மனிதர்களாக பிறந்த அனைவரது வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் அவரவர் செய்த கர்ம வினைகள் தான் காரணம். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்காக தான் கடவுள் நமக்கான தண்டனையை கொடுக்கின்றார்.
நாம் செய்த கர்ம வினைகளை... பாவங்களை கழிப்பதற்கு சாஸ்திர ரீதியாக நமக்கு நிறையவே வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒரு சுலபமான பெருமாள் வழிபாட்டினை பற்றி இங்கு காண்போம்...!
பெருமாள் வழிபாடு புண்ணியத்தை சேர்ப்பது. பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வந்தாலே போதும். நமக்கு அது புண்ணியம் தான்.
இருப்பினும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்குவதற்கு என்று சாஸ்திரத்தில் சில வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைப்படி நம் பெருமாள் கோவிலுக்கு சென்றால் இந்த மூன்று விஷயங்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும். அது என்னென்ன விஷயங்கள்?
முதலாவது பெருமாள் கோவில் தீர்த்தம். நம்முடைய உடலில் கண்ணுக்கு தெரியாத எந்த பிணி இருந்தாலும் அதை தீர்க்கக்கூடிய சக்தி, இந்த பெருமாள் கோவில் தீர்த்தத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தீர்த்த ரூபத்தில் நம் கையில் வருவது அந்த பெருமாள் தான். ஆக பெருமாள் கோவிலுக்கு சென்றால் கட்டாயமாக தீர்த்தத்தை வாங்கி பருகிக் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக துளசி. பெருமாளுக்கு சூடியிருக்கும் துளசியை நம் கையில் வாங்கி நம் கண்களில் ஒற்றிக் கொண்டாலே போதும் பெருமாளின் அன்பினை நாம் முழுமையாகப் பெற்று விடலாம். பெருமாளின் அன்பை பரிபூரணமாக பெற வேண்டும் என்றால் பெருமாள் கோவில் துளசியை கட்டாயம் நம் கைகளில் வாங்கி, நம் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இறுதியாக சொல்லப்படுவது சடாரி. இதுதான் நம்முடைய தலையெழுத்தை மாற்றக்கூடியது. அந்த பிரம்மா நம்முடைய தலை எழுத்தை எப்படி கிறுக்கி வைத்திருந்தாலும் சரி, அதை சரி செய்யக்கூடிய சக்தி இந்த சடாரிக்கு உண்டு. சடாரிக்கு 'பாதுகை" என்ற மற்றொரு பெயரும் இருக்கின்றது. 'பா" என்றால் பாவத்தை விளக்குவது என்று பொருள். 'து" என்றால் துன்பங்கள் விலகும் என்பதும் பொருள். 'கை" என்றால் அந்த பெருமாளே நம்முடைய வாழ்க்கையை கை கொடுத்து மேலே தூக்கி விடுவார் என்பது பொருளாக சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பாவங்கள் விலகி, துன்பங்கள் விலகி, வாழ்க்கையில் மேலே ஏறி வர வேண்டும் என்றால் பெருமாள் வழிபாட்டை தூய்மையான மனதோடு, ஆத்மார்த்தமாக வழிபாடு செய்தாலே போதும். பல நன்மைகள் நம்மை தேடி வரும்.
இந்த புரட்டாசி மாதத்தில் ஒரு நாளாவது பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் கோவில் தீர்த்தத்தைப் பருகி, பெருமாள் கோவில் துளசியை உங்கள் கையால் வாங்கி, சடாரியை உங்களுடைய தலையில் வைத்து கொள்ளுங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.