அதிக பலன்கள் தருவது தீபமா அல்லது கற்பூரமா?

By செய்திப்பிரிவு

இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளில் 16 விதம், 32 விதம், 64 விதம் என்பதாக வேறுபாடுகள் உண்டு.

ஆனால் அனைத்து விதமான பூஜைகளிலும் (நெய்) தீபம் காண்பிப்பதும், கற்பூரம் காண்பிப்பதும் கட்டாயம் உண்டு.

தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல்.
அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம் வைத்து உபசாரம்.

அதன் பிறகுதான் பக்தன் இறைவனின் திருமேனி முழுவதும் தரிசனம் செய்வதற்காகக் காண்பிக்கப்படும், கற்பூரம் ஏற்றி காண்பிக்கும் கற்பூர உபசாரம்.

தீபம் ஏற்றி வழிபாடு, கற்பூரம் காண்பித்து வழிபாடு இரண்டும் வெவ்வேறான பூஜா உபசாரங்கள்.

தற்சமயம் சில கோவில்களில் சில இடங்களில் (கற்பூரத்தால் அந்த இடம் மாசுபடுவதாக, தவறாக எண்ணிக்கொண்டு) இறைவனுக்கு கற்பூரம் காண்பிக்க வேண்டிய சமயத்திலும் கூட, தீபத்தையே ஏற்றிக் காண்பிக்கப்படுகிறது.

ஆனால், இவை இரண்டுக்கும் தனித்தனியே வெவ்வேறு பலன்கள் உண்டு.
காந்திர் தீபம் இறைவனுக்கு எவ்வளவு தீபங்கள் ஏற்றுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்தனின் மனதிலும், வாழ்விலும், குடும்பத்திலும் ஒளிப்பிரகாசம் ஏற்படும்.

இருள் அகலும் கற்பூரம் காண்பிப்பதால் மனதிலுள்ள அழுக்குகள் விலகி, மனம் இறைவனிடமே ஒன்றிவிடும்.

தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்போது அந்த தீபத்தில் எந்த ஒரு மாறுதலும் ஏற்படாது.
கற்பூரம் காண்பிக்கும்போது, அந்தக் கற்பூரம் சிறிது சிறிதாக உருகிக் கரைந்து போகும். இறுதியில் கற்பூரம் முழுவதுமாக எரிந்து போய் எதுவும் மீதமிருக்காது.

கற்பூரத்தைப் போல் பக்தர்கள் இறைவனிடத்தில் மனதை செலுத்த வேண்டும். மனது கற்பூரம்போல், கரைந்துவிட வேண்டும்.

மனது கரைந்தால், தான் என்னும் எண்ணம் விலகி இறைவனுடனே ஜோதி ஸ்வரூபமாகக் கலந்து விடும். இதையே இறைவன் பக்தனுக்கு அருளுவார்.

இந்தத் தத்துவத்தை உணர்த்தவே இறைவனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுகிறோம்...

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE