நரகத்தில் இரண்டு அரை நேரம்

By News Room

Zoltán Fábri என்ற உலகப் புகழ்பெற்ற ஹங்கேரிய திரைப்பட இயக்குநர் இயக்கியப் படம் தான் இது. இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த நேரம். 1944-ல் ஒரு போர்க்கைதிகளின் முகாம். கடுமையான உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டு, இரவில் நெருக்கமான கொட்டடிகளில் அடைபட்டு, அன்றாட உணவுக்காகத் தவித்து, உயிரைக் காத்துக்கொண்டிருக்கும் கைதிகள் அடிமைகளாக இருக்கிறார்கள். பயமற்று வாழ, எல்லோரையும் போல் இயல்பாக வாழ்ந்து தத்தம் குடும்பங்களுக்குத் திரும்பவும், நிரந்தரமாக வளைந்து போயிருக்கும் தம் முதுகுகளை ஒருமுறையாவது நிமிர்த்தி நடக்க ஆசைகளை சுமந்தவர்கள்.

ஒரு நாள் இந்த முகாமைச் சேர்ந்த கைதி டயோ என்பவனுக்கு மேஜரிடமிருந்து அழைப்பு வருகிறது. (டயோ முன்பு கால்பந்து வீரனாக அதுவும் ஒலிம்பிக் சாம்பியனாகவும் இருந்தவன்) அவனிடம் கைதிகளின் கால்பந்தாட்டக் குழுவொன்றை உருவாக்கும்படி மேஜர் ஆணையிடுகிறார். இது மேஜரின் பெருந்தன்மையால் அல்ல. ஹிட்லரின் பிறந்த நாள் வருகிறது. அதற்காக ஜெர்மன் வீரர்கள் குழுவுக்கும் - ஹங்கேரிய போர்க் கைதிகள் குழுவுக்கும் இடையே ஒரு போட்டியை ஏற்பாடு செய்வதற்காகத்தான் இத்தனையும்.

இப்படிப்பட்ட எதிர்பாராத ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன், அணைந்து கொண்டிருந்த டயோவின் வாழும் ஆசை மீண்டும் பற்றி எரியத் தொடங்கியது. கால்பந்தாட்டக் குழுவை உருவாக்க ஒப்புக்கொண்டான். பயிற்சியின் போது அவர்களுக்கு நல்ல உணவும், ஓய்வும் கிடைத்தது. அதற்கு ஆசைப்பட்டு எல்லா கைதிகளும் தங்களையும் குழுவில் சேர்க்கச் சொல்லி தொல்லைக் கொடுத்தனர். எல்லாவற்றையும் மீறி பயிற்சி தொடங்கியது. அப்போது சில கைதிகள் தப்பிச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் பிடிபட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் போட்டி நாள் நெருங்கியதால் போட்டியை நடத்த அவர்கள் தேவை. ஆகவே தண்டனை ஒத்திப்போடப்பட்டது. ஆனால் கைதிகள் ஆடத் தயாராக இல்லை. 

மேஜருக்கு சங்கடமாகிவிட்டது. பிறகு ஒரு தந்திரம் செய்கிறார். கைதிகள் குழு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் உங்களுக்கு விடுதலை என்று அறிவித்தார்.  கைதிகளும் உற்சாகமாக போட்டியில் களமிறங்கினர். 

உண்டு கொழுத்த ஜெர்மானிய ராணுவ வீரர்கள் குழு ஒருபுறம் - பசியால் வாடி, கிழிந்த ஆடைகளுடன் கைதிகள் குழு மறுபுறம். ஜெர்மன் அதிகாரி தன் காதலியுடன் போட்டியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெர்மன் 3 கோல்களும் கைதிகள் குழு ஒரு கோலும் போடுகின்றனர். இடைவேளையின் போது ஹங்கேரிய கமாண்டர் சொல்கிறான் நாம் வெற்றி பெற்றுவிட்டால் தப்பித்துவிடலாம், ஆகவே இரண்டாவது பாதியில் எப்படியாவது அதிக கோல்கள் போட்டு நாம் வெற்றி பெறவேண்டும் என்கிறான். இரண்டாவது பாதியில் கைதிகள் குழு 3 கோல்கள் போட்டு போட்டியில் வெற்றிபெற்றுவிடுகிறார்கள்.

ஆனால், அதன் விளைவாக போட்டியிலேயே அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

இந்தக் கதை பின்னாளில் "எஸ்கேப் டு விக்டரி" என்ற பெயரில் 1981ல் படமாக்கப்பட்டது. ஆனால் முடிவு சுபம். இந்தப் படத்தில் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே நடித்திருந்தார்.

.
மேலும்