உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், 'உண்ட பின் நஞ்சாக மாறும்' (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.
அமெரிக்காவில் செயல்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDCP) தகவல் படி, வேகவைக்கப்படாத அல்லது பச்சையான இறைச்சி, சரியாகக் கழுவப்படாத காய்கறிகள், பச்சை பால், பிற பால் பொருட்கள், அதிக நேரம் சேமித்து வைக்கப்பட்ட முட்டைகள், மீன் போன்றவற்றை உண்ணும் போது அவை நச்சுத்தன்மைக்கு மாறுகின்றன எனத் தெரியவருகிறது. சரியாக சுத்தம் செய்யப்படாத உணவு. அசுத்தமான முளைகட்டிய பயறுகள், மற்றும் அதிக காலம் பயன்படுத்தப்படாத மாவு போன்ற உணவுகளையும் இதில் அடக்கலாம்.
பச்சையான அல்லது வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதால் "உணவு நஞ்சாக" மாறும் ஆபத்துக்கள் அதிகம். இவற்றில் உள்ள நுண்ணுயிரிகளில் கேம்பிலோபாக்டர் என்ற பாக்டீரியா உள்ளது. சால்மோனெல்லா, க்ளோஸ்ட்ரிடியம் பெர்ஃபிரிங்கன்ஸ், மற்றும் ஈ.கோலி போன்ற நுண்ணுயிரிகளும் சில நேரங்களில் இருக்கலாம்.
சாப்பாட்டுக்குப் பின் மீதமுள்ள இறைச்சியை, சமைத்த இரண்டு மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைக்க பரிந்துரைக்கிறார்கள். இதே போல் பச்சை இறைச்சியை குளிர் சாதனப் பெட்டியில் வைக்க நீங்கள் விரும்பினால் இறைச்சித் துண்டுகளை பல சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவேண்டும் என்றும், அப்போது தான் வேகமாக உறைந்து, பாக்டீரியா வளர்ச்சியின் வாய்ப்பைக் குறைக்கும் என்று சி.டி.சி.பி. (CDCP) விளக்குகிறது.
பச்சை காய்கறிகள் சில நேரங்களில் சால்மோனெல்லா, ஈ.கோலி மற்றும் லிஸ்டீரியா போன்ற நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கலாம். விளைவிக்கும் இடத்திலிருந்து நம் வீடு வரை அவை பயணிக்கும் எந்த இடத்திலும் மாசுபடலாம்
பதப்படுத்தப்படாத பால் மற்றும் பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உபப்பொருட்களும் சாப்பிட்ட பின் நஞ்சாக மாறும் ஆபத்துக்கள் அதிகம். ஏனெனில் பச்சை பாலில் கேம்பிலோபாக்டர், கிரிப்டோஸ்போரிடியம், ஈ.கோலி, லிஸ்டீரியா, சால்மோனெல்லா போன்ற நுண்ணுயிரிகள் இருக்கலாம். இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், தயிர் போன்றவையும் தீங்கு விளைவிக்கும். பாலில் உள்ள சத்துக்கள் அதை சூடாக்கும் போது பெரிய அளவில் அழிந்து போவதில்லை என்பதால் அதைச் சூடாக்கிச் சாப்பிடுவதே நலம்.