முதல்வர் விஜய்யின் பங்களாவின் கதவில் மோதி அமைச்சர் புஸ்ஸிக்கு காயம்!

By செய்திப்பிரிவு

சென்னையில் முதலமைச்சர் விஜய் புதிதாகக் குடியேறியுள்ள அரசு பங்களாவான ‘பாமினி இல்லத்தில்’ அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கண்ணாடி கதவில் மோதி காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்த பங்களாவில் குடியேறிய முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து அளித்ததுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் விஜய் புறப்படத் தயாரானபோது, அவரைச் சந்திப்பதற்காக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வேகமாகச் சென்றதாகவும், அப்போது மூடியிருந்த கண்ணாடி கதவை கவனிக்காமல் அதில் மோதியதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அவரது முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் விஜய் மீண்டும் பங்களாவுக்குள் வந்து புஸ்ஸி ஆனந்தின் உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் முதலுதவி பெற்ற பின்னர், புதுச்சேரிக்குச் சென்று அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றதாகவும், இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புஸ்ஸி ஆனந்திடம் முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், புதிய பங்களாவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து சிலர் ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼