காகம் அடிக்கடி தலையில் கொத்திவிட்டு சென்றால்?

By செய்திப்பிரிவு

1. கடவுளிடம் நம் வேண்டுதலைச் சொன்னால்தான் தெரியுமா?
''வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ''* என்கிறார் மாணிக்கவாசகர். நமக்கு என்ன வேண்டுமோ, அதையறிந்து நாம் கேட்காமலேயே கடவுள் தருவார். ஆனால் கேட்பது நியாயமாக இருக்க வேண்டும்.

2. இறைவனுக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்வதான் விளக்கம் என்ன ?
பகவத்கீதையில் (9.27) பகவான், "நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும், எதை ஹோமம் செய்தாலும், எதைக் கொடுத்துதாலும், எந்தத் தவத்தைச் செய்தாலும் அதையெல்லாம் எனக்கு அர்ப்பணமாகச் செய்" என்று கூறியுள்ளார்.

நாம் உண்ணும் உணவை இறைவனுக்குப் படைப்பதும், நாம் உடுக்கும் துணியை இறைவனுக்கு உடுத்திய பிறகு நாம் உடுத்துவதும், நாட் கட்டும் வீட்டை அவன் கோயிலாகக் கருதுவதும் சிறந்த தெய்வ ஆராதனையாகும்.
நாம் நீராடி மகிழ்வதால் இறைவனுக்கும் அபிஷேகம் செய்து மகிழ்கிறோம்.

"உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்கிறார். நம்மாழ்வார். 
இவை அனைத்தும் உன்னத மனதின் இயல்பான வெளிப்பாடுகள். இந்த ஆராதனை முறை நெடுநாளாக நமது மூதாதையர் கண்ட வழிபாட்டுச் சம்பிரதாயம்.

உலக வழக்கில் நமது மரியாதைக்கு உரியவர்கள், அன்பிற்கு உரியவர்கள், உறவினர்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு நாம் ஏதேனும் வாங்கிக் கொடுக்க நினைக்கிறோம்', வாங்கியும் கொடுக்கிறோம். 
அது போன்று எல்லா உறவுகளின் ஒட்டுமொத்தமான உறவினனான (சரியாகச் சொல்லப்போனால், உண்மையில் உள்ள ஒரே உறவினனான) நம் இறைவனோடு, நீங்கள் குறிப்பிட்ட வழிபாட்டு முறைகள் அனைத்தின் மூலமாகவும் நாம் தொடர்புகொள்கிறோம்.

3. அரோகரா என்பதன் பொருள் என்ன?
'ஹர ஹர' என்பதே மருவி அரோகரா ஆகி விட்டது. 'ஹர' என்றால் 'போக்குதல்'. 'எனது கஷ்டங்களையும் பாவங்களையும் போக்கியருள வேண்டும் இறைவா....'என இருமுறை உரக்கச் சொல்வதே அரோகரா கோஷத்தின் பொருள்.

4. காகம் அடிக்கடி என் தலையில் கொத்திவிட்டுச் செல்கிறது. இதற்குப் பரிகாரம் என்ன?
பித்ருதோஷம் அல்லது சனிதோஷம் இருந்தால் இப்படி நடக்கும். சனிக்கிழமைதோறும் உங்கள் சக்திக்கு ஏற்ப ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

5.அஷ்டமத்து சனிக்கு எளிய பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்?
அஷ்டமத்து சனியினால் உடல்நலம் பாதிக்கும். ஆயுள் கண்டங்களும் ஏற்படலாம். திங்கட்கிழமை தோறும் சிவனுக்கு வில்வமாலை சாத்தி வழிபட்டு வாருங்கள். எமனையே சம்ஹாரம் செய்த சிவனருளால் நலமாய் வாழலாம்.

6. சந்திராஷ்டமத்தன்று பிரச்னையைத் தவிர்க்க என்ன பரிகாரம் செய்யலாம்?
கவனமாகவும், பொறுமையாகவும் இருப்பதே பெரிய பரிகாரம். காலையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்ட பின், வேலைகளைத் துவங்கினால் பிரச்னை வராது.

7. கர்ப்பிணிப் பெண் இருக்கும் வீட்டை புதுப்பிக்கக்கூடாது என்பது ஏன்?
வீட்டைப் புதுப்பித்தல், ஒட்டடைஅடித்தல் போன்றவை செய்யும்போது குளவிக்கூடுகள் மற்றும் ஜீவராசிகள் பாதிக்கப்படும். கருத்தரித்த பெண்ணிருக்கும் வீட்டில், ஜீவராசிகளுக்கு துன்பம் நிகழாமல் இருக்க பெரியவர்கள் இப்படி கூறியுள்ளனர்.

8. உப்பு வாங்க சிறந்த நாள் எது?
உப்பில் லட்சுமிவாசம் செய்கிறாள். வெள்ளிக்கிழமை வாங்குவது நல்லது.

9. தாய்வழி குலதெய்வத்தை, தனது குலதெய்வமாக மகன் வழிபடலாமா?
தாராளமாக வணங்கலாம்.

10. கோவில் யானையிடம் ஆசி பெறுவதன் நோக்கம் என்ன?
கோவில் யானை ஆணாக இருந்தால் விநாயகராகவும், பெண்ணாக இருந்தால் கஜலட்சுமியாகவும் கருதப்படுகிறது. எனவே ஆசிபெற்றால் விநாயகர், லட்சுமி திருவருள் கிடைக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE