வாய் நாற்றத்தைப் போக்கும் கொத்தமல்லி

By செய்திப்பிரிவு

கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள். அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனை அறிந்ததில்லை.

பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி. இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர். இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.

நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர். இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை.

இது கார்ப்புச் சுவை கொண்டது. குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.

சுவையின்மை நீங்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.
வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும்.

இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும். புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும் கண் சூடு குறையும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.

உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மன அமைதியைக் கொடுக்கும். உடலுக்கு வலுவைக் கொடுக்கும். விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாய் நாற்றத்தைப் போக்கும். பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE