தேங்காய் சட்னி செய்வது எப்படி?

By தேஜஸ்

சில இடங்களில் தேங்காய் சட்னி அவ்வளவு ருசியாகவும் மணமாகவும் இருக்கும். நம் வீட்டில் செய்யும் போது அப்படி வரவில்லையே என்று யோசிப்போம்.

சாதாரணமாக சிம்பிளாக செய்யும் தேங்காய் சட்னி. அதே பொருட்களை தான் நாமும் சேர்க்கிறோம். ஏன் சுவையில் வேறுபாடு?

தேங்காய் பிரஷ்ஷாக இருக்க வேண்டும். சிலர் ஃப்ரிட்ஜில் வைத்து பல நாட்கள் கழித்து பயன்படுத்துவார்கள்.
தேங்காய் ரொம்ப முற்றலாகவோ ரொம்ப இளசாகவோ இருக்கக் கூடாது. சரியான பதத்தில் இருக்க வேண்டும்.

பொட்டுக்கடலை மொறு மொறுப்பாக இருக்க வேண்டும் பதத்துப் போய் இருக்கக் கூடாது. பொட்டுக்கடலையை கிலோ கணக்கில் நீண்ட நாட்கள் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பதை விட அவ்வப்போது தேவைக்கேற்ப நல்ல தரமான பொட்டுக்கடலையாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சில கடைகளில் அவர்களே டப்பாவில் நமுத்து போன பொட்டுக்கடலை தான் வைத்திருப்பார்கள்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் 100 கிராம் பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள். பயன்படுத்திய பிறகு மீதம் உள்ளதை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து விடுங்கள்.

தேங்காய் சட்னிக்கு பயன்படுத்தும் பச்சை மிளகாயை சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கி விட்டு அதில் சட்னி செய்து பாருங்கள். 4 மிளகாய் போடும் இடத்தில் 2 மிளகாய் போட்டாலே காரமும் வாசமும் ஆளைத் தூக்கும்.
சிலர் மிளகு சேர்ப்பார்கள். சிலர் சிறிய துண்டு இஞ்சி சேர்ப்பார்கள். சிலர் ஒரு சின்ன வெங்காயம் அல்லது இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைப்பார்கள்.

பச்சை மிளகாயை எண்ணெயில் வறுக்கும் போது அதில் இரண்டு பல் பூண்டு ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து அரைத்துப் பாருங்கள்.

தேங்காய் சட்னியை பிரஷ்ஷாக சாப்பிட்டால் மட்டும்தான் சிறப்பாக இருக்கும். என்னதான் ஃப்ரிட்ஜில் வைத்து கெடாமல் இருந்தாலும் சுவை மாறிவிடும்.

கெட்டி சட்னி என்றால் கொஞ்சம் கொரகொரப்பாகவும் தண்ணி சட்னி என்றால் மையவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
தேங்காய் சட்னியில் உப்பு காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் தான் சுவை.

பச்சை மிளகாய்க்கு பதிலாக வர மிளகாய் சேர்த்து அரைத்தால் அது ஒரு தனி சுவை.
நிறைய தேங்காய் சிறிதளவு பொட்டுக்கடலை 4 பல் பூண்டு வர மிளகாய் உப்பு துளியூண்டு புளி சேர்த்து அம்மியில் துவையல் போல அரைத்தால் அது கட்டு சாதங்களுக்கு நல்ல காம்பினேஷன்.

தேங்காய் சட்னிக்கு பொட்டுக்கடலை இரண்டு ஸ்பூன் போடுகிறீர்கள் என்றால் ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து அரைத்தாலும் நன்றாக இருக்கும். உடலுக்கும் சத்து.

நம்மில் சிலர் தேங்காய் சட்னி என்றாலே தேங்காய் கொழுப்பு என்று தவிர்க்கிறோம். தேங்காயில் இருப்பது நல்ல கொழுப்பு. சரியான விகிதத்தில் தேங்காயை சமையலுக்கு பயன்படுத்துவது உடலுக்கு நன்மை பயக்கும்.
நெஞ்சு எரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரத்தில் தேங்காய் சட்னியை தவிர்க்கலாம்.

உடல் நலக் கோளாறுகள் உள்ளவர்கள் தேங்காயை குறைத்து பொட்டுக்கடலையை அதிகமாக சேர்த்தும் சட்னி அரைக்கலாம். அதுவும் நன்றாகவே இருக்கும்.

சில ஹோட்டல்களில் வெள்ளை வெளேர் என்று கெட்டியாக தேங்காய் சட்னி கிடைக்கும். அதற்கு தேங்காயை துருவி எடுக்காமல் சில்லாக கீறிக் கொள்ளுங்கள். தேங்காயின் அடிப்பாகத்தில் இருக்கும் பிரவுன் பகுதியை முழுவதுமாக சீவி நீக்கி விடுங்கள். இஞ்சி பூண்டு எதுவும் சேர்க்காமல் சிறிதளவு பொட்டுக்கடலை ஒன்றிரண்டு பச்சை மிளகாய் (பொட்டுக்கடலை பச்சை மிளகாய் இரண்டும் மிகவும் குறைவாக சேர்க்க வேண்டும்)மட்டும் சேர்த்து கெட்டியாக அரைத்தால் ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையுடன் சட்னி கிடைக்கும்.

தேங்காய் சட்னியை தாளித்தால் தான் சிறப்பு. தாளிக்கும் போது வரமிளகாய் போடுவதெல்லாம் சரியான முறை அல்ல. கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை தாளித்து சட்னியின் மீது கொட்டி விடவும். எண்ணெய் சுத்தமாக சேர்க்கக்கூடாது என்றால் தாளிக்காமல் தேங்காய் சட்னி பயன்படுத்தலாம்.

நம்ம ஊரு இட்லி தேங்காய் சட்னி, சாம்பார் இதுவே ஆரோக்கியமான சரிவிகித உணவு தான். அதை சரியான பக்குவத்தில் அதிக எண்ணெய் இல்லாமல் வீட்டிலேயே சமைத்து அளவோடு சாப்பிட்டால் இதைவிட சிறந்த டயட் ஃபுட் எதுவும் இல்லை.

~மகிழா.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE