பழம்பெரும் நடிகர் கே பாலாஜி

By News Room

அவர் நடிகர்தான். ஆனால், எல்லோருக்கும் அவரைத் தெரியும். ஆனாலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் அவருக்கு இல்லை. அதேசமயம், அவர் தயாரித்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருந்ததால், பிரமாண்டமாக இருந்ததால், பிரமாதமாக இருந்ததால், எல்லோரும் அவர் தயாரித்த படங்களின் ரசிகர்களாக இருந்தார்கள். இன்றைக்கும் அவரின் படங்களுக்கு, அப்படியொரு ரசிகர்கூட்டம் இருக்கிறது. அவர், நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி.படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பின்னர், ஜெமினி கணேசனை வைத்து ‘மணமுள்ள மறுதாரம்’ என்ற படத்தைத் தயாரித்தார். அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பதில் முனைந்தார். சிவாஜிக்கு சினிமாவுக்குள்ளேயும் மிக முக்கிய ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பார்கள். அவர்களில் கே.பாலாஜியும் ஒருவர். சொல்லப்போனால், சிவாஜியின் நல்ல நண்பரும் கூட! அதேபோல், நாகேஷின் இனிய நண்பர். ஆரம்பகட்டத்தில், நாகேஷை தன் வீட்டில் ஒரு அறையில் தங்கவைத்து எல்லா உதவிகளையும் செய்தவர். இதை பல மேடைகளில் நன்றியுடன் சொல்லியிருக்கிறார் நாகேஷ்.
எங்கிருந்தோ வந்தாள்’, ‘நீதி, ‘என் மகன்’, ’தீபம்’, ‘தியாகம்’ என்று வரிசையாக படங்களை எடுத்தார். வேற்றுமொழிகளில் வந்த சிறந்த கதையம்சம் உள்ள படங்களை ரீமேக் செய்தார். கமலை வைத்தும் ரஜினியை வைத்தும் பல நல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். மோகன், பூர்ணிமா பாக்யராஜை வைத்து, இவர் எடுத்த ‘விதி’ படம் மிகப்பெரிய ரிக்கார்டை ஏற்படுத்தியது. ரஜினிக்கு மார்க்கெட் வேல்யூவை தூக்கி உயரத்தில் வைத்த படமாக ‘பில்லா’ படம் அமைந்தது. சிவாஜியை வைத்து மட்டுமே ‘சுஜாதா சினி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், ‘சுரேஷ் ஆர்ட்ஸ்’ பேனரில் 18க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார் கே.பாலாஜி.

படத்தை ஆரம்பிக்கும் போதே ரிலீஸ் தேதியையும் முடிவு செய்து அதை நோக்கி படக்குழுவினர் செல்ல வழிவகைகள் செய்து தருவதில் கில்லாடி தயாரிப்பாளர் இவர் என்கிறார்கள். ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜியின் திருமண நாள். எனவே அந்தநாளில், படம் ரிலீஸ் செய்யவேண்டும் என விரும்பினார். இவரின் முக்கால்வாசி படங்கள், ஜனவரி 26ம் தேதியன்று வெளியானவை. சுஜாதா சினி ஆர்ட்ஸ் லோகோ வந்தாலும் கம்பீரமான சுழற்நாற்காலியில் இருந்து திரும்பி சிரிப்பார் கே.பாலாஜி. ‘அட... பாலாஜி படமா... அப்போ பிரமாதமா இருக்கும்யா’ என்று நம்பிக்கையுடன் படம் பார்த்தார்கள் ரசிகர்கள். அப்படியொரு பேரைச் சம்பாதித்த தயாரிப்பாளர்களில் பாலாஜியும் ஒருவர்.
சங்கர் கணேஷ், இளையராஜா என்று பலரைக் கொண்டும் இசையமைக்கச் செய்தார். இவரின் ‘வாழ்வேமாயம்’, ‘சட்டம்’ படங்களுக்கு இசை கங்கை அமரன் என்பதும் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது என்பதும் எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாதது.

சம்பள பாக்கி வைக்காதவர், யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் யார் மனமும் நோகாமல் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியைக் கொண்டாடுகின்றனர் திரையுலகினர்.

1934ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிறந்த கே.பாலாஜி, 2009ம் ஆண்டு மே 2ம் தேதி இறந்தார்.

‘நல்ல சினிமாக்களைத் தயாரிப்பதற்கு பணமோ காசோ முக்கியமில்லை. முக்கியமாக, தயாரிப்பாளர் நல்ல ரசிகராக இருக்கவேண்டும். பாலாஜி அப்படிப்பட்ட ரசிகர்’ என்கிறார்கள் அவரை நன்கு அறிந்த திரையுலகினர்.

.
மேலும்