மரத்தை தெய்வமாக வழிபடுவது ஏன்?

By செய்திப்பிரிவு

மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் வழக்கம் உலகிலேயே இந்து மதத்தினரிடம் மட்டுமே உள்ளது.
ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே.

தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி,வில்வம், ருத்ராட்சம்,வேம்பு,அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குகின்றனர்.

மரங்களுள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையிலே சொல்கிறார்.
அரச மரத்தை சிவ சொரூபமாகவும், வேப்பமரத்தை சக்தி சொரூபமாகவும் போற்றுகிறோம்.அதனால் தான் அரசும் வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவ சக்தி உறையும் இடமாகக் கருதி வணங்கி வழிபடுகிறோம்.

 மகமாயி மாரியம்மனுக்கு வேப்பிலைக்காரி என்றே பெயர்.
அம்மை நோயைத் தீர்க்கும் தெய்வம் மகமாயி.அவள் பெயரால் தான் அந்த நோயை அம்மை என்று குறிப்பிடுகிறோம்.

அம்மை நோய்க்கு இன்று வரை ஆங்கில மருத்துவத்தில் கூட மருந்து இல்லை.அம்மை வருமுன்னே தடுக்கக்கூடிய அம்மை நோய்த் தடுப்பு ஊசி (மருந்து)தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நோய் வந்த பின் காப்பது அவள் அருள் ஒன்றே!அதனால் அம்மை நோய் கண்டவரது வீட்டில் வேப்பிலைக் கொத்து சொருகி வைப்பதும்,அம்மை நோய் குணமாகி தலைக்கு ஊத்துதல் என்னும் பெயரில் நோயாளியைக் குளிப்பாட்டும்போது,அந்த நீரில் வேப்பிலையை ஊறப் போட்டு அந்த நீரால் குளிப்பாட்டுவதே இன்றும் வழக்கத்திலுள்ளது.

இயற்கை அன்னையை வணங்கியே தங்கள் ஆன்மிக சித்தாந்தத்தைத் தொடங்கிய பண்டைய பாரதமக்கள், இயற்கையின் முதல் அம்சமான மரங்களை வழிபடத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை.

இன்றும்,நாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் தேங்காய்,பழம்,வெற்றிலை- பாக்கு மற்றும் இறைவனுக்கு அணிவிக்கும் சந்தனம்,ஜவ்வாது உட்பட எல்லாமும் மரங்களின் கொடை.மனிதன் உயிர் வாழப் பிராண வாயு தேவை.மரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயுவை (கார்பன் டை ஆக்ஸைடை) உட்கொண்டு,பிராண வாயுவை (ஆக்ஸிஜனை) வெளியிட்டு, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் உயிர்த் துடிப்பைத் தொடர்ந்து நடத்துகின்றன.இந்தப் பேருண்மையை நம் மக்கள் ஆதிகாலத்திலேயே அறிந்து கொண்டதன் விளைவுதான் இந்த மரவழிபாடு!

வேப்பமரமானது ஊருக்கு காவல் தேவதையாகவும்,உந்து சக்தியாகவும் விளங்குவதால், கிராம காவல் தெய்வங்களான காளியம்மன்,துர்க்கையம்மன், மாரியம்மன் கோவில்களில் வேப்பமரம் போற்றி வணங்கப்படுகிறது.

காடுகள் மற்றும் வெட்டவெளிப் பகுதிகளிலுள்ள அரச முதலான மரங்களில் பிரம்மராட்சதர் போன்ற தீய தேவதைகள் இருக்குமென்பதால்,அகால நேரங்களில் அங்கு போகக் கூடாது என்றும்,தொடக்கூடாது என்றும் சொல்லிவைத்தனர். அவ்வாறு போகும் அவசியம் நேரிட்டால் வேப்பிலையுடன் செல்வார்கள் பாதுகாப்பு கருதி. 
அம்மரங்களுடன் வேம்பையும் இணைத்துவைப்பர்.எனவே தான் இந்த வேப்ப மரத்தை சர்வசக்திமயமாகவும், நாராயணரின் சக்தியான நாராயணியாகக் கருதி தனித்தும்,அரச முதலான மரங்களுடன் சேர்த்துவைத்தும் வழிபட்டனர்.

இறையருளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு நம் முன்னோர் காட்டிய உயர்வான வழி இது.
வேப்ப மரக் கட்டையில் சூரியதேவனின் வடிவத்தை செய்து வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும் என்று சாத்திரங்கள் உரைக்கின்றன. 

எல்லா தெய்வாம்சமும் பொருந்திய அரசமரம் இருக்கும் பகுதி மிகவும் புனிதமானது. எனவே இம்மரத்தற்கடியில் பாதபீடமாக கட்ட கல் அல்லது கருங்கல்லால் ஒரு மேடை அமைக்க வேண்டும்.

அரச மரத்தடியில் விநாயகரையோ, நாகரையோ, இஷ்ட தெய்வங்களையோ சூலம் முதலான குறியீட்டு உருவிலோ சிலைகளாகவோ பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று சிவாகமங்கள் கூறுகின்றன.
இவ்வாறு செய்யப்படும் பிரதிஷ்டைகளால் விரும்பிய பயனை விரைந்து பெறலாம். பூஜை, ஹோமம், பித்ரு காரியங்கள் செய்வதற்கும் அரசமரப் பகுதி ஏற்ற இடமாக உள்ளது.

தல விருட்சத் தத்துவம்...
உயிர் வாழ உணவுக்கும், உயிர் ஆபத்தான நோய்களிலிருந்து மனிதனைக் காக்கும் மருந்துக்கும் மரங்களே துணை செய்கின்றன.
கைம்மாறு கருதாத சேவை.

உப்பு நீரைப் பெற்றுக் கொண்டு இனிமையான இளநீரைத் தரும் மேன்மை அசுத்தமான எருவை அடி உரமாகப் பெற்றுக் கொண்டு தூய்மையான மலரையும் சுவை மிக்க கனியையும் கொடுக்கும் கனிவு.மனிதன் நாகரிக வளர்ச்சி பெறத் தொடங்கியதும் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள மரங்களை வெட்ட நேர்ந்தது; 

பின்னர் எரிபொருளுக்கும் அதுவே தேவையாயிற்று.மரங்களை இதற்கென வெட்டும் போது அவன் மனசாட்சி உறுத்தியதோ, என்னவோ? இனி மரங்களை இயன்றவரை பாதுகாக்க வேண்டும் என எண்ணினான். 
எது ஒன்றை மனிதன் மதிப்புள்ளதாகக் கருதுவானோ, அதைத்தான் பாதுகாப்பான். அதனால் மரங்களை மதிப்பிற்குரியன ஆக்க,அதனை தெய்வ நிலையில் வைத்து போற்றலானான்.

மரங்கள் ஆராதிக்கப்பட்டு ஆலயங்களிலும் வைத்து வழிபடப்பட்டன.
மரம் செடி,கொடிகளை வெட்டுவதால் நமக்கு ருணா என்ற பாவம் வந்து சேர்வதாகவும், அவசியத்தின் பேரில் மரத்தை வெட்டும் முன்,அதனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சொல்கிறது சாஸ்திரம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE