சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த தினம்

By News Room

தமிழ்த் திரையுலக வரலாற்றில் இசையோடு நடிப்பிலும் ஆற்றல் பெற்றவராக விளங்கியவர்கள் பலர்.

அவர்களில் இலக்கியச் செறிவுள்ள பாடல்களைப் பாடி தன்னுடைய ‘கணீர்’ காந்தக்குரலால் ரசிகர்களைக் கவர்ந்த சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்களின் நினைவலைகளைக் காண்போம்.

சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முதல் பாடல் 1953-ல் வெளிவந்த பொன்வயல் படத்தில். இதில் சிரிப்புதான் வருகுதய்யா’ என்ற பாடலைப் பாடி தமிழ் ரசிகர்களின் காதுகளில் தென்றலாய் நுழைந்தார் அவர். இதே படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘ஜல்திஜல்தி மாடுகளா’ பாடலும் ரசிகர்களின் இதயக் கதவுகளை திறந்த முழுமையைப் பெற்றது.

பக்தி, தத்துவம், வீரம், நகைச்சுவை, காதல் என பலவகையான பாடல்களை உணர்ச்சி ததும்பப் பாடி பிரபலமாக்கினார் எஸ். கோவிந்தராஜன். நகைச்சுவைக்கு ‘காதலிக்க நேரமில்லை’, சோகத்திற்கு ‘ஆடி அடங்கும் வாழ்க்கையாடா’, சவாலுக்கு ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா’ மற்றும் ‘சங்கே முழங்கு’, பக்திக்கு ‘அறுபடை வீடுகொண்ட திருமுருகா’, தத்துவத்திற்கு ‘காசிக்குப் போகும் சன்யாசி’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ போன்ற பாடல்கள் அவரது குரலில் சரித்திரப்புகழ் பெற்றவை.

தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர்களாத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவருக்கும் பல திரைப்படப் பாடல்களைப் பாடி ‘சூப்பர்ஹிட்’ ஆக்கியவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக நாடாடி மன்னன் படத்தில் அவர் பாடிய ‘உழைப்பதிலா இன்பம் உழைப்பைப் பெறுவதிலா’ , சக்கரவர்த்தி திருமகள் ‘எல்லையில்லாத இன்பத்தில்’ , நல்லவன் வாழ்வான் படத்திற்காக ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ ஆகியவை ரசிகர்களின் காதுகளில் என்றும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.

பாகப்பிரிவினை படத்தில் ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே’, படிக்காத மேதையில் ‘எங்கிருந்தோ வந்தான்’ என அவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாகும். ஆனாலும் சீர்காழி கோவிந்தராஜனின் ‘கணீர்’ வெண்கலக் குரலில் அவர் பாடிய பக்திப் பாடல்கள் ரசிகர்களின் இதயங்களில் கோயில் தெய்வமாக அவரை குடியிருக்க வைத்துள்ளன.

அவர் பாடிய பக்திப்பாடல்கள் இன்றளவும் கோயில்களிலும் திருவிழாக்களிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.இசையோடு நடிப்பிலும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன்.

அகத்தியர் திரைப்படத்தில் அகத்தியராகவும் , கந்தன் கருணை தசாவதாரத்தில் நாரதராகவும் , ‘வா ராஜா வா’வில் போலீஸ்காரராகவும் , திருமலை தென்குமரியில் பாகவதாராகவும் நடித்தும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

பாடல்களில் பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே தன்னிகரில்லாத இடம் பிடித்தவர் சீர்காழி எஸ், கோவிந்தராஜன் என்றால் அது மிகையில்லை.

.
மேலும்