'பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா...’

By News Room

காதலை விதவிதமாகச் சொல்லியிருக்கிறது தமிழ் சினிமா. சொல்லாத காதல், பேசாத காதல், பார்க்காத காதல், ஒரு தலைக்காதல் என காதலின் சந்து பொந்துக்குள் நுழைந்து கதைச் சொல்லி இருக்கிறார்கள் நம் இயக்குநர்கள். அப்படி வெளியான பல காதல் படங்களை, ரசிகர்கள் தங்கள் மனதோடு பாதுகாத்து வைத்திருக்கிறார்கள், நினைத்து ரசிக்கவும், ரசித்து நினைக்கவும். அப்படியொரு படம்தான் ‘இதயம்’.

சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் முரளி. தாழ்வு மனப்பான்மை, கூச்ச சுபாவம், பேசவே பயங்கொள்ளும் அவருக்கு, உடன் படிக்கும் ஹீரா மீது வருகிறது, காதல். ஆனால், அவரிடம் காதலைச் சொல்ல தைரியமில்லை. அதற்கான முயற்சிகளும் வீணாகிவிடுகின்றன. ஒரு கட்டத்தில் தன்னை முரளி காதலிக்கிறார் என்று ஹீரா உணரும்போது அவருக்கு இதயநோய். மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ அவரால் தாங்க முடியாது என்ற நிலையில் காதலை வெளிப்படுத்த முடியாமல் கண்ணீர் விடுவார் ஹீரா. கதையாக இது இவ்வளவுதான். ஆனால், திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியையும் கவிதையாகச் செதுக்கியிருப்பார் இயக்குநராக அறிமுகமான, கதிர்.

90-களில் பெண்களிடம் பேசுவதையே பெருங்குற்றமாகப் பார்த்த கிராமங்கள் அதிகம். காதலுக்காக ஏங்கிய,காதலைச் சொல்ல முடியாமல் தடுமாறித் தவித்த பல முரளிகளின் உருவமாக அதில் தெரிந்தார் முரளி. கதாநாயகியாக அறிமுகமான ஹீரா, முதல் படத்திலேயே ரசிகர்களின் மனங்களை அள்ளிக் கொண்டார்.

கூலிங்கிளாஸ் அணிந்து குளோசப்பில் இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட அவர் புகைப்படம் அப்போது பிரபலம். அப்பர் மிடில் கிளாஸ் சென்னைப் பெண்ணின் தோற்றத்தை அவர் அணிந்து வரும் காட்டன் புடவையும் காதலைச் சுமந்துகொண்டிருக்கும் கூந்தலின் ஒற்றை ரோஜாவும் ஆர்ப்பட்டமில்லாத அழகும், நம்பும்படியாகவே காட்டின.

அந்தப் படத்தின் வெற்றிக்கு இந்த ஜோடி பொருத்தமும் ஒரு காரணம். உணர்வைத் தொட்டுச் செல்லும் ஒரு திரைப்படம் செய்ய வேண்டியதும் அதுதானே. அந்தக் காதலுக்கும் காதல் ஏக்கங்கொண்ட மனங்களுக்கும் இளையராஜாவின் பாடல்களும், பூஸ்ட்.

குறைவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, வாலியின்வரிகளில் வரும் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’, ‘பூங்கொடிதான் பூத்ததம்மா’, ‘ஏப்ரல் மேயிலே...’, ‘ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்’ , பிறைசூடன் வரிகளில் ‘இதயமே இதயமே...’ ஆகிய பாடல்கள் அப்போதைய இளசுகளுக்கு மனப்பாடம். அதிலும் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வும் ‘இதயமே இதயமே’ வும் காதலர்களின் காவிய கானம்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் சின்னி ஜெயந்த், முரளியின் நண்பராக நடித்திருப்பார். ஜனகராஜ், மனோரமா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ‘ஏப்ரல் மேயிலே...’ பாடலில்தான் முதன்மை நடனக்கலைஞராக அறிமுகமானார் பிரபுதேவா.

1991-ம் ஆண்டு வெளியான இந்த காதல்‘இதயம்’, இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது உயிர்ப்போடு!

இந்தப் படத்தின் அனுபவம் பற்றி இயக்குநர் கதிரிடம் கூறியதாவது.

“சத்யஜோதி பிலிம்ஸ் படங்களுக்கு நான் டிசைனராக பணியாற்றிவிட்டு, பிறகு உதவி இயக்குநர் ஆகி கதை சொன்னேன். தயாரிப்பாளர் தியாகராஜன் சாருக்கு பிடித்திருந்தது. அட்வான்ஸ் கொடுத்தார். கதைக்குப் பொருத்தமான நடிகர்கள் கிடைக்காததால் ஒன்றரை வருடம் தாமதமானது. பிறகு ‘டைரக்‌ஷன் வாய்ப்பு கிடைக்காது, பழையபடி டிசைனர் வேலைக்கு போயிடலாம்’ என்று தியாகராஜன் சாரை பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும் ‘இந்தக் கதைக்கு முரளி எப்படியிருக்கும்?’னு கேட்டார். ‘நல்லாயிருக்கும்’னு சொன்னேன். உடனே அவருக்கு போன் பண்ணி, ‘ஒரு புது பையனை அனுப்பறேன், இந்தக் கதைய கேளுங்க’னு சொன்னார். நான் போய் கதைச் சொன்னேன். கேட்டதுமே, நடிக்கிறேன்னு சொன்னார் முரளி. அப்படித்தான் படம் தொடங்குச்சு. ஹீரோயினா நடிக்க வைக்கச் சிலரை முயற்சிப் பண்ணினோம். கால்ஷீட் பிரச்சினை இருந்தது. அதனால புது முகத்தை நடிக்க வைக்கலாம்னு நினைச்சோம். காதிகிராப்ஃட் விளம்பரத்துல ஹீரா நடிச்சிருந்தாங்க. என் ஃபிரண்ட் விளம்பர நிறுவனம் நடத்தினார். அவர் மூலமா ஹீராவை கண்டுபிடிச்சு நடிக்க கேட்டோம். முதல்ல சம்மதிக்கலை. பிறகு சம்மதிக்க வச்சோம். இவ்வளவு வருஷம் ஆனாலும் இந்தப் படத்தை பற்றி அடிக்கடி யாராவது, எங்கயாவது பேசிட்டிருக்கிறதே பெரும் மகிழ்ச்சியா இருக்கு. அந்த மகிழ்ச்சி, ‘இதயம்’ நினைவுகளை இதயப்பூர்வமா எனக்குள்ள பத்திரப்படுத்திக்கிட்டே இருக்கு”- நெகிழ்கிறார் இயக்குநர் கதிர்.

.
மேலும்