பலாப்பழம் சாப்பிட்டால் பல பிரச்னைகள்?

By செய்திப்பிரிவு

தற்சமயம் பலாபழ சீசன் என்பதால் இந்த பதிவு அனைவருக்கும் பலனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

முக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. கேரளாவில் இதை சக்கைப்பழம் என்று அழைப்பார்கள்.

மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

மருத்துவ பயன்கள் :

* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.

* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.

* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.

* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.

* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.

* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.
* பலா மரத்தின் வேரை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் நோய் குணமாகும்.

* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.
* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.

ஒரு எச்சரிக்கை:
பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை :

* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.

* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.

* சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு ஜீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE