நீச்சமடைந்த கிரகங்களுக்குரிய பரிகாரம்?

By தேஜஸ்

பலரது ஜாதகத்தில் நவகிரகங்கள் நீச்சமடைந்திருக்கும். இதனால் அவர்கள் அதனை வலிமைப்படுத்துவதற்குரிய பரிகாரத்தை ஆயுள் முழுவதும் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். 

இவற்றிற்கான  சில எளிய பரிகாரங்களை கீழே காண்போம்.

உங்களது ஜாதகத்தில் சூரியன் - நீச்சம் அடைந்திருந்தால் சூரிய பகவானின் நல்லருளை பெற அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் சந்திப்பின்போது அதற்குரிய நேரத்தில் சந்திக்காமல், இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை தாமதித்து சந்திப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால் உங்களது சந்திப்பு வெற்றி பெறும். இது சூரியன் நீச்சத்திற்கான வாழ்வியல் பரிகாரமாகும். 

அதாவது நேரந்தவறாமையை ஒருபோதும் உறுதியாக கடைப்பிடிக்க கூடாது. சற்று தாமதத்தை தான் திட்டமிட்டு கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், இவர்கள் தங்களது இடது கையிலோ அல்லது வலது கையிலோ கை கடிகாரத்தை கட்டும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இதனை தவிர்க்க இயலாத சூழல் இருந்தால் குறைந்த பட்சம் ஞாயிற்றுக் கிழமையாவது கைக்கடிகாரத்தை கைகளில் கட்டும் பழக்கத்தை உறுதியாக தவிர்க்க வேண்டும்.

சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் கைக்கடிகாரம் கட்டுவது ஆடை கட்டுப்பாடுகளில் ஒன்று அதனால் அதனை தவிர்க்க இயலாது என கருதினால், ஞாயிற்றுக்கிழமைகளில் யாருக்கேனும் ஒருவருக்கு விலை உயர்ந்த கை கடிகாரம் ஒன்றினை பரிசாக வழங்கி விடுங்கள். இதனால் சூரியன் நீச்சம் அடைந்திருப்பதால் ஏற்படும் கெடு பலன் குறையும்.

உங்களது ஜாதகத்தில் சந்திர பகவான் நீசம் அடைந்திருந்தால் சந்திர பகவானின் வாழ்வியல் அம்சமான குடிநீர் -நீர் -உணவு -வசீகர தன் தோற்றம்- ஆகியவற்றில் எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 
உதாரணத்திற்கு நீங்கள் உணவை விரும்பி உண்பவர்களாக இருந்தால்  உணவை உண்ண  தொடங்கும் முன் ஒரு பிடி உணவை காக்கை அல்லது பூமா தேவிக்கு என ஒதுக்கிவிட்டு  தொடங்கலாம்.

சந்திரன் என்பது நீரை குறிப்பதால் நீராடுவதற்காக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீரை விட கூடுதலான நீரில் நீராடுங்கள். இதனாலும் சந்திரனின் கெடு பலன் குறையும். 

சந்திரன் என்பது தாயாரை குறிப்பதால் உங்களது தாயாரிடம் அல்லது தாய் போன்ற நிலையை அடைந்தவரிடம் ஆசி வாங்குவதை வழக்க படுத்திக் கொள்ளுங்கள். இதனாலும் சந்திர பகவானின் கெடு பலன் குறைந்து சுப பலன் அதிகரிக்கும்.

செவ்வாய் பகவான் உங்களது ஜாதகத்தில் நீச்சம் அடைந்திருந்தால் காலை மற்றும் இரவு வேளைகளில் நீங்கள் பல் துலக்கும் போது அதனை ஒரு முறை மேற்கொள்ளாமல் அடுத்தடுத்து இரண்டு முறை மேற்கொண்டால் அதுவே எளிய பரிகாரமாகும்.

இதனை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பதற்கு கடினமாக அல்லது அசௌகரியமாக இருக்கிறது என நினைப்பவர்கள் பற்களால் அவர்களுடைய தோற்றம் அவலட்சணமாக இருக்கிறது என கருதுபவர்களுக்கு, பற்கள் சீரமைப்பு சிகிச்சை செய்து கொள்வதற்கு நிதி உதவியோ மருத்துவ உதவியோ அளிக்கலாம்.

ஏனெனில் பற்கள் என்பது செவ்வாய் பகவானின் உடலியல் அம்சமாகும். இதனை மேற்கொள்வதிலும் பொருளாதார சிக்கல் இருக்கிறது என கருதுபவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டும் சாரதிக்கு செவ்வாய்க்கிழமைகளில் கோழி இறைச்சி உணவு மற்றும் கோழி இறைச்சி பிரியாணியை தானமாக வழங்கலாம்.  

இதனால் செவ்வாய் பகவானின் கெடு பலன் குறைந்து சுப பலன் அதிகரிக்கும்.
உங்களது ஜாதகத்தில் புதன் பகவான் நீசம் அடைந்திருந்தால் நாளாந்தம் குறைந்தபட்சம் இரண்டு மணி தியாலமாவது எழுதும் வழக்கத்தை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். 

இதில் ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால்  உங்களது வீட்டின் வரவு- செலவு கணக்கினை ஏதேனும் ஒரு நாட்குறிப்பில் எழுதும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

தொடக்க நிலையில் இருந்து ஐந்தாம் நிலை வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்களுக்கு தேவையான கற்பித்தலுக்குரிய உபகரணங்களை தானமாக வழங்கலாம். 

புதனின் அம்சங்களில் ஒருவராக திகழும் திருநங்கைகளுக்கு வஸ்திர தானத்தை வழங்கினாலும் நீசத்தினால் ஏற்படும் கெடு பலன்கள் குறைந்து, நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

புதன் பகவான் என்பது ஆண்டவனை துதிக்கும் அர்ச்சனையை குறிப்பிடுவதால்  புதன் கிழமைகளில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலையை சாற்றி அர்ச்சனை ஒன்றை மேற்கொள்ளுங்கள். இதனை தொடர்ச்சியாக புதன் கிழமைகளில் மேற்கொள்ளும் போது புதன் பகவானால் ஏற்படும் கெடுப் பலன்கள் குறைந்து சுப பலன்கள் உயரும்.

உங்களது ஜாதகத்தில் குரு பகவான் நீசம் அடைந்திருந்தால் குருவின் அம்சம் என போற்றப்படும் யானையை வணங்கிட வேண்டும். 

குறிப்பாக வியாழக்கிழமைகளில் அருகில் இருக்கும் ஆலயங்களில் இறை பணிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் யானையை வணங்குதல் யானையிடம் ஆசி பெறுதல் யானைக்கு விருப்பத்திற்குரிய உணவினை வழங்குதல் யானையை பராமரிப்பதற்கான செலவினில் பங்களித்தல்  இதுபோன்ற செயல்களை செய்தால் குரு நீசம் என்பது மறைந்து, குரு உச்ச பலனை வழங்குவார்.

உங்களது ஜாதகத்தில் சுக்கிர பகவான் நீசம் அடைந்திருந்தால் அவரால் ஏற்படக்கூடிய கெடுப் பலன்களை குறைந்து சுப பலன்களை அதிகரிக்க வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரை என குறிப்பிடப்படும் தருணங்களில் குறிப்பாக மதிய வேளையில் இனிப்பு தின்பண்டங்களை சுவைத்திட வேண்டும்.

சுக்கிர பகவான் என்பது சொகுசான விடயங்களை குறிப்பதால் வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் வீட்டிலிருந்து புறப்படும் போது வெண்மை நிற உடை அணிந்து, விலை உயர்ந்த வாசனை திரவியங்களை பூசிக் கொள்ளுங்கள்.
இதன் நறுமணம் சுக்கிர பகவானை குளிர்வித்து, அவரது ஆசியை வழங்கும். மேலும் சுக்கிர பகவான் நீச்சம் அடைந்திருந்தால் அவரின் அம்சத்தை பெற்றிருக்கும் வெள்ளியிலான மோதிரம்- பிரேஸ்லெட்- செயின் - இவற்றில் ஏதேனும் ஒன்றை அணிந்திருப்பது நல்ல பலனை தரும்.  

அதே தருணத்தில் சுக்கிர பகவான் நீசம் அடைந்திருந்தால்  வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது மனைவியின் பேச்சிற்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்க வேண்டும். இதனால் சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் சனீஸ்வர பகவான் நீச்சம் அடைந்திருந்தால் சனியின் கெடு பலன்களில் இருந்து தப்பிப்பதற்கு சனியின் ஆதிக்கத்தை பெற்றிருக்கும் தூய்மை பணியாளர்கள்- துப்புரவு தொழிலாளிகள் -விளிம்பு நிலை உழைப்பாளிகள்- ஆகியோருக்கு அவர்கள் விரும்பும் வகையில் உதவிட வேண்டும்.

இவர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் வழங்கலாம். தோலாலான காலணியை வழங்கலாம். இவை அனைத்தும் வயதில் மூத்தவர்களுக்கு செய்யும் போது சனி பகவான் மனம் குளிர்ந்து கெடு பலன்கள் குறைத்து நல்ல பலன்களை வழங்குவார்.

ஒருவரது ஜாதகத்தில் இராகு பகவான் நீச்சம் அடைந்திருந்தால்  பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இராகு பகவானின் நல்லருளை பெறுவதற்கு அவரின் அம்சங்களாக திகழும் விதவைப் பெண்கள் - இஸ்லாமியர்கள்-  இஸ்லாமியர்களில் ஏழைகள் ஆகியவர்களுக்கு  அவர்கள் விரும்பும் வகையிலான உதவிகளை செய்ய வேண்டும்.

இதற்கு வாய்ப்பில்லை என்றாலோ அல்லது அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்றாலோ சனிக்கிழமைகளில் இராகு கால வேளையில் உளுந்து வடையை சாப்பிடலாம். உடன் வருபவர்களுக்கு தானமாக வழங்கலாம். உளுத்தம் பருப்பு மூலம் தயாரிக்கப்படும் இனிப்புகளையும் தானமாக வழங்கலாம்.

ஒருவரது ஜாதகத்தில் கேது பகவான் நீசம் அடைந்திருந்தால்.. கேது பகவானின் அருளைப் பெற உங்களுடைய ஜாதகத்தில் வலிமை மிகுந்த கிரகத்தின் மணியிலான மாலையை அணிய வேண்டும்.

அத்துடன் கேது பகவானின் அம்சமான விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலையை சாற்றி வழிபட வேண்டும். நீங்கள் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் அர்ச்சனை செய்வதை விட மாலையை சாற்றி வழிபட்டால் கேதுவால் ஏற்பட்ட நீச தன்மை குறைந்து சுப தன்மை ஏற்படும்.

நவ கிரகங்களில் எந்த கிரகம் நீச்சமடைந்திருக்கிறதோ அதனை வலிமைப்படுத்தும் போது தான் அதற்கான சுப பலன்கள் கிடைக்கும். நவ கிரகங்களில் எந்த கிரகம் உங்களது ஜாதகத்தில் நீச்சமடைந்திருக்கிறதோ அதற்குரிய வாழ்வியல் பரிகாரத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது நீச்சத்திற்கான கெடு பலன்கள் குறைந்து , உச்சத்திற்கான சுப பலன்கள் கிட்டும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE