நாலாம் பிறையைப் பார்த்தால் நாய்படாத பாடு படுவான்?

By சரவணன்

ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்து வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் சந்திரனைக் காண்பவர்கள் தொல்லைக்கு ஆளாவார்கள் என்று நம்பப்படுகிறது.

‘நாலாம்பிறையைப் பார்த்தால் நாய்படாதபாடு படுவான்’ என்று கிராமத்துப் பெரியவர்கள் சொல்வார்கள். அதனால்தான் அமாவாசை கழித்த இரண்டாவது நாளே சந்திர தரிசனம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நாளில் சந்திரனை தரிசித்தவர்கள் அடுத்து வரும் நான்காம் பிறையில் சந்திரனைக் காண நேர்ந்தாலும் தோஷம் உண்டாகாது.

நான்காம்பிறை நாளில் சந்திரனைக் கண்டால் தோஷம் உண்டாகும் என்ற கருத்து புராணக்கதைகளில் இருந்து பரவியிருக்கிறது.

விநாயக சதுர்த்தி விழாவில் ஆனந்தக் கூத்தாடிய
விநாயகப் பெருமானின் திருவுருவத்தைக் கண்டு சந்திரன் பரிகாசம் செய்ய, தனது
ஒளியினையும், அழகினையும் இழந்து அழிந்துபோகக் கடவது என்ற சாபத்தினை சந்திரன் பெற்றார். அவரது சாப விமோசனத்திற்காக,

பிரம்மாவின் ஆணைப்படி தேவகுருவான ப்ருஹஸ்பதி சந்திரனுக்கு சதுர்த்தி விரதத்தினை உபதேசித்தார்.

முறைப்படி பூஜை செய்த சந்திரன்,
“த்வம் காரணம் காரண காரணாநாம்
வேத்தாஸி வேத்யம் ச விபோ ப்ரஸீத
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ கணேச
லம்போதர வக்ரதுண்ட விரிஞ்சி நாராயண
பூஜ்யமாந க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்”

என்று பிரார்த்தனை செய்தார். இதனால் மனம் மகிழ்ந்த விநாயகப் பெருமான், நான்காம் பிறை நாளில் மட்டும் சந்திரனைக் காண்பவர்கள் அந்த வருடம் முழுவதும் தொல்லைகளை அனுபவிப்பர் என்று தனது சாபத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொண்டார். இந்த கருத்தினை மெய்ப்பிக்கும் விதமாக ஸ்காந்த புராணத்தில் வரும் நந்திகேஸ்வர - சநத்குமார ஸம்வாதத்தில் ‘சியமந்தக உபாக்யானம்’ என்ற அத்தியாயத்தில் கிருஷ்ண பகவான் குறித்த ஒரு கதை இடம்பெற்றிருக்கிறது.

ஒருமுறை கிருஷ்ணன், ஸ்யமந்தகமணி என்ற அபரிமிதமான ரத்தினத்தின் மேல் ஆசை கொண்டு, தனது உறவினன் என்றும் பாராமல் சததன்வா என்ற யாதவனைக் கொன்றதாக பலராமனாலும், யாதவ மக்களாலும் தூற்றப்பட்டு வீணான அவப்பெயரை அடைந்தாராம். இவ்வாறு அவர் மீது வீண்பழி வரக் காரணம் அவர் பாத்ரபத சுக்ல சதுர்த்தி நாளில் சந்திரனைக் கண்டதே ஆகும் என்று நாரதர் கிருஷ்ணனிடம் சொல்ல, கிருஷ்ண பரமாத்மா முறைப்படி சித்திவிநாயக பூஜை செய்து தனக்கு உண்டான அவப்பெயர் நீங்கப்பெற்றதாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு நான்காம் பிறையில் தவறுதலாக சந்திரனை தரிசிக்க நேர்ந்தால், ஒரு பாத்திரத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு, “ஸிம்ஹ ப்ரஸேனமவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: சுகுமாரக மா ரோதீஸ்த்வ ஹோஷ் ச்யமன்தக:” என்ற ஸ்லோகத்தினை ஜபித்து தீர்த்தத்தினை உட்கொள்ள வேண்டும் என்ற பரிகாரமும் அதே புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதைவிட எளிய பரிகாரமாக தவறுதலாக நான்காம் பிறையில் சந்திரனைக் காண நேர்ந்தால் விநாயகரைப் பூஜித்த நிர்மால்யத்தினைக் கொண்டு அதாவது பூஜை செய்த அறுகம்புல் அல்லது மலர்களை சந்திரனை நோக்கித் தூவி, விநாயகப் பெருமானை பிரார்த்தனை செய்துகொண்டால் தோஷம் நீங்கும், அவப் பெயர் உண்டாகாது என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள். எப்படி ஆகினும், சந்திரனைக் காணும்போதெல்லாம்
விநாயகப் பெருமானின் நினைவு நமக்கு வந்தாலே போதுமானது, எப்படிப்பட்ட தோஷமும் நீங்கிவிடும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE