ZOO (மிருகக்காட்சி சாலை)

By News Room

1962ம் ஆண்டு Bert Haanstra இயக்கிய நெதர்லாந்து நாட்டு குறும்படம் இது. இது மேலோட்டமாகப் பார்க்கும் போது விலங்குகளின் சரணாலயம் பற்றியத் திரைப்படம். அங்கிருக்கும் வகைவகையான விலங்குகள், அவைகளின் முகத் தோற்றங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் வெளிப்படும் வியக்கவைக்கும் உணர்ச்சி மாறுபாடுகள் முதலியவற்றை வெவ்வேறு கோணங்களில் தொலைவுகளில் படமாக்கப்பட்ட படப்பிடிப்புகள். 

முற்றிலும் பொழுது போக்காக விலங்குகளை பார்க்க வந்த பார்வையாளர்கள், மனிதர்களைப் படமாக்கியுள்ள முறை,  ஆண்கள், பெண்கள், இளையவர், முதியவர், குழந்தைகள் ஆகிய பல்வேறு கட்டங்களிலான மனிதர்கள், மனித மனங்கள், ஆட்டம் பாட்டம், வேடிக்கை விளையாட்டு, ஆர்வம், களைப்பு, ஓய்வு, களிப்பு, உணவு கொரிப்பு, ஒருவருக்கொருவர் அறிமுகம், உதவி ஆகியவற்றில் ஆழ்ந்து போனவர்கள், பார்க்க வந்ததையே மறந்து போனார்களோ எனும்படி தங்களுக்குள்ளாகவே சிந்தனையில் மூழ்கிப் போனவர்கள். ஓய்ந்துபோய் தனிமையை நாடிப்போனவர்கள், மீண்டும் தேவையான, தேவையற்ற - சரியான, சரியற்ற கோணங்களில், தொலைவுகளில் - நிலைகளின் படக்காட்சிகள் இக்குறும்படம் முடிவதற்குள் நம்முள்ளே மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடே முழுவதுமாக மறந்து போய்விடுகிறது. 

முகங்கள், பாவங்கள், உணர்வு வெளிப்பாடுகள், தோற்றங்கள், இருப்புகள் ஆகியவற்றின் மகத்தான படைப்பின் மகத்துவத்தையே அச்சிறு நிலப்பரப்பிற்குள் நாம் கண்டு கொள்கிறோம். எல்லாவற்றையும் மறந்து உயிர்ப்புள்ள பரிணாமத்தின், உயிர்களின் படிம வளர்ச்சியின் பிரம்மாண்டத்தை கண்டு வியந்து போகிறோம். விலங்கு - பறவைகள் - மனித இனங்களின் கற்பனையையே மறக்க வைத்து உயிரினம் என்ற ஒன்றையே கண்முன் காட்டும் திரைப்படம் இது.

ஒரு குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட பின்னணியில் மனிதர்களின் நடவடிக்கை போக்குகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை நேரில் சோதித்துப் பார்க்கும் முயற்சியே இக்குறும்படத்திற்கான அடிப்படை. இது ஒரு புதிய பரிமாணம்.

.
மேலும்