தவலை தோசை செய்வது எப்படி?

By தேஜஸ்

தவலை தோசை - இது புரதசத்து மிக்க தோசை.

தேவையானவை:

1. அரிசி
2. துவரம் பருப்பு
3. கடலைப் பருப்பு
4. உளுத்தம் பருப்பு
5. சீரகம்
6. மிளகு
7. உப்பு
8. பெருங்காயம்
செய்முறை:
1. மேலே உப்பைத் தவிர மற்றவற்றை மிஷினில் கொடுத்து ரவை போல் நன்றாக உடைத்துக் கொள்ளவும்.

2. இப்போது அவ்வாறு நன்கு ரவை போல உடைத்துக் கொண்டவற்றை ஒரு ஆழாக்கு சரியாக அளந்து ஒரு பாத்திரத்தில் போடவும்.

3. அத்துடன் அதே பாத்திரத்தில் அரை ஆளாக்குப் புளிப்பு மோர், 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல், பெருங்காயம் ஒரு சிட்டிகை, கருவேப்பில்லை (தேவையான அளவு அல்லது சில இலைகள்), இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் ஆகிய இவற்றை நன்கு கரைத்து வைத்து இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். இப்போது பார்ப்பதற்கு மாவு போல இருக்கும்.

4. சுவை பிரியர்கள் தேவைப் பட்டால் வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.

5. இப்போது ஒரு குழிவான வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அது காய்ந்த மாத்திரத்தில் நீங்கள் கரைத்து வைத்திருக்கும் மாவை இரண்டு கரண்டி ஊற்றி ஒரு மூடி கொண்டு வாணலியை மூடி வைக்கவும்.

6. ஐந்து நிமிடங்கள் கழித்து மூடியை நீக்கித் தோசையை திருப்பிப் போட்டு இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மறுபடியும் மூடவும்.
7. இப்போது இரு பக்கமும் சிறிது சிவக்க வெந்தவுடன் எடுக்கவும். இதோ இப்போது சுவையான தவலை தோசை தயார். மிச்சம் இருக்கும் மாவையும் பிறகு இதே போல பயன்படுத்திக் கொள்ளவும். இப்படியாக இரண்டு நபருக்கு இரண்டு அல்லது மூன்று முறைகளுக்குத் தவலை தோசையை தயாரிக்கலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE