” நா மூத்தவ

” என்னையும் எதுனாச்சும் வேலைக்கிச் சேத்துவிடுங்கப்பா நானும் சம்பாரிக்கிறேன் “நா சின்னவ
“ வேணாம்டா செல்லம் நீ படி ஒனக்கு இப்ப முக்கியம் படிப்புத்தான் வேலைக்கிப்போற வயசில்ல நல்லாப்படிச்சி நல்ல வேலைக்கிப்போய் நல்லா இரு அது போதும் “ நு சொல்லிரெண்டு மகளுகளையும் தட்டிக்கொடுத்தான் அந்த விருப்பமில்லாமல் விருப்ப ஓய்வு வாங்கிய இளம் முதியவன்

- அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE